அன்புள்ள ஜெ,
அதர்வினவு, கருநீக்கம் என்றால் என்ன பொருள்?
புகழ் அதர்வினவித் தேடி வரவேண்டும், புகழை ஈட்ட
முயல்பவன் கொடையாளி அல்ல, சிறுமதியன்.
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-13
இச்சொல் மாமலரிலும் வந்திருக்கிறது. நான் கேட்க மறந்துவிட்டுருக்கிறேன்.
புரூரவஸ் மேலும் பணிந்து “முனிய வேண்டாம் பொருளரே,
இங்கு நான் ஈட்டியுள்ள பொருளனைத்தும் அறத்தின் விளைவாக
அதர்வினவி எனைத் தேடிவந்தவையே. அறம் துறந்தொரு பொருளை
என் உள்ளமும் தொட்டதில்லை” என்றான்.
- ‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–15
இன்றைய வெண்முரசில் கருநீக்கம் என்ற சொல் உள்ளது.
நான் ஊழுடன் விளையாடிக்கொண்டிருக்கிறேன். ஊழின்
கருநீக்கங்கள் என்ன என்பதை கணக்கிடுவதை கைவிட்டுவிட்டேன்.
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-14
நன்றி
அன்புள்ள கார்த்திகேயன்
ஆக்கம் அதர்வினாய் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையானுழை என்பது குறள். அதர் என்பது வழி. வழிதேடிச்செல்லும் என பொருள்
கரு என்பது சதுரங்கக் காய். கருநீக்கம் என்றால் காய்நகர்த்துதல்
ஜெ