Monday, April 15, 2019

இருட்கனி தொடக்கம்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின் 3ம் அத்தியாயம் முழுதும் நாவல் பழம் ஞாபகம் வந்துகொண்டே இருந்தது.சாப்பிட்டுவிட்டு தூர எரியும் கொட்டையை போல் கர்ணன் இடுகாட்டில் கிடக்கிறான். கொஞ்சமே கொஞ்சம் இருக்கும் இனிய தசை பகுதியையும் சாப்பிட்டுவிட்டு வெறும் கொட்டையை எறிந்துவிடும் உலகம். ஆனால் அதில் துவர்ப்பும் கலந்து இருக்கும். எல்லா கனிகளும் இரட்டை சுவை உடையதுதானா?,அதனால்தான் மனிதர்களுக்கு கனிகளின் மீது அத்தனை மோகமா?  வெண்முரசில் மனிதர்கள்......ஆணும் பெண்ணும்......மேக்கப் போட்டுகொள்வதும்,ஆடை அணிகலன்கள் மாட்டிகொள்வதும்[ பெரும் விருப்பத்தோடும், ஏக்கத்தோடும்] விரிவாய் வந்துள்ளது. ஆனால் விரிவாய்  ஒரு அரசனுக்கு  இறுதி அணிகலன் மாட்டிவிடும் சடங்கு முதலில் இப்போதுதான் வருகிறது.கர்ணனுக்கு துரியோதனன்  தான் அரசன் என்பதை துறந்து சாதாரணனாக மாறி அணி செய்வது நெஞ்சை பிசைகிறது.சுப்ரதர் வாழ்வு இரண்டு பத்திகளில் திடீர் என விரிந்து செல்கிறது. உண்மையான அந்தணன் என எண்ணிக்கொண்டேன். 

கார்கடலின் 4ம் அத்தியாத்தில் "பாலைவன ஓநாய்" சகுனி வருகிறார்.குடித்த ரத்தம் பத்தாமல் இன்னும் மிச்சம் இருக்கிறவர்களின் ரத்தம் தேவை என்பது போல. துரியோதனன் ஏன் கர்ணனின் உடல் அருகிலேயே நிற்க விரும்புகிறான்? என்று மூன்றாம் அத்தியாயத்தில் கேள்வி எழுந்தபடியே இருந்தது. ஆனால் இங்கு அவன் கர்ணன்- தான் ஏன் அப்படி நட்போடு இருந்தோம் என்பதற்கான விடையை தொகுத்துகொள்கிறான். வாழ்நாள் முழுதும் தேடிய விடையாய் இருக்கலாம். சுப்ரதர் கூறுகிறார்" இடுகாட்டில் எவரும் நெடும்பொழுது நின்றிருக்கலாகாது. இடுகாடு இறந்தவர்கள் விட்டுச்செல்லும் இறுதி எண்ணங்களால் நிறைந்தது. அதில் ஆற்றாமையும் வஞ்சினமும் வெறுமையுமே மிகுதி. அவை நம்மில் வந்து படியக்கூடும்.நம்மை ஊர்தியெனக் கொள்ளவும் கூடும். சிதையேற்ற ஒரு நாழிகை, சித்தத்தில் மூன்று நாழிகை என்று. இது உண்மையா? ..... எனக்கு இன்றும் இடுகாடு செல்லவேண்டும் என்பது போலவே தோன்றுகிறது. யாரோ ஒருவரின் வஞ்சினமும், ஆற்றாமையும் வெறுமையும் கூட வந்தால் நல்லதுதான் என்பதுபோல...சகுனி மீண்டும் போர்களத்திற்கு [ இறந்தவர்களை புதைத்துவிட்டு மீண்டும் வரும் நமது உலகமா?] செல்வதை பற்றி கசப்புடன்  “இங்கே நாம் மீண்டுசெல்வதும் ஒரு பெரும் சுடலைக்காட்டுக்கே. அங்கு மங்கலங்கள் என்பவை கொல்லும் படைக்கலங்களே” என கூற  சுப்ரதர் “ஆம், ஆனால் வெற்றிமகள் அங்கு தான் தோன்றும் அனைத்தையும் மங்கலமாக ஆக்கிவிடுகிறாள்” என்கிறார். சகுனி “அவளைத்தான் வணங்கி எழுப்ப முயல்கிறோம்” என்கிறார். இவர்கள் உணமையிலே தேவர்கள்தான். எதுவும் யாரும் பொருட்டில்லை என்றால் எதற்கு வாழ்வது? அதனால் தான் ஊழ் இவர்களை சுற்றி நின்று காக்கிறது போலும்.

