அர்ச்சுனன் பிரபாச தீர்த்தத்தை அடைய ஒரு விரதத்தை மேற்கொள்கின்றான். நம் மதத்தில் புலனின்பங்களை விலக்கும் பல்வேறு விரதங்கள், நோன்புகள், வழிபாட்டுமுறைகள் இருக்கின்றன. இவற்றின் நோக்கங்கள் மற்றும் பலன்கள் உண்மையில் என்ன? ஒவ்வொரு விரதத்திற்கும் நம்பிக்கை சார்ந்த நோக்கங்கள் இருக்கின்றன். பக்தியின் காரணமாக, பண்பாட்டின் காரணமாக, அல்லது எதிர்கால நல்வாழ்வின் காரணமாக என புலனின்பங்களை விலக்கி வைக்கும் பல்வேறு விரதங்களை நாம் கடைபிடித்து வருகிறோம். அவை சொல்லும் நோக்கங்கள் இருக்கட்டும். நாம் அதற்குள் போகாமல், இந்த புலனின்ப விலக்கங்களில் வேறு நன்மைகள் இருக்கிறதா எனப் பார்க்கலாம்.
தினப்பழக்கத்தில் நாம் ஐம்புலன்களால் அனுபவிக்கும் அனைத்து சுவைகளிலும் அவை நுண்மையாக அளிக்கும் இன்பங்களை இழந்துவிடுகிறோம். அவை தரும் புலனின்பங்களை முழுமையாக அனுபவிக்க மறந்துவிடுகிறோம். ஒரு அடிக்கடி கேட்கும் பாடலில் முதல் இரு அடிகளுக்குமேல் அடுத்த வரிகள் மனதில் உணர்வதில்லை. ஒரே உணவு விடுதியில் தினமும் சாப்பிடும் ஒரே உணவு தன் சுவையை இழந்துவிடுவதாக தோன்றுகிறது. வீட்டில் போட்டிருக்கும் அலங்கார வண்ண விளக்குகள் நாளாக நாளாக தன் கவர்ச்சியை இழந்துவிடுகின்றன. நாம் தினமும் படுக்கும் படுக்கையின் மென்மையை நாம் உணர்வதில்லை. நம் துணையின் அழகு பழகி மெல்ல தன் கவர்ச்சியை இழப்பதாக தோன்றுகிறது.
இவ்வாறு பொருட்கள் அளிக்கும் இன்பங்களை முழுமையாக நுகரும் தன்மையை இழந்துவிடுகிறோம். அவை அளித்த இன்பங்களின் முழுமையை எப்படி திரும்ப உணர்வது? ஒரு பொருள் அளித்த இன்பத்தின் முழுமை எப்போது நமக்கு அறிவில் உறைக்கிறது? தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருக்கும் விசிறி அளிக்கும் சுகத்தை நாம் மறந்திருக்கிறோம். வெம்மையான காலத்தில் சில மணி நேர மின்வெட்டின் பிறகு அந்த விசிறி சுழல ஆரம்பிக்கும் போது திரும்ப அந்த விசிறி தந்த சுகத்தை உணர்கிறோம் அல்லவா. நிழலின் அருமை வெயிலின் மூலம் அல்லவா அறிந்துகொள்கிறோம். அதனால் பொருட்களை சில காலம் விலக்கி வைப்பதன் மூலம் அது தரும் இன்பத்தின் முழுமையை மீண்டும் நினைவுகொள்கிறோம். ஆனால் இதை நாம் இந்த காரணத்தை நோக்கமாக வைத்து, அறிந்தே அவ்விலக்கத்தை செய்வது பலனளிக்காது. அப்படியென்றால் இதை நாம் நமக்கு எப்படி செய்து கொள்வது? இவ்விஷயத்தில் நோன்புகளும் விரதங்களும் நமக்கு உதவுகின்றன என நான் கருதுகிறேன். உண்ணாநோன்பு உணவின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது அல்லவா? ஆனால் இந்த பலனை ஒரு பக்தியில் சிரத்தையாக செய்யும் விரதத்தின் பயனாக சொல்வது என்றால் இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் இந்த நன்மை ஒரு பக்க விளைவு எனக் கொள்ளலாம். இந்தப் பயன் லோகாயத வாழ்வுக்கானது. ஆன்மீக நோக்கில் இந்த விரதங்களுக்கு பலனிருக்கிறதா என பார்க்க விழைகிறேன்.
