Monday, April 24, 2017

ஆண் காமத்தின் உள்ளுறையும் தாழ்வுணர்ச்சி (மாமலர் 75- 77 )


   
ஆண்கள்  பெண்ணின் உடலழகைப்பார்த்து காமுறுகிறார்கள்.  ஆனால் அதற்கு  அழகு  மட்டும் போதுமானதுதானா?.   அழகான பெண் என்பதற்கான அளவீடுகள் பொதுவானவையாக உள்ளன. அந்த அளவீடுகளில் சிலருக்கு சற்றே ஏற்றம் இறக்கம் இருக்கலாம். ஆனாலும் அதிகம் மாறுபடுவதில்லை. நேர்த்தியான முகம் வடிவான உடல்,  ஆராக்கியமான தோற்றம் போன்றவற்றைவைத்துத்தான் நாம் அழகை மதிப்பிடுகிறோம். மற்ற கூறுகளான, நிறம்,  பாவனைகள்  போன்றவையினால் கூடும் அழகின் மதிப்பீடு  இடத்துக்கு இடம், இனத்திற்கு இனம், பண்பாட்டுக்கு பண்பாடு மாறுபடுகிறது.  பொதுவாக ஆண்களுக்கிடையே அழகைப்பற்றிய மதிப்பீடுகள் பெரிதாக மாறுவதில்லை. ஆகவே பெண்ணிடம் அழகைக் காண்பதில்  ஆணுக்கு ஆண் அவ்வளவாக வேறுபடுவதில்லை. 
   
ஆனால் ஒரு பெண்ணை அழகென  உணர்வது வேறு  அவள் மேல் காமம் கொள்வது வேறு.   ஒரு பெண் தான் பெண் என்பதலேயே ஒரு ஆணை தன்மேல் காமமுற வைக்கிறாள்.   ஆண்  அடை யும் காமத்தை மேலும் வளர்க்காமல்  தவிர்த்துக்கொள்ளுதல் அல்லது பெருக்கிக்கொள்ளுதல் அவன் சிந்தனை, மற்றும் சூழல் சார்ந்த்தது.   ஒரு பெண்மீதான விழைவை  தன்மேல் நீடித்திருக்கும்  காமமாக மாற்ற அவள் அழகு மட்டும்  போதாது  எனத் தோன்றுகிறது.  ஆணின் அகத்தை பெண்ணின் அகம் நன்கு அறிந்திருக்கிறது. அதற்கேற்ப அவள்  ஒரு நாடகத்தை தினமும் நடத்தியவண்ணம் இருந்து  அவனை தன் பிடியில் வைத்துக்கொள்கிறாள். இல்லையென்றால் அவன் எளிதில் மனம்  சலித்து அடுத்த மலர் தாவும் அற்பன் என்று அவளுக்கு தெரியும்.
    
ஆதியிலிருந்து ஆண் பெண்ணை போட்டிபோட்டு  வென்றெடுத்து கவர்ந்து வருபவன்.  ஆண் விலங்கின்  கீழ் பணிந்து   அதன் காவலில் இருப்பவள் பெண். இது பெரும்பாலான விலங்கினங்களில் நிகழ்வது.  இப்படி பெற்ற  ஆதி விலங்கு உளவியல் இன்றளவும் ஆண்களுக்கு இருக்கிறது.  ஒரு பெண் தன் காவலில் இருப்பதும் அவள் உணவு, பாதுகாப்பு  போன்ற தேவைகளுக்கு தன்னைச்  சார்ந்து இருப்பதும் அவனை ஆணெனென நிமிரச்செய்வது அவன் இரத்தத்தில் இன்னும் எச்சமென இருக்கும் விலங்குக் குணம்.     அப்படி தன்னை அவன் பொறுப்பில் விட்டுவிடும்  பெண் அவனை ஆண்மகனாக உணரச் செய்கிறாள்.  அப்படியிருக்கையில் அவள் மீது அவனுக்கு காமம் பெருகுகிறது. 
   
தன்னைவிட உயர் நிலையில் இருக்கும் ஒரு பெண்ணை அவன் வியப்பான், பாராட்டுவான், அவளுக்கு பணிந்துகூட நடப்பான்.  ஆனால் அவளிடம் காமம்கொள்வது மற்ற பெண்ணிடம்போல் அல்லாமல் குறைபடுகிறது என்றே நான் நினைக்கிறேன்.  அவளிடம் அவன் தாழ்வுணர்ச்சிகொள்கிறான்.  அது அவள் மேல் அவன்கொள்ளும்  காமஉணர்வை  பாதிக்கிறது.  அவன் தாழ்வுணர்ச்சியோடுதான் அவளை  அணுகுகிறான்.
   
