Thursday, May 3, 2018

மழைப்பாடல்

அன்புள்ள ஆசிரியருக்கு...
Hi
மழைப்பாடல் துளித்து  கனத்துப் பெய்து பொழிந்து சரமாகிச் சாரலாகிச் சொட்டுகளாகி நிறைந்து விட்டது.

துவங்குகையிலேயே மனம் இறுதிப் பகுதியை நோக்கி நின்று கொண்டது. காந்தாரப் பாலையில் செளபாலருடன் புழுதியுடன் அலைகையிலும் மதுவன மழைக்காடுகளில் அனகையுடன் நனைகையிலும் சரி, பாண்டுவின் மரணம் மட்டுமே மின்னல் போல் தோன்றித் தோன்றி மறைந்தது. ஏனெனில் அது ஓர் அந்தரங்க நிகழ்வு. தந்தையைச் சிறுவயதிலேயே இழந்த பையனின் மறையாத் துயர் மீண்டும் அங்கே நிகழ்ந்தது.

இந்நூலில் பாண்டு மட்டுமே மிகவும் பிடித்தவனாக இருந்தான். வலிமையற்றவன் ஆயினும் அவன் ரசிகன், ஓவியன். நோய்க்கு நடுவே வாழ்வின் அர்த்தமின்மையை கேலி செய்து கொண்டே சிரித்து, விசித்திரவீரியரின் அதே குணமகன். அஸ்வதந்த வைரத்தைப் பெற்று அண்ணனுக்கு நாட்டையும் தம்பிக்கு வைரத்தையும் தாரை வார்த்து விட்டு வெறுங்கையோடு திரும்பியவன். மணிமுடியைச் சூடிய பின் மரவுரியாடை அணிந்து தனக்கேயான காடுகளுக்குப் பெயர்ந்தவன். இழந்தவற்றுக்கெல்லாம் ஈடாக உடல் முழுக்க மைந்தர்களைப் பெற்று நிறைந்தவன். தந்தை.

பிரம்மச்சாரி நிலையிலிருந்து பெற்றோர் நிலைக்கு வந்து சேர்கிறார்கள் மூவருமே. அவற்றின் ஊடாக சகுனியின் வஞ்சினமும் காந்தாரியின் நெகிழ்வும் தவிப்பும் குந்தியின் உறுதியும் கவனமும் மாத்ரியின் இனிமையும் இன்மையும் பாண்டுவின் உள்ளடங்கலும் உயிர்த்தெழலும் விதுரனின் காதலும் அமைதலும் திருதராஷ்டிரனின் விழைவும் பாசமும் சத்யவதியின் திட்டங்களும் விடுபடலும் காசிச் சகோதரியரின் வஞ்சங்களும் விலகுதலும் பின்னப்படுகின்றன. 

அனைத்தையும் முடித்து சதசிருங்கத்திற்கு வந்து சேர்ந்தேன்.

சென்ற சனிக்கிழமை மாலை இங்கே பூனாவில் இருக்கும் ‘பர்வதி மலை’ என்ற சிறு குன்றுக்குச் சென்றேன். மேலே நான்கு கோயில்கள் இருக்கின்றன. மராட்டிய பேஷ்வா அரசில் ஒரு முக்கிய கோட்டையாக இருந்திருக்கின்றது. தரையிலிருந்து 260 அடி வரை உயரம். நூற்றுக்கு அருகில் படிக்கட்டுகள் கொண்டது. கோயிலுக்குப் போகலாம் என்று சென்று, படிக்கட்டுகளில் ஏற முயன்று மூச்சு வாங்கி வியர்வை பொங்கியது. ஆங்காங்கே நின்று நின்று சிறிது நேரம் காத்து, நிதானித்து, அமர்ந்து, கொண்டு வந்த நீரைக் கொஞ்சமாய் அருந்தி தொண்டையை நனைத்து ஒரு வழியாக மேலே சென்றேன். மழைப்பாடலின் இறுதிப் பகுதியில் பாண்டுவை விண்ணேற்றுவதையும் அவ்வாறே படித்து முடித்தேன்.

களம் அமைத்தவர்கள் காட்சியிலிருந்து விலகி கானேகி விட்டார்கள். அதில் விளையாடுபவர்கள் காய்களைக் கொண்டு வந்து விட்டனர். இனி நகர்த்தலும் நீக்குதலும் தான் அடுத்தது. வண்ணக்கடல் அலையடிக்கத் துவங்கி விட்டது.


நன்றிகள்,
இரா.வசந்த குமார்.