அன்புள்ள ஜெ,
ஆயிரம் த்துவங்கள், நூறு நூறு தரிசனங்கள் எவையும் மனமுவந்து அளிக்கும் ஒரு கொடைக்கு ஈடாகாது அல்லவா?!
இருவரிகளில் வண்ணக்கடலில் வந்த ஒரு சம்பவம். கொடுத்தவன் வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாதவன். அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை, அந்த கணையாழி அளிக்கப்பட்டவனின் வாழ்வை எங்ஙனம் மாற்றியதென்று. பெற்றவனும் அறிந்திருக்கவில்லை தன்னை இங்ஙனம் ஆக்கியவனே தன்னையாளும் இறையென்று.
எந்த தெய்வமும் மானுடனுக்கு நம்பிக்கையாக மட்டுமே வந்து சேர்ந்தாக வேண்டும் என்பது இப்புடவிக்கிறைவன் வகுத்த நீதி போலும். வாழ வழியுண்டு என்ற நம்பிக்கை, காக்க தெய்வமுண்டு என்ற நம்பிக்கை, பற்றுக்கோடென அறமுண்டு என நம்பிக்கை. அன்றிலிருந்து இன்று வரை, கிருதை துவங்கி, "ஆமலே, சோறுக்காகத்தான். கர்த்தர் எனக்கு சோறும் கறியும்தான்லே. அதை எங்க போயிச் சொல்லவும் எனக்கு வெக்கம் இல்ல", என பிரகடனப்படுத்தும் ஓலைச்சிலுவையில் வரும் கதைசொல்லியின் தாய் வரை தெய்வம் அளியுடைத்தே!!
தன்மனிதனை அலகாக்கிய கலி அறிந்திருக்கவில்லை, அம்மையப்பனின் பகடையாடலில் தன்னிடம் தோற்ற துவாபரன் தான் உருவாக்கும் புது அறத்திற்கு மாற்றாக கதிர்மைந்தனை வைத்தாடியிருக்கிறான் என்பதை. பார் உள்ளளவும் கார் உள்ளளவும் கடுவெளி உள்ளளவும் இருப்பான் அவன்!!
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்