Saturday, February 7, 2015

மெளனமெனும் காலகையும், ஒலியெனும் புலோமையும்



அன்பு ஜெயமோகன்,
     
     விறலி சொல்லத்துவங்கிய காலகவனத்தின் கதையில் குளிர்ச்சியைக் காட்டிலும் வெம்மையே மிகுந்திருந்தது. சொல் மேல் சொல் அமர்ந்து சொல்லடங்கிச் சுருங்கிய சித்திரமாக காலகையையும், சொல் கலைந்து சொல் எழுந்த சித்திரமாக புலோமையையும் விறலி அறிமுகப்படுத்துகிற முறையே அழகு.

தேர்ந்த நுட்பத்தோடு காலகையை அசைவறியாச் சொல் என்றும், சொல்லுக்கு அப்பால் செல்லாத அகம் என்றும் விறலி குறிப்பிடுகிறாள். அப்போதே புரிந்து விட்டது, காலகை காலத்திலும், கதையிலும் தொடரமாட்டாள் என்பது. தன்னிலே நிறைந்தவருக்கு கால, வெளி தேவையில்லை. அதனால் அவளுள் அவள் நிரம்பினதும் ’நிறைவு’ சாத்தியமாகி விட்டது; நிறைவு சாத்தியமானதும் மெளனமாகிப் போகிறாள்.

புலோமையை விறலி உயிர் கனலும் சொல் என்றும், சொல் உடைந்து சொல் முளைக்கும் சித்தம் என்றும் குறிப்பிடுகிறாள். புலோமை தன்னில் நிறைவடையத் தெரியாதவள். அதனால்தான் புவியைத் தனக்குள் நிரப்பிக்கொண்டு ‘நிறைவை’க் காண காடிறங்கி ஊர் வருகிறாள். பல்வேறு அசைவுகளைக் கொண்ட சொல்லாக உருமாறிக் கொண்டே இருக்கிறாள்.

எப்போதும் நிறைவடையாதவனாகவே கருதிக் கொண்டிருக்கும் எனக்கு புலோமையும், காலகையும் திகைப்பூட்டினார்கள். நான் சொல்லடங்கி இருக்க வேண்டுமா, சொல் கலைந்து சொல் எழுந்தவனாக இருக்க வேண்டுமா.. இருபுறமும் நின்று கொண்டு இருவரும் கைகொட்டிச் சிரித்தனர். என்னால் என்னிலே நிறைவடைந்து விடும் சாத்தியம் மிகக்குறைவு. மேலும், சொல்லடங்கி இருக்கவே முடியாது; “சும்மாஇரு சொல்லற” எனும் காலகையின் மனநிலைக்கு வந்துவிடவே இயலாது. நிறைவடையாமல் இருக்கும் நான் புலோமைதான். கால வெளியில் எனக்கான இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதன் வழியாகவே நிறைவைப் பெறமுடியும் எனத்தீவிரமாக நம்புவதால் நான் புலோமைதான். அதனால்தான் என் எண்ணங்களின் மிகுவெப்பத்தை நான் மேலும் ஊக்குவிக்கிறேன். செயல்களாக அவை வளர்ந்து நிற்கும்போது ரசித்துப்பார்க்கிறேன். சொல்லப்போனால், கால இட எல்லைகளுக்குட்பட்டிருக்கும் ஒவ்வொருவரும் புலோமைதானோ என்று படுகிறது.  என்றாலும், புலோமைகளான நாம் நம் செயல்களால் திரும்பத் திரும்ப நிறைவின்மைக்கே வந்து சேர்கிறோம்.

புலோமையின் வாழ்வில்தான் பகுத்தறிவும், மாறாத நெறியும் பேசப்படுகின்றன. மாறாநெறியின் பக்கம் நிற்பதா, பகுத்தறிவின் பக்கம் நிற்பதா..அக்னிதேவனின் குழப்பம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழமாய் இருக்கிறது. பலர் மாறாநெறியின் பக்கம் நின்றுகொள்ள, சிலர் பகுத்தறிவின் பக்கம் அணிவகுக்கின்றனர். இங்குதான் தனிமனிதன் குழுக்களாக மாறித் தன்னைத் தொலைத்துக் கொள்கிற அவலம் நேர்கிறது. மாறாநெறியினர் பகுத்தறிவைக் குறைசொல்வதிலேயே காலத்தைக் கழிக்க, பகுத்தறிவுக்குழுக்கள் மாறாத நெறியினரைத் தூற்றுவதிலேயே நேரத்தைக் கடத்த.. எரிந்து கொண்டிடே இருக்கிறது நெருப்பு. அந்நெருப்பில் குளிர்ச்சியை வசதியாய் மறந்தும் போய்விடுகிறோம்.

காலகை தனிமனிதனின் குறியீடாகத் தெரிய, புலோமையோ குழுக்களின் குறியீடாகத் தெரிகிறாள். வேறுவகையில் சொல்வதனால் இப்படி சொல்லலாம். சமூகத்தின் பார்வையைத் தன் பார்வையாகக் கொண்டவன் புலோமை. சமூகத்திலிருந்தாலும் தன்பார்வை தனி என உணர்ந்தவன் காலகை.
தன்னிலே தான் நிறைந்து அகத்திலே நிறைவுறும் ‘காலகையை’ புறத்திற்கு இழுத்து வந்து சிக்கல்களுக்கு ஆட்பட்டுவிடும் ‘புலோமையாக’ மாற்றுகிற வல்லமை பெற்றது உலகு. உலகின் பிடியில் இருக்கிற ஒருவன் புலோமையாகவே இருப்பான். எப்போது தனக்குள் இருக்கும் உலகிற்கு நகரத் துவங்குகிறானோ அக்கணமே அவன் காலகையாக மாறத்துவங்குகிறான்.

முருக வழிபாட்டோடும் இதைப் பொருத்திப்பார்க்கலாம். மயில் எனும் உலக வாழ்வின் மாயத்தில் லயித்து நிற்பவன் பாம்பு எனும் புலோமையாக மயிலின் காலடியில் சிக்குற்றவனாக இருக்கிறான். தன்னைக்குறித்த உண்மையைக் கண்டுகொள்ள தன் அறிவைப்(வேல்) பயன்படுத்துகிற ஒருவன் சேவல் எனும் காலகையாக விழித்து மேலெழும்புகிறான். விழித்துக் கொண்டவனுக்கு முருகனே எல்லாமாக இருக்கிற தெளிவு கிட்டுகிறது; தான் முருகனின் சிறுதுண்டு எனும் உச்சகட்ட பரவசமும் சாத்தியமாகிறது. தொடர்ந்து ஒருவனால் காலகையாக இருந்துவிட முடியுமா எனத் தெரியவில்லை. வேண்டுமானால், புலோமை எனும் சித்திரம் நாம் உருவாக்கிக் கொண்டது எனும் புரிதலாவது கிடைத்தால் போதும்.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.