ஆணின் இந்த தாழ்வுமணப்பான்மையை ஒரு பெண்ணின் ஆழ் மனது அறிந்திருக்கிறது. ஆகவே அவள் அதற்கான  பாவனைகளை மேற்கொள்கிறாள். அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு எல்லாம் அவள் ஆணின் இந்தத் தாழ்வுணர்வை எதிர்கொள்வதற்காக் கைக்கொண்டவையே. அவள் ஒன்றும் அறியாதவள் போன்று,  சிறு விஷயங்களுக்கூட அச்சப்படுபவளாக ஆணின் கரம் பற்றி பின்செல்பவளாக தன்னைக் காட்டிக்கொள்கிறாள்.  காரின் கதவைத் திறக்கக்கூட திறனற்றவளாக,  சாலையைக் கடக்க  அவன் உதவி நாடுபவளாக, சிறு தவறுகள் செய்து அவனால் திருத்தப்படுபவளாக தன்னை வைத்துக்கொள்கிறாள்.  ஆனால் அதே பெண் தனித்து வாழ வேண்டிய சூழல் வரும்போது எவ்வளவு மனத்திடத்தோடு, அறிவுக்கூர்மையோடு நடந்துகொள்கிறாள்  என்பதை நாம் காண்கிறோம்.  உண்மையில் தனித்து வாழ்வதற்கான மனத் திடமும் அறிவுத்திறனும் குறைந்தவன் ஆண்தான்.   ஆண் கால் தூக்கி ஆடி வென்றுவிட்டதாக தருக்கி நிற்க அப்படித்  தான் ஆட நாணப்பட்டு  தோற்று நிற்பவளாக காட்டிக்கொள்பவள் பெண்.   அவளுக்கு தெரியும் அப்படி அவனுக்கு அந்த வெற்றியை அளிக்காவிட்டால் அவன் தாழ்வுகொண்டு தன்னிடம் அஞ்சி விலகிவிடுவான் என்று.
    
வெண்முரசு ஆண் காமம் பற்றிய இந்த உளவியலை அருமையாக சித்தரிக்கிறது.  தேவயானி பேரழகி.  யாருக்கும் எட்ட முடியாத அழகாலும் ஆளுமையாலும் உயரத்தில் இருக்கும்  அவளை அடைந்திருக்கிறான்  யயாதி.  ஆனாலும் அவளிடம் காமம் பெருகவில்லை.  இதற்கு அவன் ஆணுள்ளம் கொண்டிருக்கும் இந்த உளவியல்தான் காரணம். அவள் அவனுக்கருகில் அரசியென அமர்வதை அவனுள்ளம் ஏற்கிறது.  ஆனால்  அவனுடன் தனித்திருக்கையில் அந்த அரசி என்ற தன்மையை, ஆளுமையை அவள் விட்டிறங்கி அவன் காப்பில் இருக்கும் அபலைப் பெண்ணென  இருப்பதை  அவன் ஆழ்மனம் நாடுகிறது.   அவள் அரசியென்ற நிலைவிட்டு எப்போதும் இறங்குவதில்லை என அவன் குறைபட்டுக்கொள்வதையே அவன் குளியலறையிலும் தன் கொண்டையை அவிழ்ப்பதில்லை என்று கூறுவதன் பொருளாகிறது.
 
யயாதி “அவள் குழலை சுருட்டி கொண்டையாக்கிக் கொண்டிருக்கிறாள். அவள் தோளில் ஒரு பெரிய முடிச்சு என அது அமைந்திருக்கிறது” என்றான். “அரசியர் குழல்நீட்டி அவையமரக்கூடாதென்பது மரபு” என்றான் பார்க்கவன். “ஆம், அவள் நீராட்டறையிலும் அரசியே” என்றான் யயாதி.
    
அவளின் நிமிர்வு அவன் தாழ்வுணர்வை அதிகரிக்கிறது.  ஒரு ஆணுக்கு பெண் தனித்து காரியமாற்றும் நிமிர்வைவிட  தன்னால் பாதுகாக்கப்படுபவளாக தன்னால் அரவணக்கப்படுபவளாக இருப்பதே பிடிக்கிறது. அப்போது அவளில் அவன் அதிக அழகை காண்கிறான். அது அவன் காமத்தைத்  தூண்டுவதாக இருக்கிறது.  அவன் கூறுகிறான்:    
அனைத்துக்கும் அடிப்படையாக நம் உள்ளம் அன்றாடமறியும் உண்மை ஒன்றுண்டு, நமக்குப் பிடித்தமானதன் பொருட்தோற்றமே அழகெனப்படும்.”
     
