Tuesday, October 20, 2015

அன்னை

அன்னை

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

வெண்முரசின் ஒவ்வொரு பெண் படைப்பும் பெண்ணின் முழுமையாகவே படைக்கப்பட்டு உள்ளது. இன்னும் எதாவது மீதி இருக்குமா? என்ற வினா எழுப்பமுடியாத அளவுக்கு முழுமைக்கொண்டு இருக்கிறது. ஆனால் அடுத்த பெண் படைக்கப்படும்போது அதுதான் முழுமையான பெண் என்று மயங்கவும் வைக்கிறது.

சித்ராங்கதையை சித்ராங்கதனாக படைக்கப்படும்போது பெண்ணின் புறம் அகம் ஆழம் என்று கிளைத்துச்செல்லும் மரத்தின் வெளித்தோற்றம் வேர் உள்திசு என்று மூன்றையும் பார்த்ததுபோல் இருந்தது. பெண்ணுக்குள் ஆண், ஆணுக்குள் பெண் இதற்குமேல் என்ன இருக்கு என்றுதான் நினைத்தேன். சித்ராங்கதை அதற்கும்மேல் ஒருபடி ஆழத்திற்கு செல்கின்றாள். மரத்திற்குள் இன்னும் மொட்டாகி வெளிவராமல் மறைந்திருக்கும் பூவைப்பார்பதுபோல் இருந்தது. தனது மகனை வேறு ஒரு ஆணாக அறியும் தருணத்தை மனைவியிடம் சொல்லும் அர்ஜுனன் முன், மகனோடு வராத சித்ராங்கதையை நினைத்து நினைத்துப்பார்க்கிறேன். என்ன ஒரு ஆழம்! என்ன ஒரு நுணுக்கம்!  என்ன ஒரு பெண்மையின் மென்மை அல்லது காதல்!

காதலி என்பவள் யார்? உன்னைத்தவிர உலகில் ஆணே இல்லை என்று நம்ப வைப்பவள்.  அந்த நம்பிக்கையை ஊட்ட சித்ராங்கதை ஆடும் ஆட்டம்தான் என்னே! மைந்தனைப்பற்றிப்பேசும்போது அவளிடம் நெகிழ்சி என்பதே இல்லை என்பதை வாசித்தபோது எத்தனை பெரிய உள்மன விளையாட்டு. விளையாட்டு என்றாலும் பெண்ணின் வாழும் வாழ்க்கையின் உச்சம். இன்று அர்ஜுனனை மைந்த என்று அழைத்து அசரடித்த உலூபியை தான் காலில் விழவைக்கிறாள் சித்ராங்கதை இங்கு.  நிறைவடைந்தீர்களா என்ற கேட்கும் உலூபியை அன்று பெண்மையின் உச்சம் என்று நினைத்தேன், இன்று நினைத்துப்பார்க்கிறேன், அவள் கேட்டது ஏதோ உடல் அளவில் உள்ளதுபோல் இன்று தோன்றுகின்றது. சித்ராங்கதை அர்ஜுனன் மனதில் தன்னை எத்தனை அர்த்தத்தோடு பெண்மையோடு, கருணையோடு, கடைசித்துளிவாழ்வு என்ற நேசத்தோடு நிறையச்செய்கிறாள். 

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்-என்ற திருக்குறளை இங்கு நினைத்துப்பார்கிறேன். இந்த திருக்குறளை மனைவி கணவன் முன் படிக்கமுடியாதோ?

மனைவியை பிரிவது கணவனுக்கு ஒரு பிரிவின் சுமை மட்டும்தான், அது ஒரு கணத்தின் கனல். சுடும், கண்ணீர் வரவைக்கும், அதற்கு மருந்தும் உண்டு, ஆனால் கணவனின் பிரிவு என்பது மனைவிக்கு ஒரு பிரிவோடு முடிந்துவிடவில்லை. தன்னை ஆணாக ஆக்கிக்கொள்ளவேண்டிய பெரும் கொடுமை. இந்த கொடுமையின் வலியை ஆணாக இருந்து பெண்ணாகிய சித்ராங்கதையைத்தவிர வேர் யார் அதிகமாக அறியமுடியும்.

