காண்பதற்கான தேவையால் காண்பதற்கான ஆவல் உண்டாகிறது, காண்பதற்கான ஆவலே கண்களைத் தோற்றுவிக்கிறது. இப்படி ஐம்புலன்களும் அதற்கான தேவை மற்றும் ஆவலாலேயே ஒவ்வொரு உயிர்க்கும் பரிணாம வளர்ச்சியில் அடையப்பெற்றிருக்கிறது. அந்தந்த உயிர்களின் உடலமைப்புகளுக்கும் வாழ்வியல் சூழலுக்கும் ஏற்ப அவற்றின் தேவைகள் அதிகரிக்கின்றன அல்லது குறைகின்றன. அதற்கேற்ப அதன் உடலின் ஐம்புலன்களில் சில கூர்மையடைகின்றன அல்லது திறன்குறைகின்றன. இதன்படி பார்த்தால் ஏன் சில உயிர்கள் மற்ற உயிர்களைக்கொல்லும் நச்சைக்கொண்டிருக்கின்றன? இது ஐம்புலன்களின் திறனைப்போல் அல்லாமல் உடல் ஆற்றல்போல் அல்லாமல் இருக்கும் ஒன்று. உயிர் வாழும் போட்டியில் நச்சைப்பயன்படுத்துவது என்பது நம் மனதால் எளிதில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
தன்னுள் பிறரைக்கொல்ல
நச்சை நிறைத்து இருக்கும் உயிரினங்கள் எவை என கண்டிருக்கிறீர்களா. அந்த நச்சு மட்டும்
இல்லையென்றால அவை வெறும் எளிய பாதுகாப்பற்ற உயிர்கள். அவை ஆற்றலோ பலமோ இல்லாதவையாக
இருக்கும். நாகங்கள், தேள்கள், சில வகை சிலந்திகள், எலும்புகளேயற்ற ஜெல்லி மீன்கள்
போன்றவை. அவை எளியவை. மற்ற உயிர்களின் தாக்குதலுக்கு எளிதாக இலக்காகக் கூடியவை. அவை
எளியவையாக இருப்பதாலேயே வலிய உயிர்களின் மேல் அச்சமும், அவற்றுடன் உணவுக்காக போட்டியிட
முடியாத இயலாமையும், அதன் காரணமாக அவற்றின்மேல் பகைமையும் கொண்டிருப்பவை. காலம் காலமாக
அவை கொண்டிருக்கும் அந்த வஞ்சமே பரிணாமவளர்ச்சியில் நஞ்சென அதனுடலில் திரள்வதற்கு காரணமாக
அமைகிறது எனச் சொல்லலாம்.
இப்படியே ஒருவர்
தன்னைவிட உயர்வெனக் காணும் மற்றவர்களிடம் ஒரு வகையான அச்சமும், அவர்களை எப்போதும் வெல்லமுடியாமல்
போகும் இயலாமையும், அவர்களின் இரக்கத்திற்கு தான் ஆளாகி வாழ்வதும் ஒருவித பாதுகாப்பின்மையை
ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக சிலர் தாழ்வுணர்ச்சி கொள்கின்றனர். அந்தத் தாழ்வுணர்ச்சி
அவர்கள் ஆழ்மனதில் தன்னிலும் உயர்ந்தவர்கள் மேல் வெறுப்பையும் வஞ்சத்தையும் தோற்றுவிக்கிறது.
அது அவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் கனன்றுகொண்டிருக்கிறது. உடலில் நஞ்சு தோன்றுவதற்கான
பரிணாம வளர்ச்சி பல்லாயிரம் ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஆனால் உள்ளத்தின் தாழ்வுணர்ச்சி
நஞ்சென பரிணாமம் கொள்ள சில நாட்களே போதுமானதாக இருக்கிறது. அப்படி உள்ளத்தில் ஊறிய
நஞ்சை தன்னிலும் உயர்ந்த அந்த நபரின்மேல் செலுத்த தக்க தருணத்திற்காக காத்தித்திருக்கப்படுகிறது.
ஏதாவது ஒரு தருணத்தில் தன்னால் தப்பித்துக்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்படுகையில் அந்த
நஞ்சு எதிர் நபர் மீது செலுத்தபடுகிறது.
சர்மிஷ்டை நாணமும்
எளிய உள்ளமும் கொண்ட பெண்ணாக நமக்கு தெரிகிறாள். தன் உடல் வனப்பின் மேல் மற்றும் அறிவுக்கூர்மையில்
அவள் எவ்வுயர்வையும் காணாதவளாக இருக்கிறாள். அகங்காரமற்ற மெல்லுள்ளம் கொண்டவளாக தன்னை
வெளிக்காட்டிக்கொள்கிறாள். கலை, கல்வி ஞானத்தில் உலகியல் அறிவு எதிலும் விருப்பற்றவள்
போல் அவள் நடந்துகொள்கிறாள். தான் அவ்வளவாக அழகற்றவள் என்பதை பொருட்படுத்தாதவளாக தன்னைக்
காண்பித்துக்கொள்கிறாள். ஆனால் அத்தனைக்கு அடியிலும் அவள் மனதில் தான் இன்றிருக்கும்
நிலைக்கு தான் தாழ்வானவள் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனாலும் தேவயானியின் வருகை வரை அவளுக்கு
இணை வைத்துப்பார்க்க எவரும் இல்லை என்பதால், இந்த நிலை அவளை அவ்வளவாக சலனப்படுத்துவதில்லை.
