Friday, April 12, 2019

ஒப்பிலி



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

”ஒப்பிலி வள்ளலை ஊழிமுதல்வனை எப்பரிசாயினும் ஏத்துமின்.”  ஒப்பிலி வள்ளலை ஏத்தித் தொடங்கிய முதல் அத்தியாயம்.  திசைகள் எங்கும் பரவியுள்ளது கர்ணன் புகழ்.  புகழ்வோரும் பொய்யாய் புகழ்வோர் அல்ல உளப்பூர்வமாக அவனிடம் பெருமதிப்பு கொண்டோர்.  இருட்கனி தரவிருப்பதென்ன என்றொரு குறிப்புணர்த்தி ஆவல் கொண்ட இரவலனாக நிறுத்தி இருக்கிறது.

எவ்வளவு அழகான அத்தியாயம்?

துறவுள்ளம் கொண்டவனாகவும் இரவலனாகவும் இல்லாதவன் வள்ளல் ஆவதில்லை.  வள்ளலாகவும் இரவலனாகவும் இல்லாதவன் துறவி ஆவதில்லை.  துறவியாகவும் வள்ளலாகவும் இல்லாதவன் இரவலன் ஆவதில்லை.

போலி வள்ளன்மை போலி இரவலர்களை ஈர்க்கிறது.  கனிந்து பெற்றுக்கொள்ள வருகிறது பெருங்கருணை கனிந்து தரும் பெருங்கருணையிடம்.  தராசின் தட்டுகள் இரண்டையும் சமன்செய்து ”ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்குத்தானே கொடுத்துக் கொள்கிறான்” என்று தவம் அருள்கிறது துறவு.

இரவலன் அர்ஜுனனை வள்ளல் கர்ணன் முன்நிறுத்தி ”இவனிடம் பெற்றுக்கொள் உயர்வடைவாய்” என்கிறான் கண்ணன்.

அன்புடன்
விக்ரம்
கோவை