Wednesday, April 5, 2017

வண்ணக்கடல் பற்றி





மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு
   
  நீங்கள் நலம் தானே. இப்போது தான் வண்ணக்கடல் படித்து முடித்தேன். கடைசி 200 பக்கங்களை மட்டும் ஒரே நாளில் படித்து முடித்தேன்.அந்த பக்கங்களில் என்னையே கண்டுகொண்டது போன்ற ஒரு விசை என்னை கதைக்குள் இட்டு சென்றது. தனக்கான ஒரு ஆசிரியரை கண்டடைய ,கர்ணன், ஏகலவ்யன் ஆகிய இருவரின் பாதை என் நேஞ்சை  வாட்டியது.நான் பல முறை ஏகலவ்யனின் கதையை படித்தும் ,பார்த்தும் இருக்கிறேன். ஆனால் உங்கள் மொழியில் நான் அவன் குரு காணிக்கை அளிக்கும் தருணத்தை படிக்கும் போது அப்படியே உடல் புல்லரித்து விட்டது அப்படியே சிறிது நேரம் அமர்ந்து விட்டேன் அதற்க்கு மேல் கதைக்குள் செல்ல ஒரு அரைமணிநேரம் ஆகியது. அந்த காட்சி தந்த உவகை இன்னும் என் நேஞ்சில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

ஒரு குருவை தேடி அலையும் அவர்களின் நிலை என்னுடைய தேடல் போலவே உணர்கிறேன்.உங்கள் எழுத்துக்களையே எனக்கான ஒரு தேடல், ஞான உபதேசம் ஆக கருதுகிறேன். உங்களையே என்னுடைய குருவாகவும் கருதுகிறேன். அவர்களின் தேடல் என்னை இதனால் தான் மிக அதிகமாக பாதித்ததா என்று தெரியவில்லை

   பின் துரோணரின் வன்மம் ,புத்திர பாசத்திற்காக அவர் செய்யும் செயல்கள் ,தன் தந்தையிடம் இருந்து அவருக்கு கிடைக்காத அந்த ஒரு பரிவு ,பாசம் ,தன் மகன் மேல் நூறு மடங்காக அதிகரித்து அவன் மேல் புரிகிறார்

    பின் பார்த்தன் அவன் கொள்ளும் பொறாமை எந்த சீடனும் தன் குரு மேல் அளவு கடந்த அன்பால் செய்யும் செயல்கள் தான்.தன் குருவை பிற ஒருவன் தீண்டுவதையோ ,அவர் அவர்களை தீண்டுவதையோ அவன் வெறுக்கிறேன்.பிற்காலத்தில் நடக்க இருக்கும் போருக்காக அத்தனை வன்மமும் ,பொறாமையும் ,அவமதிப்பும் இங்கு நடந்து  வளர்கிறது.அந்த பாரத போருக்கான செடிகள் நன்றாக தண்ணீர் விட்டு வளர்ந்து வருகிறது.

  பீமன்  துரியோதனன்  இருவர் இடையே இருக்கும்  அந்த தீரா நட்பு  படிபடியாக வன்மையும் குரோதமாக மாறுகிறதை என்பது மிக அழகாக எடுத்து சென்றீர்கள் .

   இளநாகன் வழியாக எப்படி அரசுகள் இங்கு தோன்றி அழிந்தது,அரசியல் விளையாட்டு  என்பதை வரலாற்று பார்வையில் சொன்னீர்கள் .இந்திய நிலம் முழுக்க அவன் மேற் கொண்டு  பயணம்   வழியாக இந்திய நிலங்களை மிக நேர்த்தியாகவும் ,நுணுக்கமாகவும்  சொல்லி இருந்ததீர்கள்.உங்கள் வெண்முரசு வழியாகவே ஒரு வரலாற்று தரிசனம்  கிடைக்கிறது என்று கூட சொல்லலாம்.

   மகாபாரதத்தை என்றும் மிக விரிவாக படிக்க வேண்டும் என்ற ஒன்று எனக்கு எப்போதும் இருக்கும் ஒரு அவா உங்கள் மூலம் அது இடைக்கிறது. வண்ணக்கடல் வழியாக எனக்கு குரு மாணவன உறவை பற்றி  ஒரு தெளிவை தந்தீர்கள். பீமன் தன் சகோதரர் முன் ஒரு சூதன் நின்று எதிர்ப்பதை வெறுக்கிறான் சூதனை இழிவு படுத்துகிறான் ஆனால் தன் குருவாக ஒரு சமையல் செய்யும் சூதனை வணங்குகிறேன் அவர் கால் அடியில் கிடக்கிறான்.ஒருவனுக்கு தன் குருவாக கருதும் ஒருவன் யார் ,எக்குலத்தவன் என்பதல்லாம் முக்கியம் அல்ல அவன் அவரை குருவாக கருதுவான் என்றால் அது ஏதும் தடை இல்லை

    ஒரு குருவானவர் தன்னிடம்  வரும் மாணவர் அனைவரையும் தன் சீடனாக எர்ப்பார என்று தேறியாது,ஆனால் தன் உள்ளத்தில் அவரை  குருவை அமைத்த ஒருவன் அவன் உள்ளத்தில் என்றும் நிறைந்து இருக்கிறான் இதை ஏகலவ்யன் வழியாக நான் கண்டது .


               நன்றி 
        இப்படிக்கு ,

,
பா.சுகதேவ் 
மேட்டூர்


அன்புள்ள சுகதேவ்,

ஆசிரியர்களை எளிதில் முடிவுசெய்யக்கூடாது. உணர்வுபூர்வமாக அணுகுவதும் கூடாது. பொதுவாக எழுத்து என்பது எழுத்தாளர்களின் உச்சநிலை. அங்கிருந்து அவர்களை அணுகுவது சரியல்ல. எழுத்தை ஒரு தனியுலகமாக எண்ணி அதன் போக்கை, விதிகளை அறியமுயல்க. வெண்முரசு அதற்குள் ஒரு தனியுலகு

உங்கள் தேடலுக்கும் இயல்புக்கும் ஏற்ற ஆசிரியர்கள் அமையட்டும்

ஜெ