Tuesday, October 6, 2015

முன்னோடிகள்



உடல் ஃபால்குணை வேடத்தில் இருந்தாலும் அகம் அர்ஜுனன்தானே! பெரும் வீரனாகிய அர்ஜுனன் ஏன் மறைந்து போரிடவேண்டும் என்று ஒரு எண்ணம் தோன்றி அழுத்தியது. அர்ஜுனன்போன்ற பெரும் வீரனுக்கு இது போன்ற போர் தேவை இல்லை என்றுதான் நினைத்தேன். வெறும் உற்சாகத்தை, சாகசத்தை, குழந்தைகளின் குதுகலத்தை உருவாக்க நிகழ்ந்தபோரோ என்று நினைத்தேன். இல்லை. இல்லை. இந்தப்போர் மணிபுரி நாட்டுக்குத்தேவையானப்போர்.

அர்ஜுனன் எந்த கணத்தில் இப்படி ஒரு போர் புரிய எண்ணி இருப்பான்? ஏன் எண்ணி இருப்பான்?. குனிய குனிய குட்டுபவன் முட்டாள் என்று ஒரு பழமொழி உண்டு. குட்டுவதே மீண்டும் மீண்டும் குனியவைப்பதற்காகத்தான். இதைத்தான் உலகம் போர் என்று சித்திரசொற்களில் மொழிகின்றது. 

உணவுக்காக, விலங்குக்காக என்று கீழ்நாகர் தொடங்கியப்போர் இன்று பெண்களுக்காக என்று வந்து நிற்கும் இடத்தில் நின்று அர்ஜுனன் எழுகின்றான். பெண்களை கவர்ந்துச்செல்லும் அனைவரிடமும் அந்த நஞ்சு இருக்கிறது என்று சொல்லும் இடத்தில் ஃபால்குணை சிரித்தாலும், அதற்கும் அப்பால் உள்ள தீயில் அவன் இதயம் சுடப்பட்டுதான் இருக்கும். இங்கு அர்ஜுனனை பெண்ணாக அனுப்பியது யார்? அறக்கடவுளா? அண்ணல் காந்தியை கூச்சம் நிறைந்தவராக பிறக்கவைத்ததுபோல். 

கீழ்நாகர் படை எடுத்து வரும்போதெல்லாம், உணவை, விலங்கை, மங்கையரை விட்டுவிட்டு ஆழத்தில் சென்று குழி முயல்களாக பதுங்கிக்கொள்ளும் ஊரில் ஒரு பெண் பறப்பாள் என்பதில் உள்ளது சுதந்திர வேக்கை. முயல்கள் அணிலென பாயும் பறக்கும் அணங்காகும் என்றுக் காட்டத்தான் இந்த பறக்கும் போரை அர்ஜுனன் நடத்துகின்றான்.  பெண்ணைக்கவர நடக்கும்போரில் பெண்ணே போர் புரிவாள் என்றால் அது எதிரணிக்கு மட்டும் இல்லை இந்த மணிபுர நாட்டு அணிக்கும் ஒலிக்கும் அறமுரசு. அர்ஜுனனை பறக்க வைத்த உங்களை இந்த இடத்தில் அண்ணாந்துப்பார்க்கிறேன் ஜெ.  

காலம் காலமாய் மண்ணில் பதுங்கிக்கொள்ளும் மனிதர்களை கொல்லவரும் எதிரி கவனம் முழுவதும் பதுங்கு குழிகளை நோக்கிதான் இருக்கும். பதுங்கி்க்கொள்பவர்களின் கவனமும் பதுங்குகுழிகளை நோக்கிதான் இருக்கும், இந்த கணத்தில் முற்றும் புதிய வேறொரு இடத்தில் பகுங்கி வேறு ஒரு போரில் ஈடுபடும் போர்வீரன் வரலாற்றின் திருப்பம். அவனே சுதந்திரநாட்டின் மகாத்மா. அவன் எதிரியை மட்டும் இல்லை தனது அணிக்காரனையும் அறத்தால் வெல்கிறான். தனது அணிக்காரனும் வெல்லப்படவேண்டியவன் என்பதை உலகுக்கு சொல்கிறான்.  காலம் காலமாய் யுத்தத்தைபோர் என்று காட்டியர்கள் இடத்தில் அகிம்சையைக்காட்டிய இதயம் வேறு ஒரு தளத்தில் தன்னைவைத்துப்பார்க்கிறது. அதுதான் அந்த நாட்டிற்கான என்றைக்குமான போர் என்று காட்டுகிறது. பறவைகள் மத்தியில் பறப்பது அல்ல புதுமை, முயல்கள் நடுவில் பறப்பது புதுமை, அதுவே முயல்களுக்கான சுதந்திரபாதை. மணிபுரி மக்களை அணிலாக அறைகூவல்விடுகின்றான் அர்ஜுனன். 

