Monday, April 8, 2019

விடுதலை



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

கார்கடல் அளித்த பலவிதமான உணர்வுகளை கடந்துவந்து இப்போது திரும்பி நோக்க நாவலின் மையமாக எனக்குத் தோன்றுவது இங்கு களம்பட்ட முக்கியபாத்திரங்கள் ஒவ்வொருவரும் தங்கள் தளைகளில் இருந்து விடுதலை கொள்கின்றனர் என்பது.  தம் சொந்த இயல்புக்கு மாறானவற்றில் விழைவுகொள்ள ஊழ்கொண்டவர்கள் அவர்கள்.  ஒவ்வொருவரும் தம் உண்மைக்கு அணுக்கத்தை இழந்து அவர்கள் விலகிய தொலைவிற்கு ஏற்ப தவிப்பைக் கொண்டவர்களாக வாழ்ந்தனர்.  தம்மை பிறிதொன்றாக தமக்கே நிறுவிக்கொள்ள முயன்றவர்கள் அல்லது தமது மெய்இயல்பு எதுவென்று குழம்பியவர்கள்.  ஆழம் உண்மையை எப்போதும் அறிந்தே இருக்கிறது என்று உணர்ந்துகொண்டே மனதால் நாடகங்கள் நடத்திக்கொண்டவர்கள்.  உள்ளும் புறமும், அன்பும் வஞ்சமும், மெய்மையும் ஆணவமும் என்று இருமையில் தவித்தவர்கள்.  தந்தை-மகன் என ஒருவர் மற்றவரின் பகுதியென அமைந்தவர்கள்.  அகவிடுதலை குறித்த தவிப்பற்ற விலங்குகள், தெய்வங்கள் போல் அல்லாமல் சிக்குண்ட மனிதர்கள்.  தம் இயல்பில் ஒன்றேயான ஒரு ஜோடி மட்டும் பிறவற்றில் இருந்து வித்தியாசப்படுகிறது, பீமனும் கடோத்கஜனும்.  பெரும் கொந்தளிப்புகள் அவர்களுக்கு இல்லை.  பீமன் பெரும்பாலும் விலங்கு.  கடோத்கஜன் பெரும்பாலும் தெய்வம், அவன் அவ்வாறே தோன்றி அவ்வாறே மறைகிறான்.  இளையயாதவனின் காவல் பீமனுக்குத் தேவையிருக்கவில்லை, "அவனைக் காக்கும் தெய்வங்கள் வேறு" என்று அவன் சொல்கிறான்.  மனிதன் என்பதில் அதிகம் நின்றிருக்க வேண்டியில்லாத, விலங்கில் இருந்து தெய்வநிலைக்கு தாவிவிட வாய்ப்புள்ளவன் என்பதால் மாமலரில் அருட்குரங்கினால் அருள்கூரப்பட்டு அதற்கிணையான தாவும் ஆற்றல் தனக்கில்லை என உணர்ந்து தன்னிலையிலேயே நின்று கொண்டவன்.  தன் எல்லைகளை அறிந்தவன், மிகைப்புகள் கொண்டவன் அல்ல.  உயர்ந்து கடக்கப்படும் தாழ்வோ கீழ்மை கொண்டு கடக்கப்படும் பெருமையோ அவன் உள்ளத்தில் இல்லை.

துரோணர் ஒரு கோணத்தில் சாணக்கியரை நினைவுபடுத்தினார்.

கர்ணனை சந்திக்கும் குந்தியும், களத்தின் காட்சிகளைக் கேட்கும் காந்தாரியும் பிற அரசியரும் என்பது தவிர்த்து கார்கடலில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வாய்ப்பு இல்லை.

பெரும்வன்முறைகள் கடந்தவந்த கார்கடல் அதன் உணர்வை அல்லாமல் விளைபயனாய் கனிவு, பேரன்பு, பொருளின்மை குறித்த உணர்வு, சிக்குண்டோரை-தவிப்போரை விடுவிக்கும் பேரறம், மெய்மை காண் வழிமுறைகளை இணைத்துப் பின்னி எதிர்காலத்திற்கு மானுடம் முழுமைக்கும் எனத் தர நினைக்கும் அந்த மாபெரும் மெய்யாசிரியனின் பெருங்கருணை என பலவற்றை உய்த்துணரத் தந்தமை மகிழ்கிறேன்.  வாழ்த்தும் வணக்கமும் தெரிவிக்கிறேன்.  

அன்புடன்
விக்ரம்