Thursday, April 6, 2017

விட்டகன்று முன்செல்லல் (மாமலர் 62)




       
  பெண்கள் எப்போதும் தானாகத்  தன் காதலை ஒருவனிடம் சொல்வதில்லை. தன்னிடம் ஒருவன் காதலை வேண்டி நிற்க தான் அதை அங்கீகரிக்கும் பாவனையில்தான்  தன் காதலை அவள் வெளிப்படுத்துகிறாள்.   அன்பும் பணிவும் தன் இயல்பெனக்கொண்டிருக்கும் பெண் காதலில் மட்டும்  பீடத்தில் அமர்ந்திருக்கும் அரசியென இருப்பவள்.   அதில் அவள் நிமிர்வுகொண்டவளாக இருக்கிறாள்தன் நேசிப்பைத் தெரிவித்தபின் ஆண் அடுத்த நொடி  அவளிடம் தன் முழுமனதை திறந்து வைக்கிறான். உடலாலும்  நெருங்க அவசரப்படுகிறான். ஆனால்  தான் காதலிப்பதை அறிவித்த பின்பும் தயங்கி தயங்கித்தான் ஒரு பெண் மனதாலும் உடலாலும் ஆணை நெருங்குகிறாள்தான் நேசிப்பவன் தன்னை நேசிப்பதைக்  கைவிடமாட்டான் என முழுக்க அறிந்தபின்தான் அவள் தன் காதலை முழுமையாகத்  தெரிவிக்கிறாள்இப்படி ஒரு பெண் தன் காதலை உறுதிசெய்த பிறகு   அதை உதறி ஒருவன் விலகிச்செல்வது என்பது பெண்ணின் உளவியலை பெரிதாக தாக்கும் ஒன்றாக இருக்கும்.    அது உண்மையில் அவள் பெண்மைக்கு நேர்ந்த அவமானம் என அவளைக் கருத வைக்கிறதுதான் இழிவுக்காளாக்கப்பட்டதாக அவள் பெருந்துயரம் கொள்கிறாள். ஆண் இப்படி காதலில் நிராகரிக்கப்படும்போது அவனும் உடைகிறான், அவன் உளவியலும் பாதிக்கப்படுகிறது என்றாலும் சமூகத்தின் பார்வையில் ஒரு பெண் அடைவதைப்போன்ற இறக்கத்தை ஆண் அடைவதில்லை.  
     
முண்டன்ஆணுக்கு போர் தோல்வி, பெண்ணுக்கு கைவிடப்படுதல் இரண்டும் இறப்புக்கு நிகரான தருணங்கள். முற்றிறப்பு எளிது, அது முடிந்து போவது. மீண்டெழும் வாய்ப்புள்ள இறப்பென்பது மாளாத்துயர்ப்பெருக்கு. அந்த மீண்டெழும் நுனி வரை ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு அணுவும் இறப்பை நீட்டிக்க வைக்கும். அது கோடி இறப்பின் நிரைஎன்றான்.  
        
நாம் கீழே விழுந்தால்   நாம் எவ்வளவு உயரத்தில் இருந்து விழுகிறோம் என்பதற்கேற்ப பாதிப்பின் அளவு அதிகமாகும்.   தேவயானி  தன் ஆளுமையினால், தன் நிமிர்வினால்தன்னை மிக உயரத்தில் வைத்திருந்தவள்.    அவள் இந் நிகழ்வில் அந்த உயரத்திலிருந்து கீழே வீழ்த்தப்பட்டதாக உணர்கிறாள்அதில் அவள் அடையும் பாதிப்பும் வலியும் மிக அதிகமானது.     மேலும் அதில் அவள் தவறு என்று எதுவும் இல்லை. உண்மையில் அவளுக்கு பெரிய அநீதி இழைக்கபட்டிருக்கிறது.   இதுபோன்ற நிகழ்வுகள் தான்  ஊழின் இருப்பை உணரவைக்கின்றன. ஆனால் இந்த நிலை ஏற்படாமல்  கசன் தன்னைக் காத்து இருக்கலாம்  என அவள் நினக்கிறாள். அதனால அவள் பெரும்கோபம் அடைகிறாள். அவனைச் சபிக்கிறாள்அவனைக் கொல்வதற்கு இணையாக அவன் ஞானத்தை அழிக்கிறாள். பெருங்கோபமும் பெருந்துயரமும் அவளை சிலையென  இருத்திவிடுகிறதுவேறு யாரும் நெருங்கி ஆறுதல் அளிக்க முடியாத தனிப்பெருந்துயரில் ஆழ்ந்து நிற்கிறாள்.. 

