Friday, April 12, 2019

புதையல் வேட்டை



அன்புள்ள ஜெயமோகன் சார்,

நேற்றுதான் நான் உங்கள் தளத்தில் "கடவுள் அற்ற நிலம் " படித்தேன்.இன்று இருட்கனி  ஆரம்பமே இளைய யாதவரும் ,அர்ஜுனரும் புதையல் வேட்டைக்கு செல்வது போல் இருக்கிறது . இருட்கனியில் "கர்ணனை"  அனைவரும் அழகன், கொடையாளி என கூற அர்ஜுன் சோர்ந்து போகிறான். இளையயாதவர் "எளிய மானுடர் பெரியோரை நினைவில்கொள்வது அப்பெரியோர் கொண்ட பெருமைகளின்பொருட்டு அல்ல. அப்பெருமையால் தாங்கள் அடைந்த நலன்களின் பொருட்டே. கடுவெளியை ஆளும் முழுமுதல் தெய்வங்களைக்கூட மானுடர் அவை தங்களுக்கு அளித்த அருளால்தான் அறிந்துகொள்கிறார்கள்” என்றும் "இவ்வுலகில் அரியவை இரண்டே. தவமும் கொடையும். இரண்டும் மானுட உள்ளம் செல்லும் இயல்பான திசைக்கு நேர் எதிர்த்திசை நோக்கி செல்பவை. கொடை ஒரு தவம். தவம் ஒரு பெருங்கொடை”....இதுதான் இருட்கனியின் சாரம் என நினைக்கிறேன். ஜனங்களின் நாவலா அல்லது ஜனங்களின் தேவையை புரிந்து கொண்ட கொடையாளன் கர்ணனின் கதையா ? 


கனககிரியின் பொன்னை  தானம்  செய்யவேண்டும் என கூற அர்ஜுனன் கொஞ்சம் அள்ளிக்கொண்டுவந்து கொடுக்க ஆரம்பிக்கிறான். ஆனால் கர்ணன் உணமையான சந்திரரை கண்டுபிடித்து கனககிரியையே கொடுத்துவிடுகிறான். அர்ஜுனன் அனைத்துக்கும் தான் காப்பு என்றும் அது தகுதியானவர்கள் கையில் சேரவேண்டும் என்றும் நினைக்கிறான். தகுதியானவர்கள் யார்?  இருட்கனியில் ஜனங்கள் பொன்னுக்கு [ அது என்ன ?] முட்டிமோதுவது ,இரக்கதிற்க்காக தங்களின் தகுதியை மறைத்துகொண்டு சிறுமைகொண்டு "கொடு ,கொடு " என்று அர்ஜுனனை பீதிக்குளாக்குகிறார்கள்.[நான் பார்த்த முதல் தேர்தலில் இருந்து இந்த நிமிடம் வரை ஜனங்கள் தங்களின் ஒன்றையாவது அரசியல்வாதிகள், அதிகாரிகள் தீர்த்துவைத்தார்கள் என கூறியதை பார்த்ததில்லை. செத்துப்போன ஆட்களின் திட்டத்தை ஐம்பதுவருடம் கழித்து கூறுவார்கள் ...இது என்ன லாஜிக் என்று எனக்கு புரியவே இல்லை .வீராணம் திட்டம் நிறைவேற்றபட்டு தண்ணீர் கிடைக்கிறது என சந்தோசமாய் கூறிய ஒரு ஆளை நான் சந்தித்ததில்லை.தண்ணீர் இல்லை என காலிகுடத்தை மழைக்காலங்களிலும் டீ.வியில் காட்டுகிறார்கள். இதுதான் நிறையவே நிறையாத பாதாளமா? ] . 

அர்ஜுனன் தன்னை திட்டும் ஜனங்களை கொல்ல வில்லெடுக்க ஒரு முதியவர் “கொல்! எங்களுக்கும் உரியதென தெய்வங்கள் அளித்த செல்வத்தை உனக்கெனக் கரந்திருக்கும் பழிக்காக நீ இருளுலகுக்கே செல்வாய்! எங்களை கொன்ற பழியும் உடன் இணையட்டும்… கீழ்மகனே, பிறப்பால் பெருமையேதும் அடையாத இழிமகனே, உன் கைகளால் எங்களை கொல்! எங்களுக்கு தெய்வம் அளித்த செல்வத்தைக் கொண்டு உன் இயல்புக்குரிய கீழ்மையில் திளைத்து வாழ்…” என கூறி அழ திக்கென்றது. "“போடு… இன்னும் போடு… இது என்ன உன் தந்தை ஈட்டிய செல்வமா? நீ வென்ற பொருளா? கொடுப்பதற்கு கைகுறுகிய கீழ்மகனே, கொடு கொடு” என கூவுகின்றனர். . “கொடு கொடு கொடு” என்று கூப்பாடு போடுகின்றனர். [ இமைக்கணத்தில் "அறைகூவல் " இல்லை என அரற்றும் பீஷ்மரின் ஞாபகமும்.... உங்களின் ஒரு கட்டுரையில் தானம் கொடுக்கும் தனது உறவினரின் மீது வசை பொழிந்து தனக்கு ஒன்றுமே செய்யவில்லை என கூறி அழுத ஒரு பெண்ணின் ஞாபகமும் ]

அர்ஜுனன் சத்ரியன்.தனக்கு போக தானம் என்ற கொள்கை கொண்டவனாய் இருக்கலாம்.இல்லை என்றால் வாழ்க்கை முழுதும் வேதங்களையும், வித்தைகளையும் கற்றுக்கொண்டு  கடைசி நிமிடத்திலும் "பகவத்கீதை" வேண்டும் என்பதுபோல் நடந்துகொள்வானா? .கர்ணன்"ஜனங்களுக்குள்" நுழையவே இல்லை.அவர்களுக்கு சாப்பாடைதவிர வேறு ஒன்றையும் சும்மா தரக்கூடாது என தெரிந்திருக்கிறது.இரவலர்கள் "தாங்கள் பெற்றவற்றை பிறர் பெற்றவற்றுடன் ஒப்பிட்டு சண்டைபோட்டு கொள்வார்கள்.தாங்கள் பெற்றவை எத்தனை பெரிதானாலும் தங்கள் தேவையும் தகுதியும் மேலும் பெரிது என எண்ணிக்கொள்வார்கள். தேவையையே தகுதி என எண்ணி,பெற்றவற்றால் சந்தோஷமே அடையமாட்டார்கள்.முகம் மலர்ந்து கொடை பெற்று ஒருவரும் மீளமாட்டார்கள் என அவனுக்கு தெரிந்து இருக்கும்போல .அனைத்து சமூகத்தினரையும் அணைத்து அரசனாகியவன் அல்லவா?.  

இருட்கனியின் சுவை எப்படி இருக்கும் ?

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்