ஒரு பொருள் தான் இல்லமையால் ஒரு சுவையை அளிக்கிறது என்பதை கண்டிருக்கலாம். பலர் பருகும் தேநீர் பால் கலந்ததாக இருக்கும். தேநீரில் பால் கலக்காமல் குடிப்பது சிலரின் வழக்கம். பால் கலக்காமல் குடிக்கும் தேநீரை சுவை குறைந்த தேநீர் என்றா கூற முடியும்? அது வேறு வகையான சுவை கொண்ட தேநீர். அந்தச் சுவை அந்தத் தேநீருக்கு பால் இல்லாமையால வந்திருக்கிறது. அது பால் இல்லாமையின் சுவை கொண்ட தேநீர் என்று சொல்லாமல் அல்லவா? சிலர் இனிப்பு இல்லாமல் தேநீர் குடிப்பார்கள். அவ்வாறு நீண்ட நாட்கள் பழகிய அவர்களுக்கு என்றாவது இனிப்பு கலந்த தேநீர் வழங்கினால் அந்தச் சுவை பிடிக்காமல் முகம் சுளிப்பார்கள். இனிப்பற்ற தேநீரே அவர்களுக்கு சுவையாக இருக்கும். அந்தச் சுவை இனிப்பு இல்லாமையால வந்த சுவை அல்லவா? என் கல்லூரி காலத்தில் திடீரென்று ஒருநாள் நான் தேநீர் குடிக்கும் வழக்கத்தை விட்டுவிட்டேன். சில ஆண்டுகள் கழித்து ஒருமுறை தேநீரை குடிக்க முயல்கையில் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஒரு வாய் கூட குடிக்க முடியாமல் வைத்துவிடேன். ஆக நான் நீரில் சுவைப்பது தேநீரே இல்லாமையால் வந்த சுவைகொண்ட தேநீர் என்று சொல்வேன். என் மனைவி நேரத்திற்கு தேநீர் கிடைக்காவிட்டால் வருத்தமும் எரிச்சலும் அடைவாள். இது எதுவும் அடையாத நான் அப்போது தேநீர் இல்லாமையால் வரும் சுவையை அனுபவிப்பதாக சொல்லாம் அல்லவா?
கவனித்துப்பார்த்தால் சற்று நீண்ட விரதங்களில் இந்த இல்லாமைகளினால் கிடைக்கும் சுவையை நாம் அனுபவிப்பதை அறியலாம. தமிழர்கள் சற்று நீண்ட விரதமாகக் கொள்வது ஐயப்ப சுவாமிக்கு மாலைபோட்டு இருக்கும் விரதம் ஆகும். அப்போது பலர் தங்கள் குடிப்பழக்கம், புலாலுணவு, காமம், போன்றவற்றை தவிர்த்து இருக்கிறார்கள். அவ்வாறு செல்பவர்கள் அனைரும் பெரிய பக்தர்கள், ஞான வேட்கை உள்ளவர்கள் அல்லது ஆன்மீக தேடல் கொண்டவர்கள் எனச் சொல்ல முடியாது. மற்ற நாட்களில் அவர்கள் கோயில்களுக்கு செல்வதுகூட மிகக்குறைவு. அவர்களில் பலர் புலனின்பங்களை நுகர்தல் தம் குடும்பத்தின் நலன் நாடுதல் என்தெ தம் வாழ்வின் நோக்கம் என்ற எளிய சிந்தனையை உடையவர்கள். எதோ ஒரு வேண்டுதல் காரணமாகவே முதல்முறை தம் விரதத்தை மேற்கொள்கின்றனர். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் எவ்வித வற்புறுத்தலும் இல்லாமல் அந்த விரதத்தை மேற்கொள்கின்றனர். அதற்கு காரணமாக நான் கருதுவது அவர்கள் பொருட்கள் இல்லாமையால வரும் சுவையை கண்டுகொண்டது எனக் கருதுகிறேன்.
இல்லாமையின் ஆனந்தம் என்பது என்ன. ஒரு பொருள் இல்லாமல் போகும்போது அது எப்படி ஆனந்தம் தர முடியும்? நாம் அனுபவிக்கும் புலனின்பங்கள் நம்மை வெறும் புலன்களின் தொகுதியான உடலாக அறிய வைத்து நாம் நம் ஆன்மாவை காண முடியாமல்மறைத்து வைக்கிறது. ஒவ்வொரு புனலின்பமும் ஒரு திரையென ஆன்மாவை திரையிட்டு மூடியிருக்கிறது. புலனின்ப விலக்கம் அந்த திரையை விலக்கும் ஒரு முயற்சியாகும். அப்போது சில சமயம் ஒருவன் தன் ஆன்மாவை தான் என அறியும் ஒரு கணம் நிகழ்கிறது. அந்த அறிதல் அவன் மனதில் ஆனந்தத்தை அளிக்கிறது. இவையாவும் அவன் அறிவு அறியாமல் நடக்கும் நிகழ்வுகள் ஆகும்.
ஒரு துறவி ஆனந்தத்தில் இருக்கிறான். அவன் ஆனந்தத்தில் இல்லையென்றால் அவன் கொண்டது உண்மையான துறவாகாது. அதனால்தான் துறவிகள் தம் பெயரை ஆனந்தம் என வார்த்தைவரும்படி மாற்றிக்கொள்கின்றனர். ஒரு துறவி அனைத்தையும் துறக்கும்போது அவனுடையை ஆன்மாவை மூடியிருக்கும் திரைகள் அனைத்தும் விலக தன் ஆன்மாவை தான் என அறிந்து பேரானந்தத்தில் லயிக்கிறான். அந்தப் பேரானந்தத்தை சிறிய அளவுக்கு நமக்கு எடுத்துக் காட்டி நமக்கு அறிமுகப்படுத்துவது இந்த விரதங்களின் முக்கிய பயன் என நான் கருதுகிறேன்.
தண்டபாணி துரைவேல்