இனிய ஜெயம்
புதுவை வெண் முரசு [வெள்ளிவிழா] கூடுகை இனிதே நிகழ்ந்தேறியது. ஹெகைய பார்கவ குலங்களின் தலைமுறைகளாக தொடரும் வஞ்சத்தின் கதையா விரிவாக பகிர்ந்து கொண்டார் விஜயன் அவர்கள்.
கூடுகை நண்பர்கள் அனைவருமே இன்றைய மொத்த பாரதப் போரின் சித்தரிப்பும் அன்றே வந்து விட்ட தருணங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்கள்.
குறிப்பாக மேலான அறம்,அரச அறம்,விலங்கு அறம் என மூன்றையும் துறந்து கார்த்தவீர்யன் ஜமதக்கினி ரிஷியின் சிரம் கொய்யும் சித்திரம்.
திருமாவளவன் தனது ஊர் பகுதியில் நிகழும் கார்த்தவீர்யன் கூத்து குறித்து சொன்னார். தாமரைக்கண்ணன் நெல்லை ஸ்ரீ வைகுண்டம் கோவிலில் கண்ட கார்த்தவீர்யன் பார்க்கவராமன் சமர் குறித்த புடைப்பு சிற்பம் குறித்து பகிர்ந்து கொண்டார்.
பொதுவாக அனைவருமே நெற்குவை நகர் பகுதியில் அருகர் சன்னதியில் நிகழும் உணவு உபசரிப்பில் ஊழை உப்பக்கம் கண்டு நிகழும் உரையாடலை ரசித்துப் பேசிக்கொண்டோம் .
கீகடர் கதாபாத்திரம் முழுமையாக உருவாகி வந்திருக்கும் அழகு குறித்தும், இத்தனை வஞ்சம் நுரைத்துக் குமிழும் சூழலில், அருகர்கள் வணக்கம் முளை பெற்று நிற்கும் தருணம் குறித்தும், பீமனும் துரியனும் முதல் முதல் சந்திப்பு துவங்கி இன்றைய நெற்குவை நகர் அத்யாயத்தில் அவர்கள் இருவரும் சம ஆற்றல் கொண்டு நிறை நிலையில் எந்த உணர்வும் இன்றி ஒருவரை ஒருவர் நோக்கிக் கொள்வது வரை, பார்வைகள் வழியாக மட்டுமே இந்த இருவர் மத்தியில் தோன்றி வளர்ந்து நிலை கொண்டு காத்து நிற்கும் வஞ்சம் குறித்தும், அந்த வஞ்சம் ஐந்து நிலைகள் வழியே மனிதர்களுக்குள் குடியேறுவதை இந்த அத்யாயம் எவ்வாறு சூதர்கள் சொல் வழியே வர்ணிக்கிறது,அந்த வர்ணனை எவ்வாறு நாடகீயமாக பீமன் துரியன் இடையே சித்திரரிக்கப்படுகிறது என்பனவற்றை இறுதியாக நான் பகிர்ந்து கொள்ள கூடுகை இனிதே நிறைவடைந்தது.
கடலூர் சீனு