மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த ஊரில் இறங்குகிறார்கள். அங்கு விடுதிகளில் அறை எடுத்து தங்குகிறார்கள். புதிய நட்புகள் உறவுகள் உருவாகின்றன. சிலர் அந்தவூரை சுற்றிப்பார்த்து அனுபவிக்கிறார்கள். சிலர் அந்த ஊரின் நலத்திற்கென பல பணிகளை செய்கிறார்கள். எப்படி இருப்பினும் அந்த ஊரை விட்டு அனைவரும் சிலநாட்களில் வெளியேற வேண்டும். அது அவர்கள் அவ்வூருக்கு உள்ளே நுழையும்போதே சொல்லப்பட்ட விதி. சிலர் அதை மறந்ததைப்போல் நடந்துகொண்டாலும் இது வரை யாரும் இங்கே நிரந்தரமாக தங்கியதில்லை.
ஊருக்கு வந்த சில நாட்களிலேயே அந்த ஊரில் இருக்கும் மலைச்சிகரத்தை அடையவேண்டும் அந்த நோக்கத்திற்காகத்தான் இந்த ஊருக்கு வந்திருக்கிறீர்கள் என பலரால் அறிவுறுத்தப்படுகின்றனர். அம்மலை ஊரை ஒட்டி இருப்பதால் ஊரில் உள்ள உயர்ந்த கட்டிடங்களால் மறைக்கப்பட்டிருக்கிறது. அதனால் சிலர் அப்படி ஒரு மலை இல்லவே இல்லை எனச் சொல்கிறார்கள். அப்படியே இருந்தாலும் எனக்கென்ன என இருக்கிறார்கள். 'எப்படியோ வந்துவிட்டோம், அனுமதிக்கும்வரை தங்குவோம் வெளியில் அனுப்பும்போது போய்விடுவோம்' என்பது அவ்ர்கள் நிலைப்பாடு.
ஆனால் பலர் 'வெறுமென சிலநாள் தங்கிச் செல்லவா இங்கே அனுப்பப்பட்டோம். அப்படியென்றால் நாம் இங்கு வந்து செல்வது வெறும் அபத்தமான வீண் செயல் என ஆகிறதே' எனச் சொல்கிறார்கள். அவர்கள் அந்த மலையை ஏறவேண்டும் என நோக்கம் கொள்கிறார்கள். அப்போது பலகுழுவினர் அவர்களை அணுகுகிறார்கள். ஒவ்வொரு குழுவினரும் மலையேறுவதற்கு ஒவ்வொரு வழிகளை கூறுகின்றனர். அது இயல்பானதுதான் ஒரு பெரிய உயர்ந்த மலையை ஏற பலவழிகள் இருக்கலாம் அல்லவா? பெரும்பாலானோர், அவ்வூருக்கு வந்த நாளில் அவர்கள் கண்ணில் பட்டு பழகிய குழுவினரோடு சேர்ந்துகொள்கிறார்கள். இருப்பினும் ஒவ்வொரு குழுவினரும் மற்ற நபர்களை தம் குழுவில் சேர்த்துக்கொள்ள முயல்கிறார்கள்.
அப்பெருமலையின் அடிவாரத்தை சுற்றி அமைந்திருக்கிறது அந்த ஊர். மேற்கு பக்கம் இருக்கும் ஊர்ப்பகுதியில் மூன்று பெருங் குழுக்கள் உள்ளன. அவை தங்களுக்கென இறுக்கமான விதிமுறைகளையும், மலையேறுவதற்கான மாற்றம் செய்யமுடியாத கையேடுகளை வைத்திருக்கின்றன. அதை சரியாக பின்பற்றி மலையேறினால் மட்டுமே சிகரத்தை அடைய முடியும் என்றும் அந்தக் கையேட்டின் வழிகாட்டுதலை சரியாக பின்பற்றாதவர்கள், மற்றும் மற்ற குழுவைச் சார்ந்த அனைவரும் ஒரு பெரும் பள்ளத்தாக்கில் விழ நேரிடும் என்ற நம்பிக்கை உடையவர்களாக அவர்கள் இருக்கின்றனர்.