 
பேரழகென இருப்பது ஒருவரை  கவர வேண்டுமென்பதில்லை.  அப்படிப்பார்த்தால் ஒவ்வொரு நாளும் காலை ஞாயிறு எழும் நிகழ்வில்  கவரப்பட்டு சொல்லிழந்து நின்றுகொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு மலராலும் கவரப்பட்டு நேரம் அதை ரசிப்பதில் செலவிட்டிருக்கவேண்டும். அழகால்  கவரப்படுவதற்கு அழகு மட்டும் போதுமானதல்ல. அதற்கான மனநிலையும் ஒருவருக்கு  அமைந்திருக்க வேண்டும் .  யயாதி தேவயானியின் ஆளுமையின் முன் ஆணுக்கேயுரிய தாழ்வுணர்வைக்கொண்டதால் அவளின் அழகு அவனை கவராமல் அவனுக்கு சோர்வளிப்பதாக ஆகிவிட்டது. 
 
ஒவ்வொருமுறையும் தேவயானியை தனிமையில் சந்திப்பதற்கு முன் அந்தச் சோர்வு தன்மீது வந்து கவிவதை அவன் உணர்ந்திருந்தான். ஏறமுடியாத உயரமொன்றின் அருகே சென்று நின்றிருக்கும் மலைப்பை அவளை மணந்த முதல் நாட்களில் அறிந்திருந்தான். பின்னர் அதுவே சலிப்பென்று முகம் மாற்றிக்கொண்டது.
 
  அந்தச் சோர்வு சலிப்பாக மாறி தேவயானியிடமிருந்து விலக்கத்தை அவனுக்கு ஏற்படுத்திவிடுகிறது.  தேவயானி பேரரசை  ஆள்வதில் மூழ்கிவிட்டதால் தன் கணவனை  காமத்தில் ஆள்வதை கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டாள்.   மழை நீரை உயர்ந்தோங்கிய  மலை தன்னுள் தேக்கிகொள்ளாதபோது  அது கீழிறங்கி பள்ளத்தாக்கில் சேகரமாவதைப்போல யயாதியின் காமம் சர்மிஷ்டையைச் சென்று சேர்கிறது.  

“எனக்கு ஏன் சர்மிஷ்டைமேல் காதலெழுந்தது என்பதைப்பற்றி நீ வியந்துகொண்டதில்லையா?” என்று யயாதி கேட்டான்.
“அஸ்வாலாயனரின் காவியங்களில் பெருநதிகளின் மிடுக்கைவிட சிற்றோடைகளின் எளிமையே அழகென்று சொல்லப்பட்டுள்ளது.” அதை கேட்காதவன்போல யயாதி “பெண்களை நாம் விரும்புவது ஆடைகளை விரும்புவது போலத்தான்” என்றான். “அணிமிக்கதாயினும் பெருமதிப்புகொண்டதாயினும் நமக்குப் பொருத்தமான ஆடையே நம்மை கவர்கிறது.” “நல்ல ஆடை என்பது நம்மில் ஒரு பகுதியென்றாவது. நம்மை நாம் விழையும்படி காட்டுவது. நம் குறைகளை மறைத்தும் நிறைகளை மிகையாக்கியும் சமைப்பது” என்றான் யயாதி.
 
 சர்மிஷ்டை ஒரு ஆணின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருப்பதே அவளை அழகி என்றாக்குகிறது.  பரிவு செலுத்தி அவனால்  காக்க வேண்டியவளாக, அவனை பணிந்து வாழ்வதில்  அதில் இன்பம் கொள்பவளாக, அவன் வாழ்வில் அவள் இணைந்துகொள்வது தனக்கு  கிடைக்கும் பெரும் பேறு என நினைப்பவளாக  அவள் உள்ளது யயாதியின் ஆண் எனும் அகங்காரத்தை திருப்தி செய்கிறது. 
    
சர்மிஷ்டை சேடியென வாழும் இந்நிலைக்கு  தனக்கும் பொறுப்பிருக்கிறது  என்ற குற்ற உணர்வு ஒரு காரணம் என்பதெல்லாம் அடுத்ததுதான்.  அவன் தேவயானியிடம் கொள்ளாத காமத்தை சர்மிஷ்டையிடம் காணுவதற்கு ஆதி முதல் ஆண் கொண்டிருக்கும்,  அகங்காரமும் அதன் காரணமான அவன் உள்ளம் கொள்ளும் தாழ்வு மனப்பான்மையும் தான் காரணம் என்று கருதுகிறேன். 
 
தண்டபாணி துரைவேல்