அன்புள்ள ஜெயமோகன் சார்,
இமைக்கணத்தின் நான்காம் அத்தியாயத்தில் "நைமிஷாரண்யம் என்பது தேவர்களின் வேள்விநிலம். சூரியனின் அவிப்பெருங்கலம். சொல்பெருகும் காடுகளுக்கு நடுவே சொல்லவியும் பெருங்காடென அது முனிவரால் வாழ்த்தப்பட்டது என கூறபட்டிருக்கிறது. இதில் சத்யயுகம் பற்றி கூறப்படுகிறது, "சத்யயுகத்தில் முதல் சௌனக முனிவர் அதன் கரைக்காட்டில் தவம்செய்கையில் நீர் விளிம்பில் வேள்விசாலையை அமைத்து அகாலயக்ஞம் என்னும் பெருவேள்வி ஒன்றை ஒருக்குகிறார் "காலத்தை நிறுத்தி அதிலெழும் மெய்மையில் அமர்தலை வேட்டார். வேள்வி நிகழ்ந்துகொண்டிருக்கையில் அவிக்கொடை அளித்த சௌனகர் பிறிதொன்றென ஏதும் அகத்திலெஞ்சாமல் வேதச்சொல்லென்றே உளம் அமைந்தார். நடுவே அவிசொரியும்பொருட்டு மரக்குடத்தை எடுத்து அருகே ஓடிய நதியின் நீரை அள்ளப்போனார். தனக்கு இடப்பக்கம் மேற்கே ஓடிய நதியை வலப்பக்கம் கிழக்கென அவர் அகம் மயங்கியிருந்தது. மைந்தன் கைநீட்ட அவன் வேள்விக்குச் செவிலியென உடனிருந்த அன்னை அக்கணமே தன்னையறியாமல் கிழக்கே திரும்பி ஒழுகி அருகணைந்தாள்.நீரள்ளி வேள்விமுடிக்கும் வரை சௌனகர் அதை அறியவில்லை. அருகிருந்த அந்தணர் சொல்மறந்து திகைத்தனர். வேள்விமுடித்தெழுகையில் நதி திசைமாறி ஒழுகிய செய்தியை அவரிடம் அந்தணர் சொல்ல அவர் “பிறிதொன்று எண்ணுவாளோ அவள்?” என்று மட்டுமே உரைத்தார். அன்னை கனிந்த அக்கணத்தை அழியாது நிறுத்த அதன் கரையிலமைந்த காட்டுக்கு இமைக்கணக்காடு என்று முனிவர் பெயரிட்டார்.
அகாலயஞ்சம் என்றால் என்ன ? சரஸ்வதி நதி என்ன ? அது ஏன் திரும்புகிறது ? ...காலமே தானா? கால மயக்கங்களா? ..............சத்யயுகத்தின் இறுதியில் முனிவர்கள் பிரம்மனிடம் சென்று “தந்தையே, காலமின்மையில் நிற்பது எதுவோ அதுவே மெய்மையும் அறமும் வேதமும் ஆகும். காலத்தைக் கட்டிநிறுத்தும் கலைதிகழ்வதனாலேயே இதை சத்யயுகம் என்றனர். இனிவரும் யுகங்களில் காலம் மேலும் மேலும் விசைகொள்ளும். கிருதயுகத்தில் காலம் இருமடங்கு விரைவடையும், மானுடர் உயிர்க்காலம் பாதியெனக் குறையும். திரேதாயுகத்தில் அது மேலும் ஒருமடங்கென்றாகும். துவாபரயுகத்தில் இன்னொருமடங்காகும். கலியுகத்தில் பிறிதொருமடங்காகி வாழ்வகவை சுருங்கும்” என்றனர். பொறந்ததும் தெரியல ....வாழ்ந்ததும் தெரியல என்று புலம்புவதற்கு இதுதான் காரணமா? “வாழ்வே மெய்மையை அறமெனச் சமைக்கிறது. காலம் உருமாறும்போது அறம் திறம்பிழைக்கலாகுமா? அன்று பன்னிருகால்கொண்டு பாயும் அப்புரவியில் அமர்ந்திருக்கையில் நாங்கள் காலமின்மையை எப்படி உணர்வோம்? எங்கு சென்று அகாலத்தின் பீடத்தில் அமர்ந்து யோகம் பயில்வோம்? என பிரம்மனிடம் கேட்க அவர் "காலம், மெய்மை, செயல்விளைவு " கொண்டு ஒரு ஆழியை உருட்டிவிட சரஸ்வதி நதியின் மகளாகிய கோமதி பாயும் இடத்தில் உள்ள "நைமிஷாரண்யத்திற்குள் " வர அங்கு குடியேறுகின்றனர். சத்யயுகத்திலேயே சரஸ்வதியை காணவில்லையா? அப்போ இப்போ நாம் வழிபடும் சரஸ்வதி யார்? "ஏன் அவள் நூறு மகள்களை பெற்றுடுத்துவிட்டு மறைந்து போனாள்? அந்த நூறு மகள்கள் யார்?
நைமிஷாரண்யத்தில் இலைகளும் இமைப்பதில்லை. இமைக்கையில் உலகம் அழிந்து பிறிதொன்று பிறக்கிறது. இமைக்கண உலகங்களைக் கோத்து நிலையுலகு சமைப்பது மாயை.காலத்தைக் கடந்து நிற்கும் மெய்யைத் தேடும் வேள்விகள் அங்கே இயற்றப்படவேண்டும்.காலமிலியில் அமர்ந்த காவியங்கள் அங்கே சொல்லப்படவேண்டும் ஆதலால் அது இமைக்கணகாடு.
ஸ்டீபன் ராஜ் குலசேகரன்