துணையாக, தெய்வமாக, தாயாக ஒரு ஜீவனை தேடுகிறது ஆண்மனமும், பெண்மனமும், கிடைத்ததும் காதலிக்கிறது அல்லது கிடைத்ததில் இருப்பதாக நினைத்து காதலிக்கிறது. துணையும், தெய்வமும், தாயும் கலந்தது ஒரு உருவம் அல்ல, அது ஒரு உணர்வு. உணர்ந்தால் மட்டும்போதாது பாவிப்பது.
ஒரு ஆணையோ பெண்ணையோ யாரும் காதலிக்கவில்லை, ஆண்வடிவில் அல்லது பெண்வடிவில் வரும் உணர்வுகளை காதலிக்கிறார்கள். அந்த உணர்வுகள்கூடும்போது காதல்வளர்கிறது, உணர்வு குறையும்போது காதல் குறைகிறது. அந்த உணர்வுகளை தக்கவைத்துக்கொள்வதில் உள்ளது காதலின் வெற்றி. அறுபது வயதிலும் அந்த முதல்காதலோடு இருப்வர்களும், இருபது வயதிலேயே எல்லாம் முடிந்துவிட்டதாக அலுத்துக்கொள்பவர்களும் உணர்வுகளை கையாளும் விதத்தால் வேறுபட்டு நிற்கிறார்கள்.
உணர்வுகளின் அடா்த்தியில் விளையும்காதலைப்பற்றிச்சொன்னாலு ம், ஒவ்வொரு உறவும் இந்த உணர்வைக்கொண்டுதான் உலகில் இணைந்து உள்ளது. மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையில்கூட இந்த உணர்வுதான் பிணைப்பை ஏற்படுத்தி வைத்து உள்ளது. பெரும் ஞானியர்கள் இந்த உணர்வை உணரும் தருணத்தில்தான் இறைவனை உருவமற்றவன் உணர்வு மயமானவன் சச்சிதானந்தம் என்று எல்லாம் சொல்கிறார்கள். ஊடும்பாவுமாக இந்த உணர்வுதான் உலகம் முழுவதும் நிறைந்து இருக்கிறது என்கிறார்கள். இந்த உணர்வால்தான் உலகம் அமைந்து உள்ளது என்கிறார்கள். இதை வார்த்தைாயால் சொல்வது கிளிப்பிள்ளைப்போல் படித்ததைச்சொல்வதுதான்.
உணர்வது என்பது வார்த்தைக்கு அப்பாற்பட்ட ஒன்று. அந்த உணர்தலில் உள்ளது உருவமற்ற இன்பம். அதை பாவிக்கிறார்கள் ஞானிகள். அந்த உணர்தலுக்கு முன்புவரை உள்ளது உருவமுள்ள புலன் இன்பம். காதலியால் காதலனுக்கு இன்பம், காதலனால் காதலிக்கு இன்பம் என்பது வரை உருவமுள்ள இன்பம் தெரிகின்றது. காதலனும் காதலியும் உணரும் சொல்லமுடியாத இன்பம் ஒன்று உள்ளதே அது உருவமற்ற இன்பம். அதை பாவிக்கமுடியும் சொல்லமுடியாது. அந்த உருவமற்ற இன்பத்தை அடையும்வரை ஒவ்வொரு ஜீவனும் உருவத்தின்வழியாக அந்த இன்பத்தை பெருவதாக நடிக்கின்றது. நம்புகின்றது. அதுவும் சொட்டுச்சொட்டாக இங்கு நிரம்பிக்கொண்டு இருக்கிறது. இந்த இன்பத்தை பெருவதற்கும் வழங்குவதற்கும் ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொரு வண்ணத்தை வடிவத்தை இங்கு எடுத்துக்கொண்டு இருக்கிறது. அவதாரங்கள்கூட இதைத்தான் செய்கிறது.
அவதாரம் இறங்கிவருவதுபோல்தான் மணிபுரிநாட்டுக்கு ஃபால்குணை வந்தாள். தெரிந்தோ தெரியாமலோ துணையாய், தெய்வமாய், அன்னையாய் ஒன்றுகலந்து உணர்வை அங்கு ஊட்டுகின்றாள். அதனால் மணிபுரிநாட்டின் இதயங்களில் இன்பம் பொங்க செய்கிறாள். அவள் நினைத்தால் மணிபுரிநாட்டின் தலைவியாகி இருக்கமுடியும். ஆனால், சித்ராங்கதனுக்கு பணிவிடை செய்கிறாள். கட்டளைக்கு கீழ்படிகிறாள். அவன் நலனுக்கு தாயென கண்விழித்து இருக்கிறாள், சித்ராங்கதன் உடல்தேறியபின்பு படைக்கல பயிற்சி அளிக்க, குருவாக இருக்க வாக்கு கொடுக்கிறாள்.. கீழ்நாகர்களை வென்றதன் மூலம், மணிபுரிநாட்டு மக்களுக்கு வெற்றியின் முதல் சுவையை தந்தன்மூலம் தெய்வமாக நிற்கிறாள். இவளால்தான் மணிபுரிநாட்டுக்கு இன்பம். சித்ராங்கதனுக்கும் இன்பம்.
சித்ராங்கதன் அரண்மனைக்கு தூக்கிச்செல்லப்படும் போது ஃபால்குணை வருந்துகின்றாள். இப்பிரிவு தன்னை வருந்தவைக்கும் என்று இக்கணம்வரை நான் நினைக்கவில்லை என்றும் கூறுகின்றாள்.. எங்கே மானிடமனம் விழுகின்றது?. எப்படி இந்த மானிட மனத்தில் அந்த வெற்றிடம் தோன்றுகின்றது?. இன்பம் விளைவிக்கும் ஒன்றையும் இன்பத்திற்காக ஏங்கவைக்கும் இந்த திருக்கூத்துதான் சச்சிதானந்தத்தின் ஆடலா? அந்த சச்சிதானந்தம்தான் இன்பமாகவும் இன்பத்திற்காக ஏங்குவதாகவும் இரட்டைவேடம் போடுகின்றதா?
சித்ராங்கதன் பிரிவுக்காக விழிவிலக்கள் மூலம் தனது விழிகசிவை மறைத்துக்கொள்ளும் ஃபால்குணையை நினைக்கும்போது மானிடன் எவ்வளவு பலகீனமானவன் என்று விழிகசிகிறது. இந்த மென்மைதான் ஃபால்குணைப்போன்ற பெரும் வீர இதயத்தில் கவிதையை, இசையை, நடனத்தை விளைவிக்கிறதா? எவ்வளவு பெரிய பாலையாய் இருந்தால் என்ன சின்ன விதை முளைத்தால் பாலையும் சுரக்கும் பாலை.
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்