துரியோதனன் அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் என்ன வேறுபாடு என ஆராய்கிறான் ." உடல் பெரும்பாலும் ஒன்றே. ஆனால் எவரும் உணரும் ஒன்று மாறுபட்டிருந்தது” என்கிறான். பூரிசிரவசிடம்  கேட்டதையும் அதற்கு பூரிசிரவஸ் [மலையில் இருந்து வந்தவன். ஆகையால் இங்கு உள்ள எல்லாவற்றையும் புதிதாக அளந்து மதிப்பிட்டு கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தவன். இப்போதும் சென்னையில் நான் இப்படிதான் சுற்றி கொண்டு இருக்கிறேன். உங்களின் வெற்றி சிறுகதையில் வரும் " மேலே செல்ல செல்ல இரும்பு மனிதர்களையே காண்பாய் " என்பது வேறு ஞாபகம் வருகிறது]  ......."அர்ஜுனனிடம் நீங்காது ஒரு பெண்கூறு உள்ளது, கர்ணனோ ஆண்மை முழுத்தவர் என்று". துரியோதனன் மேலும் கூறுகிறான் ...."அர்ஜுனன் பிறிதொருவரால் அன்றி நிரப்பமுடியாத ஆளுமை கொண்டவன். அதையே பெண்ணியல்பு என நாம் உணர்கிறோம். அங்கர் பிறர் ஒருதுளிகூடத் தேவையற்றபடி முழுமையடைந்தவர்…அதை ஆண்மை என எண்ணிக்கொள்கிறோம்.” இது எனக்கு இப்போதுதான் புரிகிறது. ஏன் என்றால் எப்படியெல்லாம் எண்ணி பார்க்கும் வாழ்க்கைக்குள்ளே நான் இல்லை. உண்மையிலே இதுதான் பெண்ணியல்பா? 

துரியோதனன் தனக்கும்  கர்ணனுக்குமான வேறுபாடு என்ன என்று  எங்கு நின்று கூறுகிறான்?...."“தம்பியர் நூற்றுவர், மைந்தர் ஆயிரத்தவர், குடிகள், நண்பர், அணுக்கர்… நான் பல்லாயிரம் வாயில்கள் கொண்ட மாளிகை…அங்கரைப்போல அல்ல.எனினும் எனக்கு அங்கர் தேவைப்பட்டார். ஏன் என்று இங்கே நின்று எண்ணிக்கொள்கிறேன்,"“எனக்கு எல்லாமே வேண்டியிருக்கிறது… நாடு,செல்வம்,புகழ்,சுற்றம்.நாடும் செல்வமும் புகழும் தேடும் ஒருவனால் சுற்றமின்றி அமைய இயலாது”[இது சக்கரவர்த்திகளுக்கு உரிய குணம் என்று வெண்முரசில் ஒரு இடத்தில் வருகிறது. ஆனால் சக்கரவர்த்தியாய் இருந்த துரியோதனனுக்கு சொல்லபட்டது போல் சரியாய் பொருந்துகிறது].துரியோதனன் "நான் எனைச் சார்ந்தவர் அனைவருக்கும் கொடுத்துக்கொண்டிருந்தேன். அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டுமிருந்தேன். மூச்சோட்டம்போல் அது நிகழ்ந்துகொண்டிருந்தது என்கிறான். ஆனால் தனக்கும் கர்ணனுக்கும் ஆன உறவை குறித்து "எதையும் கொடுக்கவோ பெறவோ செய்யாமல் நிகழ்ந்த உறவு எனக்கும் அங்கருக்குமானது.....அங்கர் மாபெரும் வள்ளல். இங்கே அனைவரும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டவர்கள்தான். நான் அல்ல. வள்ளல் என்னும் அந்த மணிமுடியையும் கழற்றிவிட்டு இருக்கும் ஒரே இடம் என்னுடைய அருகமைவுதான் போலும்” என்கிறான். அனைவரும் அவரவருக்கு தேவையான உறவை தேடுவதும்,அதில் நிறைத்து இருப்பதும் இயல்பாய் நடக்கும் போல. கண்டுகொண்டு ,முரண் கொள்ளாமல் அமைந்திருகிறவர்கள் பாக்கியவான்கள் தான். 


சகுனி "கர்ணன் தெய்வம் ஆகிவிட்டான்....தெய்வங்கள் தனிமையில் இருக்கின்றன" என்கிறார்.யாரை சொல்கிறார்? கர்ணனையா? தன்னை குறித்தா?  சூதர்கள் பாடுவார்கள் போலும்...

ஸ்டீபன்ராஜ்