வேர்களை அறுத்துக்கொண்டு பறக்கும் சிறுகொடி ஐந்துமுகத்தழல் ஒன்றில் தப்பி தப்பி வான் வான் என்று பறந்துப்போகும் வெம்மையும் அதிர்வையும் தந்தது என்றால் காண்டீபம் 36 நெகிழ வைக்கிறது. மண்ணில் விழுந்து அம்மா அம்மா என்று ஏங்கும் ஒரு ஏங்கத்தையும், மைந்த மைந்த என்று பதறும் ஒரு பாசத்தையும் உணர வைக்கிறது. நேற்று வரை வாழ்ந்த பறந்த வானம் சுத்தமாக மறைந்துவிட்டது. இன்று முற்றும் மண்ணில் மண்ணில் என்று சதை துடிக்கிறது. கதை பாத்திரங்கள் ஒரு சுழற்றியில் சுற்றி விழுவதுபோலவே வாசகன் மனமும் ஒரு சுற்று சுற்றி விழுகின்றது.
துரைவேல் நெய்பாத்திரமும், கடலூர் உயிர்பாத்திரமும் பெரும் எல்லையில் தங்கள் முடிவிலியில் நிறைவதை காட்டியது. கதையோடு அவைகள் மனஉணர்வுகளை .
ஆண் துறவியாவதை அன்னை தடுக்கிறாள் என்றால் பெண் துறவியாவதை மகன் தடுக்கிறான்.
அர்ஜுனன் தேவாரண்ய சுனையில் ஒவ்வொன்றாக கடந்துப்போகும்போது கருப்பையாய், உடலாய், உள்ளமாய் வந்து தடுத்த குந்தி நான்காவது சுனையில் தந்தையாகவும் மாறித்தடுக்கின்றாள். அதையும் தாண்டிப்போகும் அர்ஜுனன் உத்தானம் என்னும் ஐந்தாவது சுனையை தொடும்போது குந்தி அவன் முன் நிகரென நிற்கிறாள். அங்கு குந்தியை வெல்ல ஒரு கணத்தை பல்லாயிரம்கோடி என பகுத்த தேவகணத்தில் மட்டுமே முடியும். அங்கு அர்ஜுனன் விழுகிறான். நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். நமது ஒரு கணத்தை பல்லாயிரமகோடி கணமாக பகுத்து அதை தேவகணமாக ஆக்கினால் என்ன மிஞ்சும்? அப்படி ஒரு கணம் வேண்டி இடத்தில், தன்னை முன்வைக்காமல் விட்டுவந்த ஒன்றை நினைவுக்கு கொண்டு வந்து குந்தி வென்று எடுக்கிறாள். அதாவது தாய் மகனின் துறவை தடுக்கிறாள்.
மாலினியும் இ்ந்த உத்தானம் சுனையில் வந்துதான், தான் விட்டுவந்த ஒன்றால் துறவில் இருந்து இழுக்கப்படுகிறாள். மாலினி விட்டுவந்தது, விவரம் அறியா வயதிலிருந்து தனக்குள் போற்றிவந்த தாலாட்டு. தான் இன்னும் பெறத மகனுக்கான தாலாட்டு. பார்க்கும் பிள்ளைகளை எல்லாம் தனது மகனாக நினைத்து பாடவைக்கும் தாலாட்டு. அந்த தாலாட்டை தான் அர்ஜுனனுக்கு பாடமுடியாததாலும், தானே தாயாகி ஒரு குழந்தையை பெறததாலும் “முதல் நிறைவின்மை என்பது எது?” என்ற முதல்கேள்வி அவளுக்குள்ளும் உள்ளது. அந்த கேள்வி உள்ளவரை அவளால் விண்ணேர முடியாது. அந்த கேள்விக்கு அன்னையாகி முதல் நிறைவை அடையமுடியும் ஆனால் மாலினியால் அது முடியாது. அவள் அரண்மனை துறந்து அர்ஜுனனையும் பிரிந்து ஆரண்யம் வந்தபோதே சமானம் என்னும் சுனையை தாண்டியவளாக வடிவெடுத்து உள்ளாள். சமானம் என்னும் சுனையை தொட்டதுமே பால் மாற்றம் நடந்துவிடுகிறது. ஆணும் பெண்ணும் இல்லா நிகர்வாழ் எல்லா நாளும் ஒரே நாளாக வாழும் வாழ்க்கையில் வந்து சுஜயன் கல் எறிகிறான். “முதல் நிறைவின்மை என்பது எது?” என்பதை அறியும் தருணத்தில் ஐந்தாம் வினாவிற்கான விடையாகிய தன்னையே நிகர்வைத்தலையும் அறிகிறாள்.
மாலினியின் முதல் நிறைவின்மையாகிய மகனுக்கு தன்னை முலையாக்கி வைக்கும் தருணத்தில் நிகராகிறாள்.
ராமராஜன் மாணிக்கவேல்