அன்புள்ள ஜெ வணக்கம்...
//நதியில் ஓடும் கலங்கலும் சேறும் குப்பையும் அனைத்தும் விண்ணளித்தவையே”//
//எத்துயரிலும் எவ்வெறுமையிலும் நாக்கு இனிமையை உணரத்தான் செய்கிறது. அது ஒரு சொல்லுறுதி. இங்கிருந்து எவ்வண்ணமும் மீண்டுவிடமுடியும் என்னும் நம்பிக்கை. உண்க!” //
//
எத்துயரும் அதைக் கடந்து நாம் வளர்கையிலேயே அகலும். வளர்க!”//
//நான் என் ஆசிரியரை தேடிச்செல்கிறேன். எனக்குரிய ஆசிரியர் எவர்?” என்றான். “உன் முந்தைய ஆசிரியர் எவர் என்பதே வினா. அவரை வென்றவரோ வெல்லக்கூடுபவரோதான் உன் ஆசிரியர்” //
. //“ஒவ்வொருவரும் தங்கள் உச்சமொன்றைச் சென்றடைந்து அதில் ஏறிநின்றிருக்கும் ஒரு தருணம் உண்டு. அத்தருணத்தால் அவர்கள் மண்ணில் தோல்வியடைவார்கள், விண்ணவர்க்கு இனியவரும் ஆவார்கள்//
//நஞ்சென உடலில் எழுந்தவையும் நுழைந்தவையும் முற்றாகவே வெளியேறிவிடவேண்டும். ஒரு துளி எஞ்சினாலும்கூட அது நோயென்றாகி அழிவை கொண்டுவரும்”//
//ஆசிரியர்கள் மாணவர்களிடம் தோற்கிறார்கள், ஏனென்றால் மாணவனாக தான் அழிவின்மைகொள்வதை உணர்கிறார்கள். அறுதிவெற்றி என்பது தம்மின் பெருமைகொண்ட தன் மாணவனை அடைதலே என அவர்கள் அறிகிறார்கள். //
இவை எல்லாம் வெண்முரசின் ஒரு அத்தியாயத்தில் உள்ளவை. நம் சிந்தனையை தூண்டுபவை, ஒவ்வொன்றையும் எவ்வளவு வேண்டுமானாலும் விரித்தெடுக்கலாம்.
மையக் கதை ஒன்று அதன் போக்கில் சென்று கொண்டிருக்கையில்,இவ்வாறான தலை சிறந்த வரிகள் வராத ஒரு வெண்முரசு அத்தியாயம் கூட இல்லை என்று சொல்லிவிடலாம்.
மு.கதிர் முருகன்
கோவை