அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வெண்முரசின் நாவல்களுக்கு இடையில் இப்படி ஏற்படும் சிறு இடைவெளி, வருடக்கணக்காக காலை கண் விழித்ததும் மின்னஞ்சலில் வந்திருக்கும் அன்றைய அத்தியாயத்தை உள்பெட்டியில் நுழைந்து வாசித்து விட்டே நாளைத்துவங்கும் எனக்கெல்லாம் பெரும் தொந்தராவான நாட்களாக இருக்கும்.
ஏதோ ஒரு வழமை முற்றிலும் விடுபட்டுப்போனது போல, எதையோ தொலைத்தது போல, மிக வேண்டியவர்களை இழந்தது போல சோர்வாகவே இருப்பேன்
அதன்பின்னரான நாட்களில் தளத்தில் முதலில் பார்ப்பது அடுத்த நாவலுக்கான அறிவிப்பு எதாவது வருகின்றதா என்றுதான். அதுவரையிலும் வெண்முரசின் முந்தைய நூல்களை மீள வாசிப்பேன்.
வானோக்கி ஒரு கால் இரண்டு பதிவுகளும் வாசித்ததும் நிச்சயம் சில நாட்களுக்குள் அடுத்த நூலை எழுதுவது குறித்து அறிவிப்பீர்கள் என்று நம்பிக்கை வந்தது
இருட்கனி அறிவித்ததும் நாட்களை எண்ணத்துவங்கிவிட்டேன்
மகாபாரதத்தை சிறுவயதிலிருந்தே கேட்டும் வாசித்துமிருந்தாலும் மிகத்தெரிந்த ஒரு இடத்திற்கு வெண்முரசு முற்றிலும் புதிய, மிகவசீகரமான வழிகளில் என்னை கூட்டிச்செல்வதால் அதன் மீதான் எதிர்பார்ப்பும் பிரியமும் மிக மிக அதிகம் எனக்கு.
சமீபத்தில் கொம்மை வாசித்தேன். முழுக்க வெண்முரசுக்கு வேறுபட்ட நடை. அது 4 நாட்களில் வாசித்து முடித்துவிட்டேன். அர்ஜுனன் கிருஷ்ணனை ’கிச்சு மச்சான்’ என அழைப்பதும் குந்தி காந்தாரியெல்லாம் சாதாரண ஓர்ப்படிகளைப்போல சண்டையிட்டுக்கொள்வதும் பாண்டவர்களின் பிறப்புக்கெல்லாம மிகப்புதிய இதுவரை எந்த வடிவிலும் கேட்டே இராத காரணங்களை கொடுப்பதுமாய் , வெண்முரசின் தீவிர வாசகியான எனக்கு அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியை கொடுத்தது கொம்மை.எனினும் நாட்டார் வழக்கில் மகாபாரதத்தினை வெண்முரசு நிகழும் காலத்திலேயெ வாசித்தது வித்தியாசமான அனுபவமாயிருந்தது
உங்களின் தனிமைப்பயணத்தில் கண்ட சிலைகளைப்போலவெ எங்களூருக்கு பக்கத்தில் திண்டுக்கல்லுக்கு அருகில்இருக்கும் தெலுங்கில் பனைக்கூட்டம் என்று பொருள்படும் தாடிக்கொம்பு என்னுமிடத்தில் ஒரு பெருமாள் கோவில்இருக்கின்றது பல வருடங்களாகவே அங்கு போகனும்னு நினைத்திருந்தும் கடந்த ஜனவரியில்தான் போக முடிந்தது. ஏறக்குறைய இதே போன்ற சிலைகள் வானைச்சுட்டும் ஒற்றைக்காலுடன் விஷ்ணு, ரதி மன்மதன், ராமரை தோளிலேற்றிய ஆஞ்சனேயர், வாளுடன் வீரபத்ரர், ஆண்டாளும், விஸ்வக்ஷேனரும், கிருஷ்ணனுமாய் அழகுச்சிலைகள் அங்கிருந்தன.நீங்கள் குறவனின் சிலையை தாடிக்கொம்பில் பார்த்திருப்பதாக ஒரு பதிவில் சொலியிருக்கிறீர்கள் .
ரதி மன்மதன் சிலைகளை பார்க்கக்கூட முடியாத அளவிற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள் இளம் பெண்களும் ஆண்களும் . அங்கு ரதி மன்மதனை வழிபட்டால் திருமணத்தடை நீங்குமாம். திருமணம் ஆனதற்கு எங்காவது பரிகார சிலைகள் இருக்கான்னு விசாரிக்கனும்னு நினைச்சுக்கிட்டேன்
பெரும்பாலான் சிலைகளுக்கு கம்பி கட்டி ஒரு பரிகார அறிவிப்பு பலகை தொங்கவிட்டிருக்கிறது.
திருடுபோன பொருட்கள் திரும்ப கிடைக்க ஒரு சிலை, புதிய வாகனங்கள் வாங்கினால் சாவியை பூசை செய்ய , தொழிலில் நஷ்டமானால் , உறவில் விரிசலென்றால் , குழைந்தையின்மைக்கு இப்படி நம்பிக்கை இருப்பதால் எப்போதும் பரிகார பூஜைகளுக்கென நல்ல கூட்டமிருக்குமென்றார்கள். எல்லா சிலைகளுக்கும் வேஷ்டியும் துண்டும் உடுத்தப்பட்டிருந்தது. பிரசாதமாக நெய்வழியும் அக்கார அடிசில் கிடைத்தது
வரிசையில் நிற்கும் ஆளுயரத்திற்கும் சற்று பெரிதான அழகுப்பெண்களின் சிலைகளின் வனப்பிலிருந்து கண்ணெடுக்கவே முடியாத அளவிற்கு அவையெல்லாம் கொள்ளை அழகு. //சிற்பங்கள் என்பவை கல்லில் பொறிக்கப்பட்ட வடிவங்கள் அல்ல. கல் வழியாக நிகழ்ந்து செல்லும் காலத்தின் ஒரு தருணம்// என்று ஒருமுறை எழுதியிருந்தீர்கள். அவற்றைன் எதிரே நின்று பார்க்கையில் நான் அதைத்தான் நினைத்துகொண்டிருந்தேன்.
நான் அதிகம் பயணித்ததில்லை இப்போதுதான் துவங்கியிருக்கிறேன் என்றாலும் நான் பார்த்த கோவில்களிலேயே மிக அதிகமும் அழகுமாக இங்குதான் சிலைகள் இருந்தன என்று நினைக்கிறேன். வரும் சித்திரையில் 5 நாட்கள் விசேஷம் என்றும் சொன்னார்கள். அப்போது கோடை விடுமுறையென்பதால் போகலாமென்றிருக்கிறேன்
இருட்கனிக்கென காத்திருக்கிறேன்
அன்புடன் லோகமாதேவி