கிழக்கு பக்கம் இருக்கும் குழுக்கள் அவ்வளவு இறுக்கமானவை அல்ல. இந்தப் பக்கத்தில் இருக்கும் நபர்கள் தங்களுக்கான் கையேடுகளை முதலில் நெடுங்காலமாக இருக்கும் பல்வேறு கையேடுகளிலிருந்து தொகுத்துக் கொள்ளலாம். அந்தக் குழுவினரின் விதிமுறைகள் காலத்திற்கேற்ப மாற்றம் கொள்ளும். அதில் பயணிக்கும் ஒருவர் தன் அனுபவத்தை பிறருக்கு தெரியப்படுத்தி பின்வருபவரை ஊக்குவிக்கிறார். அதனால் பழம்பெறும் கையேடுகளில் நீட்சியாக தோன்றிய பல்வேறு கையேடுகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது இப்பகுதியில் காணக் கிடைகின்றன. அதில் சிலர் நான் சிகரம் பார்த்தவன் அல்லது சரியான வழி எனக்கு தெரியும் என்று கூறிக்கொண்டு என் வழியே வாருங்கள் என அழைக்க அவரை நம்பி அவர் பின்னே சிலர் குழுவென திரண்டு செல்வார்கள். சிலர் மலை ஏறுவதற்காக உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்குவதை முக்கியம் எனக் கொள்வார்கள். சிலர் ஒன்று சேர்ந்து இசைக்கருவிகள் இசைத்து பாடல்களை பாடிக்கொண்டு சென்றால் எளிதாக இருக்கும் என நினைத்து செல்வார்கள். ஒற்றைக்கயிறை பிடித்து சிலர் மலை மேலேறி சிகரம் சென்றதாக சொல்லப்படுகிறது. சிலர் சிறிது தூரம் ஏறி ஒரு சிறு சிகரத்தை அடைந்து இதுவே போதும் என அமர்ந்து விட்டவர்கள் உண்டு. மேலே போக போக பாதைத் தடங்கள் குறைந்துகொண்டே சென்று இல்லாமல் போய்விடும்.
அதற்கப்புறம் மேற்கொண்டு தடங்கள் இல்லாத பரப்பில் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கான பாதையை தானே கண்டறிந்து மேலே செல்லவேண்டும் என சொல்வார்கள். கையேடுகளில் மேற்கொண்டு செல்ல குறிப்புகள் இருக்காது. கண்ணுக்கு தெரியாமல் முகில் கூட்டதின் மேலே மறைந்திருக்கும் அந்தச் சிகரம், எதோ ஒரு வகையில் மனிதர்களை தன்பால் ஈர்க்கிறது. அந்த பெருமலையின் சிகரம் நோக்கி அடிவார ஊரிலிருந்து மக்கள் சிற்றெறும்புகளைப்போல் பல்வேறு வரிசைகளில் மேலேறுகிறார்கள்.
வெண்முரசு இன்று அந்தச் சிகரத்தை நோக்கி அருகர்கள் பயணிக்கும் ஒரு வழியை காட்டுகிறது. ஒரு ஆசானாக எனக்கு இன்று அதைப்பற்றிய அறிவை கூட்டி இருக்கிறது. அருகர்களின் வழி, ஒரு எளிய பாதையாக தெரியவில்லை. ஆனால் அப்பாதை சிகரம் நோக்கி நீண்ட தூரம் அழைத்துச்செல்லும் எனத்தோன்றுகிறது. அது ஒருவேளை மற்ற அனைத்து பாதைகளையும் தாண்டி இன்னும் மேலே அழைத்துசெல்லுமோ? யாரறிவார்கள் அதை.
தண்டபாணி துரைவேல்