இனிய ஜெயம்
இருட்கனி மூன்றாம் அத்யாயம் அதில் கர்ணனின் இறுதி நிகழ்வு சித்தரிப்பு வெண் முரசு சித்தரித்த மரணத் தருணங்களில் மிக மிக தனித்துவம் வாய்ந்தது. காரணம் கர்ணன் இருதிக்கோலம் கண்டு நின்ற அக் கணம் முதல் கணம் மிகுந்த அதிர்ச்சி அளித்தாலும் துரியன் போலவே என்னுள்ளும் உள்ளே எந்தத் துயரும் இல்லை. காரணம் இந்த நிலை அளித்த ஆசுவாசம். ஆம் ஆசுவாசம்தான். கர்ணன் இனி கதிர் மைந்தனில்லை. முழுமை கொண்டுவிட்டான் இனி அவன் அந்தக் கதிரோனேதான். துறந்தோன் கடந்தோன் அமைந்தோன்.
வெண்முரசின் கர்ணன் கொண்ட தவிப்பு என்ன ? இன்று அது முற்றிலும் புறவயமாக விளங்குகிறது. கர்ணன் கொண்ட தவிப்பெல்லாம் முழுமை நோக்கிய தவிப்பே. அது வில் திறத்தால் இயல்வதல்ல, பெரு நட்பின் துணைக்கோடல் கொண்டு இயல்வதல்ல, நிலம் வென்றோ,அன்னையின் மடி கொண்டோ, திரௌபதியின் அண்மை கொண்டோ அடையக்கூடியதல்ல, இந்த உடல் கொண்டு இங்கே வந்ததாலேயே, அவன் கொண்ட முழுமையின்மை அது. இந்த உடலின் எல்லைக்குள் சிக்கியதாலேயே அவன் கொண்ட தவிப்பு அது. கொடுக்கும் தருணம் மட்டுமே அவன் கொள்ளும் உவகை அந்த முழுமையை அக் கணம் அவன் உணரும் கணங்களின் சாட்சி. அவன் உடலின் எல்லையைக் கடந்து முழுமையின் சன்னதில் ஒரு கணம் நிற்க அவன் கொண்ட கொடை குணத்தால் சாத்தியமாகிறது. அதன் பின். ?
பால்கிகரை இழந்த அக் கணம் அவரது வேழம் அங்காரகன் கொள்ளும் தவிப்பு என்ன ? முழுமையின்மை. அந்தப் பெருந்தவிப்பில் இருந்து அதை விடுவிக்கவே நீலன் உத்தரவிடுகிறான்.
''அர்ஜுனா அதை விடுதலை செய்'' .
யானை கொண்ட முழுமையின்மையின் தவிப்பை உணரும் நீலன் கர்ணன் முழுமைக்கு கொள்ளும் தவிப்பை அறியமாட்டான என்ன ? இந்த உடலால் எல்லைகட்டப்படும் வரை கர்ணனால் அடைய இயலா முழுமை அது. பார்த்தனின் துணை கொண்டு நீலன் கர்ணனுக்கு அளித்த விடுதலையை இதோ விப்ரதர் கண்டு கொண்டு விட்டார்.
இதுவரை அவன் கதிர் மைந்தன். இதோ இப்போது அவன் முழுமை கொண்டு விட்டான், துறந்து சென்றுவிட்டான், கடந்து சென்றுவிட்டான் கதிரோன் என்றே ஆகிவிட்டான் . கதிரோன் என கர்ணன் கொண்ட முழுமையில் மின்னும் அவனது பொற்கவசத்தை இதோ துரியனின் தோளருகே நின்று நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அனலோன், வெய்யோன் ,கதிரோன் வியாசரின் செல்லப் பேரன், எங்கள் பாரதப் பண்பாட்டின் இணையற்ற ஒற்றைப் பெருஞ்சொல் கர்ணன்
கடலூர் சீனு