ஆனால் அதற்குப் பிறகு அவள் உள்ளம் தன்னை தேவயானியிடம் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள்கிறது.
தன்னை விட பேரழகி, தன்னைவிட பேரறிவு கொன்டவள், தன்னை விட மற்றவர்களால் புகழப்படுபவள்,
தன்னைவிட ஆளுமைகொண்டவள். அது அவள் உள்ளத்தை வெகுவாக பாதிக்கிறது என்று தோன்றுகிறது.
அவளுடைய நாணம், தயக்கம், அச்சம், பணிவு அனைத்துக்கும் அடியில் பாதுகாப்பின்மை, தாழ்வுணர்ச்சி
இருக்கிறது. ஒரு பேரழகைக்கொண்டு வியக்கும் நம்முள்ளம், அடுத்த நொடி அது தனதாக இருக்கவேண்டும்
என்ற விழைவை உண்டாக்குகிறது. அப்படி ஆகாமல் போகும்போது மனதில் ஒரு நிலையழிவை ஏற்படுத்துகிறது.
தேவயானியைக் கன்டதும் சர்மிஷ்டை மனம் தடுமாறுகிறது.
உப்பரிகையில்
நின்றபடி தொலைவில் வண்டியில் வந்துகொண்டிருந்த தேவயானியை முதலில் கண்டபோதே சர்மிஷ்டை
தன்னுள் ஒரு திடுக்கிடலை உணர்ந்தாள். பின்னர் எங்கும் எச்சொல்லும் நிலைகொள்ளாத பதற்றத்தை
அடைந்தாள்.
அவள் நிலையழிவை
அவள் அன்னை அறிந்துகொள்கிறாள். அன்னை தன் மகளின் மனதை சீர்படுத்த முனைகிறாள்.
அவள் தலையை
மெல்ல வருடி “ஆம், அவள் பேரரசிக்குரிய நிமிர்வு கொண்டிருக்கிறாள். அவள் முன் நீ எளிய
பெண் போலிருக்கிறாய். ஆனால் ஒன்று எண்ணிக்கொள், எவ்வண்ணமிருப்பினும் அவள் அந்தணப்பெண்.
அந்தணர் ஒருவரையே அவள் மணங்கொள்ள வேண்டும். எப்படி உயர்ந்தாலும் பெருவைதிகன் ஒருவனின்
இடம் அமர்ந்து வேள்விப்பந்தலில் தலைமை கொள்வதை மட்டுமே அவள் எட்ட முடியும். நீ பாரதவர்ஷத்தின்
இளவரசி. பேரரசர்கள் உன் காலடிகளில் பணிவார்கள். உன் சொற்களுக்கென அசுரப் படைநிரைகள்
காத்திருக்கின்றன” என்றாள்.
தேவயானி ஒரு
ஆசிரியர் மாணவியை நடத்துவதைப்போல, ஒரு புரவலன் ஏழைக்கு உதவுவதைப்போல, ஒரு தெய்வம் பக்தனைக்
ரட்சிப்பது போல சர்மிஷ்டையிடம் நடந்துகொள்கிறாள். சர்மிஷ்டையின் தயக்கங்களை அச்சங்களை
போக்க முயல்கிறாள். அவளுக்கு சிறந்த தோழியென இருக்கிறாள்.
அவளுக்கு நீச்சல் கற்பிக்கிறாள்,
சோழி விளையாடச்சொல்லிக்கொடுத்து அதில் தன்னை விஞ்சிச்செல்ல அனுமதிக்கிறாள். அவள் தயங்கும்
உள்ளத்தை திருத்தி மேம்பட பேருதவி செய்கிறாள். ஆனால் ஒருவருக்கு நாம் உதவிசெய்யும்போது
அவருடைய அகங்காரம் பாதிக்கப்படுகிறது. அது அவர் ஆழுள்ளத்தில் நம்மை ஏதாவது ஒரு விஷயத்தில்
வெல்லவேண்டும் என்ற வஞ்சத்தை விதைக்கிறது. ஏதாவது ஒரு சிறு சம்பவத்தின் பொருட்டு நம்மிடம்
பெரிதாக கோபித்துக்கொள்வார்கள். நம் உதவிக்கு மாசு கற்பித்து, நம்மை முற்றிலும் தவிர்த்து,
விலகிவிடுவார்கள். அல்லது நம்மேல் ஏதாவது ஒரு பகையை தேடிக் கண்டுபிடித்து வளர்த்துக்கொள்வார்கள்.
