Sunday, October 11, 2015

மிதப்பவை

அன்பின் ஜெ,

      நலமா.எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது.நீங்களே ஒருமுறை கூறியது போல " நிறைய வாசகர்கள் ஆரம்பத்தில் தீவிர உரையாடல்களுக்குப் பின் ஒரு கட்டத்தில் எழுதுவதை நிறுத்திவிடுவார்கள்.ஆனால் தொடர்ந்து என்னை வாசித்துக்கொண்டே இருப்பார்கள்,"..ஆம் எழுதாவிட்டாலும் உங்களுடன் உரையாடிக்கொண்டிருப்பதாகவே எண்ணுகிறேன்.வெண்முரசினை ஒருநாளும் தவறாமல் வாசிப்பவர்களுள் நானும் இருக்கிறேன்.

    காண்டவம் வேறு நிலம் வேறு வாழ்க்கை என்று மிக அற்புதமாய் பயணிக்கிறது.ஃபால்குனையாகவே அவள் தெரிகிறாள்,அர்ஜூனன் மறைந்து.மிதக்கும் தீவுகளில் ஃபால்குனையின் மனம் உணரும் காட்சிகள் தடாகத்தின் வருணணனைகள் என்னை மூழ்க வைத்தன.நீருள் மிதக்கும் வேர்கள் அலைவதை ஏன் அவள் காண்கிறாள்.அவள் அறிய விரும்புவது பிரபஞ்சத்தின் உயரத்தையா,புடவியின் ஆழத்தையா.,.வாழ்வில் பித்துகொண்ட மனங்களின் தேடல் இவ்வாறு நீருள் மூழ்கிய வேர்களின் ஆரம்பத்தை அறிவதா..மிதக்கும் தீவுகளின் அசைவுகளும் மூங்கில் இருப்பிடங்களுமே இவ்வுலகின் மிகச் சரியான உதாரணங்களா?   நம் இருப்பு எத்தனை எளிமையானது,நிலையற்றது இம்மாபெரும் ஆக்கத்தில்.நீரில் அலையும் வேர்களே மானுடர்கள்.

    ஃபால்குனையின் ஒவ்வொரு அசைவும் ரம்யமானவை..அத்தனை நுணுக்கமாக அவள் எண்ணங்களை வெளிப்படுத்துவது வெண்முரசின் தனித்துவம்.

நன்றி
எம்

அன்புள்ள எம்

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?
மணிபுரியின் லோக்தக் ஏரிக்குச் சென்றபோது அதன் மிதக்கும் தீவுகள் இத்தனை ஆழமான மனப்படிமமாக மாறியிருக்கும் என உணரவில்லை.
எல்லாமே மிதக்கும் ஒரு வெளி. அது எல்லாமே தொங்கித்துழாவும் நாக உலகின் இன்னொரு பக்கம்
ஜெ