“ஒருவானால் ஒன்றை செய்யமுடியும் என்றால் அதை உன்னாலும் செய்யமுடியும் என்று நம்பு” என்பது சுவாமி விவேகானந்தர் வாக்கு. பெரும் தலைவர்கள் செய்வது அந்த கணத்தை வெல்வதற்கா மட்டும் அல்ல எதிர்வரும் சந்ததிகள் ஒவ்வொரு கணத்தையும் அந்த வழியில் வெல்வதற்காகத்தான். பெரும் தலைவன், சாதனையாளன் ஒன்றை செய்துமுடிக்கும்போதே உலகுக்கு உதாரணமாகவும், குருவாகவும் ஆகிவிடுகின்றான். அர்ஜுனன் போன்றவர்கள் இதை மனதில் கொண்டே ஒவ்வொரு செயலையும் செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அர்ஜுனன் நடத்தும் இந்த யுத்தம் குழந்தைத்தனமானது இல்லை, பெரியவர்களின் குழந்தை மனத்தை திறக்கவும் இனிவரும் காலத்தில் பிறக்கும் குழந்தைகளின் மனமுதிர்ச்சிக்காவும் நடத்துவது. குலத்தெய்வங்கள் இப்படி ஒவ்வொரு குலத்திலும் மாத்தி யோசித்து மானிட வாழ்க்கையை உயர்ந்ததாக, சுதந்திரமாக  வாழ்வதற்கு வழிவகுத்தவர்கள்தான்.

அர்ஜுனன் மூங்கில் மரத்தில் பதுங்கி போரிடும் விதத்தில் இரண்டு யுத்தத்தை ஒரே நேரத்தில் நடத்துகிறான். ஒன்று கீழை நாகர்களின் உடலோடு, மற்றொன்று மணிபுரி மக்களின் அகத்தோடு. இனி மணிபுரி மங்கைகளை தனியாக கண்டால் “அணங்கோ” என்று எண்ணாமல் எந்த நாகனும் கடந்துப்போக முடியாது.   பதுங்குதல் என்றால் மண்ணுக்கு அடியில் வேர்போல பதுங்குதல்தான் என்று அறிந்து இருந்த மணிபுரிமக்கள் மனதில் இனி அணில்போல மரங்களின் உச்சியில் பதுங்கலாம் என்பது உணரப்படும். 

ஒவ்வொரு உணர்தலும் ஒரு பாதையை வெற்றியை சுதந்திரத்தைத்தேடித்தருகிறது. அந்த சுதந்திரப்பாதையை வகுக்கத்தான் யாரோ ஒருவன் வந்தசுவடே தெரியாமல் வருகின்றான். அவனை உலகம்  நம்ப மறுக்கலாம், அவனை அஞ்சலாம், வீட்டுக்காவலில் வைக்கலாம், கொல்வேன் என்று சொல்லலாம், சிலநேரம் கொலைகூட செய்யலாம் ஆனால் அவன் அதற்காக வேடிக்கைப்பார்த்துக்கொண்டு இருப்பதில்லை. தனது துணையாக படைவேண்டும் என்று காத்திருப்பதில்லை, கிடைத்ததைக்கொண்டு பறக்கிறான், கைவிடப்பட்டவர்களை தனது படையென பலமெனை ஆக்குகிறான். எதிரையை சுமந்துவருபவரையே எதிரிக்கு எதிராக திருப்புகிறான். அவன் யுத்தத்தில் அறம் இருக்கிறது. யானைக்கு ஒரு தெய்வம், குதிரைக்கு ஒரு தெய்வம், நாயிக்கு ஒரு தெய்வம் என்பது அவனுக்கும் தெரியும் ஆனாலும், அவன் அனைத்திற்கும் குருதி ஒன்று என்ற அறம் அறிந்தவனாக இருக்கிறான். அந்த அறம் அவனுக்கு கைவிடப்பட்ட வழியில் இருந்துக்கூட தன்னந்தனிப்போகையிலும் ஒற்றை ஒலிக்கு பாய்ந்து பறந்து துணைவருகிறது.

அர்ஜுனன் தனது வீரசாகசத்தை தெரிவிக்கத்தான், மூங்கில் மரத்தில் மறைந்தும் பறந்தும் போர் புரிகிறான் என்று நினைத்தது எனது போதாமையின் வெளிப்பாடு. அர்ஜுனன் புழுக்களை பட்டாம்பூச்சியாக்கிச்செல்கிறான். இது அர்ஜுனன் நடத்தும்போரே இல்லை அவனுக்குள் உள்ள அறம் நடத்தும்போர்.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

புழுவரும் என்று சூரியன் வரவில்லை, அதன் வாழ்க்கைக்காக அது அதுபாதையில் போகின்றது. புழுவந்து அதன்பார்வையில் விழுந்து அழிகிறது. நாகர்களை கொல்ல அர்ஜுனன் மணிபுரிவரவில்லை. நாகர்களாக வந்து விழுந்து அழிகின்றார்கள். அறம் தெய்வமாகி இப்படித்தான் வருமோ? 

ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் அறம் கொண்டு நிற்பவனை எதிரி அஞ்சுகிறான் என்பது ஞாயம். நண்பனும் அஞ்சுவதுதான் உலகத்தின் நடமுறைக்கொடுமை. நண்பன் அஞ்சுவானே என்று அறத்தானும்  அஞ்சுவதுதான் உலகத்தாய்மை தனம்.

பால்குனை புன்னகைத்தாள். “என்னை அஞ்சவேண்டாம். அஞ்சும் விழிகளை அஞ்சியே நான் பெண்ணானேன்என்றாள். அவர்கள் சிரித்தனர்.-காண்டீபம்.-21

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்