அத்தகைய வஞ்சமும் சர்மிஷ்டையிடம் தோன்றுவதாக நான் கருதுகிறேன். அவளுடைய மெல்லுள்ளத்தில்
நஞ்சுதிரண்டு கரந்திருக்கிறது.
அப்படி அவள் உள்ளத்தில் உள்ளுறையும் நஞ்சினை அவள் அறியும் முன்னரே நாம் அவள் கூற்றுக்களில் மெலிதாக வெளிப்படத் தொடங்குகின்றன. தேவயானி அடைந்திருக்கும் பொருட்கள் எல்லாம் தன் தந்தை அளித்தவை என்பதில் இருக்கும் நகையாடல் அவளை அறியாமலேயே வெளிவருகிறது.
“பெற்றுக்கொள்ளும் அளவுக்கு இங்கு பிற பொருள் எது? அனைத்தும் எந்தையின் கருவூலத்திலிருந்து வந்தவை” என்றாள் சர்மிஷ்டை.
பின்னர் சர்மிஷ்டையை யயாதி என்ற மாமன்னன் மண கொள்ள வருகிறான். இதுவரை இல்லாதபடி அனைவர் பார்வையும் தன்மேல் பதிவதை உணர்கிறாள். அசுர குல வளர்ச்சிக்கு தான் ஒரு காரணமாக போவதின் முக்கியத்துவம் தனக்கு கிடைத்திருப்பதாக உணர்கிறாள். இப்போது தேவயானி அடையாத உயர்வை அவள் அடைந்துவிட்டதாக உணர்கிறாள். இதுவரை கட்டுக்குள் இருந்த அவள் மன உணர்வுகள் உள்ளிருந்து வெளிவரத் தொடங்குகிறது.
அப்படி அவள் உள்ளத்தில் உள்ளுறையும் நஞ்சினை அவள் அறியும் முன்னரே நாம் அவள் கூற்றுக்களில் மெலிதாக வெளிப்படத் தொடங்குகின்றன. தேவயானி அடைந்திருக்கும் பொருட்கள் எல்லாம் தன் தந்தை அளித்தவை என்பதில் இருக்கும் நகையாடல் அவளை அறியாமலேயே வெளிவருகிறது.
“பெற்றுக்கொள்ளும் அளவுக்கு இங்கு பிற பொருள் எது? அனைத்தும் எந்தையின் கருவூலத்திலிருந்து வந்தவை” என்றாள் சர்மிஷ்டை.
பின்னர் சர்மிஷ்டையை யயாதி என்ற மாமன்னன் மண கொள்ள வருகிறான். இதுவரை இல்லாதபடி அனைவர் பார்வையும் தன்மேல் பதிவதை உணர்கிறாள். அசுர குல வளர்ச்சிக்கு தான் ஒரு காரணமாக போவதின் முக்கியத்துவம் தனக்கு கிடைத்திருப்பதாக உணர்கிறாள். இப்போது தேவயானி அடையாத உயர்வை அவள் அடைந்துவிட்டதாக உணர்கிறாள். இதுவரை கட்டுக்குள் இருந்த அவள் மன உணர்வுகள் உள்ளிருந்து வெளிவரத் தொடங்குகிறது.
அவள் கள்ளமின்றி சொன்னதுபோலிருந்தாலும் அவள் மனதிலிருக்கும் நஞ்சு, அவள் மணமுடித்து போகையில் தேவயானியை தன்னுடன் வருமாறு அவளை அழைக்க வைக்கிறது. அவள் எப்படிக் கூறீனலும் அதன் இறுதிபொருள் அவளுடைய சேடிப்பெண்ணாக தேவயானி இருத்தல் என்பதுதானே?
சர்மிஷ்டை கைநீட்டி தேவயானியின் கைகளை பற்றிக்கொண்டு “தாங்கள் உடன் வாருங்கள், மூத்தவளே” என்றாள். சாயை சினத்துடன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். அவளைத் தொட்டு விலக்கிவிட்டு தேவயானி “நன்று. அதை பிறகு பேசுவோம்” என்றாள்.
யயாதியை மணம் செய்துகொள்ளப்போவதால் இனி தேவயானியின் அருகாமை தேவைப்படப்போவதில்லை. அவள் எட்ட முடியாத உயரத்திற்கு நாம் சென்று விடுவோம் என்று கணிக்கும் சரிமிஷ்டையின் உள்ளம் இதுவரையில் தன்னிடம் திரண்டிருந்த நஞ்சை சொல்லாகவும் செயலாகவும் தேவயானியின்மேல் பாய்ச்சுகிறது. சர்மிஷ்டை தேவயானிக்கு யாரும் எதிர்பார்க்கவியலா வண்ணம் நிகழ்த்தும் இந்த தீங்கான செயலை இப்படியாக புரிந்துகொள்ளலாம் என நினக்கிறேன்.
தண்டபாணிதுரைவேல்