  
இப்படி பெருந் துயரடைந்தவர்கள்   நிறையபேரைக் கண்டிருக்கிறோம். காதலித்து  மணம் முடித்த  கணவன்  புற்று நோய்தாக்கி  இறந்ததினால்ஒரு வயதுகூட நிறையாத சிறு மகவுடன் தனித்து விடப்பட்ட ஒரு பெண்ணைக் கண்டிருக்கிறேன். கணவன் இறந்துவிட தன் சிறு மகனை தன்னந்தனியாக வறுமையை எதிர்கொண்டு வளர்த்து ஆளாக்கி அவனுக்கு இருபது வயது நிறைகையில் சாலை  விபத்தில் பறிகொடுத்த ஒரு தாயைக் கண்டிருக்கிறேன்.   ஊழின் கொடுங்கரங்களால் அறைந்து வீழ்த்தப்பட்டு பெருந்துயர்கொண்ட  எத்தனை எத்தனை மனிதர்களைப் பார்த்திருக்கிறோம்.   ஆனால் அப்படி பெருந்துயரால் ஆட்கொள்ளப்பட்ட அத்தனை மனிதர்களும் அதிலிருந்து மீண்டு வந்திருப்பதையும் நாம் காண்கிறோம். அரிதாக ஒரு சிலரைத்தவிர அனைவரும் அந்த நிலையை கடக்கவே செய்கிறார்கள். அந்த  பெருந்துயர் நிகழ்வினால்  அவர் உள்ளம்  அடைந்த ரணம்   கால அன்னையின் மென் கரங்களின் வருடலில் ஆறிப்போய்விடுகின்றன.   அத்துயர் ஒரு வடுவாக அவர்களுக்குள் இருந்துகொண்டிக்கும்தான். சிலருக்கு சற்று பெரிய வடுவாக உறுத்திக்கொண்டிருக்கும். ஆனாலும்  காலம்  நகர்கையில் அவர்கள் முகத்தில் புன்னகை அரும்பத் தொடங்குகின்றதுஅவர்கள் உலக நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். கால நதி அவர்களை அந்த துயரத்திலேயே தேங்கி விடாமல் அதை தாண்டி முன்  நகர்த்திச் செல்கிறதுசில காலத்திற்குப்பின் அந்தத் துயர் இருந்த சுவடே மற்றவர்  கண்ணுக்கு தெரியாமல் போய்விடுகிறதுதுயரடைந்த அனைவரும் அதை  விட்டு மெல்ல மெல்ல அகன்று வாழ்வில் முன் செல்ல ஆரம்பிப்பது எப்போதும் நடந்துகொண்டுதானிருக்கிறது

ஆனால் உடல் ஒருபோதும் காலத்தை மறக்க முடியாது. அது எழுந்து உள்ளத்தை அசைக்கும். அப்போது மீண்டு வருவார்கள்என்றாள் சத்வரின் முதுதுணைவி

  
தேவயானி தன் பிறப்பிலேயே கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக ஓரிரவிலேயே அவள் தன் துயரத்திலிருந்து வெளிவந்துவிடுகிறாள்.   ஆனால்  அதிக உயரத்தில் இருந்து விழுந்திருப்பதால்  அவள் அடைந்திருக்கும்  உளக்காயம் ஆறினாலும் ஒரு பெரிய வடுவை ஏற்படுத்தியிருக்கும். அந்த வடு அவள் நடத்தையில், குணத்தில் நாமறியாத பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று தோன்றுகிறது.   

கசப்பு அங்குதானிருக்கும்என்று சுக்ரர் சொன்னார்.

உள்ளத்திலிருந்து விலக்கும் கசப்பு குருதியில் கலந்து தசைகளும் உயிரும் ஆகிவிடுகிறது.”

கிருதர் தயங்கிஅவள் முழுமையாக மீண்டுவிடுவாளா, ஆசிரியரே?” என்றார். “எவரும் முந்தைய நிலைக்கு மீள்வதில்லை. உதிரும் ஒவ்வொரு இலையின் தடமும் மரத்தில் இருக்கும்என்றார் சுக்ரர்.

துயர் விட்டகன்று முன்செல்வதான உளவியலை   இன்று வெண்முரசில் நாம் காண்கிறோம்.

தண்டபாணி துரைவேல்