அப்பாவை பார்க்க வந்த அண்ணன் ஊராட்சி மன்றத்தலைவர்  அப்பாவிடம் பேசிக்கொண்டு இருந்தபோது சொன்னதை நினைத்துப்பார்க்கிறேன். “அப்பா இறக்கும்போது  எனக்கு ஒன்பது வயது, தம்பி தங்கைகளை சேர்த்து நாங்க நாலுபேர், முப்பதாம் நாள் படைத்து முடித்ததும், அப்பாவின் வேட்டியை எடுத்து அம்மா கட்டினார்கள் அதற்கு பிறகு அம்மா புடவையே கட்டவில்லை. எனக்கு நாற்பத்தி இரண்டு வயதாகி விட்டது, தீபவளி பொங்கல் என்றால் இப்பவும் அம்மாவிற்கு புடவை வாங்கனும் என்று நினைப்பேன், ஆனால் அப்பாவிற்கு வேட்டி மட்டும்தான் வாங்குறேன்” என்றார். அன்று அது ஒரு கதை. ஒரு வாழ்வின் சோகம். இன்று சித்ராங்கதையுடன் அந்த கதையை நினைக்கும்போது எத்தனை அதிர்வை ஏற்படுத்துகிறது. பெண்கள் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் சித்ராங்கதைதான். சிலர் புடவைக்கட்டிக்கொண்டு உள்ளார்கள். மாதொரு பாகன், தாயுமானவன் என்று எல்லாம் ஐயனுக்கு பெயர் உள்ளது. ஐயன் பெண்மையை உணர, உயர்த்த நடத்திய நடனம் இது. தந்தையானவள் என்று அன்னைக்கு ஏன் பெயர் இல்லை என்று நினைக்கிறேன். அன்னையர் அனைவருமே தந்தைகள்தான் என்கிறாள் சித்ராங்கதை. 

சித்ராங்கதை சித்ராங்கதனாக ஆகும் அந்த கொடுமையை தான் எப்படி எப்படி எல்லாம் அஞ்சி நகர்ந்துப்போகின்றாள். ஈவு இரக்கமே இல்லாமல் கொல்லும் ஒரு சித்ராங்கதனுக்குள் இத்தனை மென்மை நிரம்பிய சித்ராங்கதையா? தந்தை அறியும் உலகம் வேறு, அன்னை அறியும் உலகம்வேறு. 

வாழ்வின் கருணை அற்ற முன்னகர்வை எந்த கரத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை அறிந்து அமைதி அடைவதுதான் வாழ்தலின் பயனோ?

அர்ஜுனன் பிரிந்துப்போவன் என்பதை தெரிந்தும் அவன் பிரியும் நாள்வரை உள்மன ஆழத்தில் மலரும் அன்புடன் காதலிக்கும் சித்ராங்கதையும், பப்ருவாகனனாகிய மகனால் இறப்பேன் என்பதை அறிந்து அவன் பாதத்தை தலையில் சூடி முத்தமிடும் அர்ஜுனனையும் இணைத்துப்ர்பார்க்கிறேன்.அர்ஜுனன்அறம் என்பது தன்னிலிருந்து தொடங்குவதல்லவா?” என்றான்.-காண்டீபம்-31.

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!-தந்தையர் கடனில் இருந்து தப்பிக்க முடிகிறது. தாயார்கள் தப்பிக்கமுடிகிறதா? பெண்ணாகி இத்தனை காதல் செய்வது தாயாகி ஈன்றெடுப்பது தந்தையின் கடனையும் தீாக்கத்தானா? 

ஆணின் அறம் சிலையில் உடுத்திய ஆடை. பெண்ணின் அறம் சிலையில் செதுக்கிய ஆடை. 

கல்லால மரத்தடியில கண்மூடி ஞானமுத்திரைக்காட்டி அமர்ந்திருக்கும் ஐயனையும், அமர்வதைப்பற்றி நினைக்கவே முடியாமல் எறுமையின்தலையில்  நிற்பதும் பறப்பதுபோல் எட்டுகை சுழற்றும் அம்மையையும் நினைக்கிறேன்.  அவள் நவராத்திரியில்கூட தனித்து இருக்க முடியாதவள். நம் உள்ளமும் இல்லமும் அன்னையால் நிறைக! 

அன்புள்ள ஜெ நேற்று நீங்கள் வைத்த கொலு அழகு. //அன்னையின் காலடியில் வலப்பக்கம் அவளுடைய மானுடவடிவான ஃபால்குனைக்கும் மரத்தாலும் களிமண்ணாலும் சுண்ணக்கல்லாலும் ஆன அழகிய சிறிய சிலைகள் அமைக்கப்பட்டு அவற்றுக்கும் பூவும் மலரும் அளிக்கப்பட்டன.// -காண்டீபம்.30 நவராத்திர விழாகாலத்தில் சாக்தர்களின் நாடான மணிபத்மை நாட்டில் கதை நடக்கும்படி யார் செய்வது?. அவள் எங்கோ தூரத்தில் இருக்கிறாள் என்றுதான் நினைக்கிறோம் ஆனால் எத்தனை அணுக்கத்திலும் இருக்கிறாள்.
 
ராமராஜன் மாணிக்கவேல்