அன்புள்ள ஜெயமோகன் சார்,
இருட்கனியின் 6ம் அத்தியாயத்தில் குந்தியின் "தனது வேதனையை பெருக்கிகொள்ளும் இயல்பை கண்ட " அஸ்வர் திடீர் என முற்றிலும் அயலான ஒரு சூழலை எதிர்கொள்வதை குறித்து பொதுவாய் மனிதர்களை குறித்து : "அச்சூழலையும் பொழுதையும் அவர்கள் முன்னரே அறிந்திருக்கவில்லை என்றால், அதில் அவர்களின் அகம் முற்றாகவே ஈடுபடவில்லை என்றால் அவர்கள் நிலைகுலைவார்கள். பொருத்தமில்லாப் பதற்றமாக, பொருளில்லாச் சொற்களாகவே வெளிப்படுவார்கள். அவர்கள் அமர்ந்திருப்பதும் விழுந்திருப்பதும் கூட பிழையாக இருக்கும். பயிலா நடிகனின் கூத்தென நம்மில் ஒவ்வாமையையே அளிக்கும்.அத்தருணத்தை எங்கோ விரும்பி எவ்வண்ணமோ முன்னர் நிகழ்த்திக்கொண்டிருப்பவர்கள் அப்போது முழுதுறப் பொருந்துவார்கள்.பிழையிலாது வெளிப்படுவார்கள்.” என்கிறார். இது முன்பே வெண்முரசில் வேறு வார்த்தைகளில் வந்ததுதான். ஆனால் இன்றுதான் எனக்கு பொருந்தியது அல்லது நான் அதை ஆழமாய் உணர்ந்தது. அர்ஜுனன் காண்டீபதில் சித்ராங்கதனுக்கு " வெற்றி பெற்றவர்கள் எல்லாரும் அந்த வெற்றியை ஆயிரம் முறை தங்கள் உள்ளத்தில் நடித்தவர்கள் " என கூறுவான்.அது வெற்றிக்கு மட்டும் அல்ல, தோல்விக்கு,துயருக்கு, வீழ்ச்சிக்கு எல்லாம் பொருந்தும் போல.
ஸ்டீபன்ராஜ்