ஏற்கெனவே ஜெயமோகனின் வடகிழக்கு பயண பதிவுகளில் இந்த மிதக்கும் தீவுகளை பற்றி படித்திருக்காவிட்டால், இவை ஜெயமோகனின் மெய் நிகர் கற்பனைகளில் ஒன்று என்றே நினைத்திருப்பேன். இயற்கை தன் சிருஷ்டியில் சிலசமயம் ஒரு குறும்புச் சிறுவனை போல் நடந்துகொள்கிறது. மிதக்கும் தீவுகள் அதைப்போன்ற படைப்பு. ஆனால் மனிதன் எதையும் விட்டுவைப்பதில்லை. அவனின் பேராசை அனைத்து இயற்கை படைப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள விழைகிறது. இங்கே மிதக்கும் தீவுகளை கோட்டையாக்கி அதை சூழ்ந்துள்ள நீரை அரண் எனக் கொண்டிருக்கிறான். இந்த மிதக்கும் தீவுகளின் வழியாக வெண்முரசு எதைக் காட்ட முயல்கிறது என சிந்தித்து பார்க்கிறேன்.
மனிதர்கள்கூட மிதக்கும் தீவுகள் போன்றவர்கள்தான். அவர்கள் இந்த காலம் என்ற பெரும் நீர்ப்பரப்பில் மிதந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களை உறவுகள் என்ற வடத்தின் மூலம் இணைத்துக்கொள்கிறார்கள். அதன் மூலம் காலத்தின் ஓட்டத்தில் திக்குத்தெரியாமல் தொலைந்து போகாமல் இருக்க முடியுமா எனப் பார்க்கிறார்கள். ஆனால் அந்த உறவுகள் என்ற வடம் நாளாக நாளாக இற்றுப் போகிறது. பெற்றோர் பிள்ளை உறவு, சகோதர உறவு, கணவன் மனைவி உறவு, மற்ற பலவிதமான உறவுகள், நட்புகள் போன்ற வடங்களால் பிணைத்துக்கொண்டு தம்மை இந்த கால வெள்ளத்தில் சிதறுண்டு போகாமல் இருக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் ஒரு சிறிய காதல் என்ற சுழல் பெற்றோர் பிள்ளை வடத்தை இற்றுப்போக வைக்கிறது. சொத்துப்பிரச்சினை போன்ற சிறிய பாறைமுகப்புகள் சகோதர வடத்தை துண்டித்து விடுகின்றன. அகங்காரம் எதிர்பார்ப்பு போன்ற நீர்விலங்குகள் நட்பு என்ற வடத்தை அறுத்துவிடுகிறது. கணவன் மனைவிக்கிடையே இருக்கும் உறுதியான வடம்கூட தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் என்ற மீன்களால் கடிக்கப்பட்டு சிதைகின்றன. மனிதர்கள், பாசம் பந்தம் என்ற வடங்களின் மூலம் பிணைத்துக் கொள்ளுதலும், அவை பின்னர் பலவேறு பிரச்சினைகளால் அறுந்துபோதலுமாக, காலம் என்ற நீர்ப்பெருக்கில் சேர்ந்தும் பிரிந்தும் மிதந்து அலைகின்றனர். புதிய வடங்களால் பிணைத்துக் கொள்ளும்போது மகிழ்ந்தும் அவை அறுபடும்போது வருந்தியும் இந்த சம்சார வாழ்க்கையில் மனிதர்கள் உழன்றுகொண்டிருக்கிறார்கள்.
ஒரு துறவி இந்த வடங்களை நம்புவதில்லை. தன்னை காலத்தினிடம் முற்றிலும் ஒப்பு கொடுத்து அது செலுத்தும் வழியில் மிதந்து சென்றுகொண்டிருக்கிறான். அவன் காலத்தை எதிர்த்து எதுவும் செய்வதில்லை. அதனால் அவன் எந்த குழப்பத்தையும் அடைவதில்லை. அவன் வேர்கள் காலம் என்ற நீர் வெளியையே புவி எனக் கொள்கிறது. ஃபால்குணை தன்னை இந்த தீவுகளில் பொருத்திப்பார்க்கிறாள். எவ்விதபிடிப்பின்றி அலைபவளாக இருக்கும் அவள் நீரில் மூழ்கி அந்தத் தீவுகள் எதன் ஆதாரத்தில் இருக்கின்றன என அறிய முயல்கிறாள். அதன் மூலம் எதிலும் நிலை நிற்க மறுக்கும் தன் மனதை புரிந்துகொள்ள முடியுமா எனப்பார்க்கிறாள்.
தண்டபாணி துரைவேல்