Monday, December 19, 2016

கனவு வலை



அன்புடன் ஆசிரியருக்கு


கிறிஸ்டோபர் நோலன் எனக்கு மிகவு‌ம் பிடித்த இயக்குநர். குறிப்பாக அவருடைய திரைப்படங்களின் வசனங்களுக்காகவே பலமுறை அவர் திரைப்படங்களை பார்ப்பேன். இன்செப்ஷன் மற்றும் இன்டெர்ஸ்டெல்லார் திரைப்படங்களின் வசனங்களுக்கென்றே மீண்டும் மீண்டும் அவற்றைப் பார்க்கிறேன். அதிலும் மிக அதிகமான பார்வையாளர்களை குறி வைத்து எடுக்கக்கூடிய திரைப்படங்களில் சாத்தியமான அனைத்து நுணுக்கங்களையும் கொண்டு வருவது கிறிஸ்டோபர் நோலனின் தனித்திறன் என்றே தோன்றுகிறது. இன்செப்ஷனில் அவர்களின் வேலைக்கான முன் தயாரிப்புகளைக் கூட கனவில் தான் விவாதிக்கிறார்கள் என்பதை மூன்றாம் முறை பார்த்த போதே புரிந்து கொள்ள முடிந்தது. ஏனெனில் கனவில் அனைவரும் கோட் அணிந்திருப்பார்கள். அது போலவே இன்டெர்ஸ்டெல்லாரில் ஜெசிகா சாஸ்டைனுக்கும் மைக்கில் கேனிக்கும் நடக்கும் உரையாடல்களையும் அடுத்த கிரகத்திற்கு செல்லலாமா என்பது குறித்து நடக்கும் உரையாடல்களும் அவ்வளவு நுண்மையானவை. 


இன்செப்ஷனை விட சிக்கலான கனவு வலையை கிராதம் விரித்திருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே சிதறிக் கிடக்கின்றன. இக்கதை யாரால் யாரிடம் சொல்லப்படுகிறது என்பதில் தொடங்கி கிருஷ்ணனின் மாற்றம் அர்ஜுனனின் அகத்தில் நடைபெறும் மிக நுண்ணிய மாற்றங்களை சொல்லிச் செல்கிறது. பன்னிரு படைக்களத்தை விட சிக்கலான பிரதி. சில நாட்களுக்கு முன் "உன்னதமாக்கல்" என்ற உங்கள் கட்டுரையை படித்தேன். உன்னதமாக்கலின்  அவசியமும் அழகும் புரிகிறது. கூரை வளைவுகளில் யாரும் பார்க்காத இடத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் அழகு. கண்டு சொல்ல வியந்து நோக்க யாரும் இல்லையெனினும் அவை இருக்கும். அர்ஜுனனின் அகத்தில் நிகழ்பவை கிருஷ்ணனுக்காக தன்னை தயாரிக்கும் அர்ஜுனன் புராணங்களின் கட்டுடைப்பு தலைகீழாக்கம் என எத்தனை வார்த்தைகளில் சொன்னாலும் அத்தனைக்கும் வெளியே தான் கிராதத்தை நிறுத்த வேண்டி இருக்கிறது. 

வெண்முரசின் ஒவ்வொரு நாவலும் முந்தையதை விட சிக்கலானதாக ஆழம் மிக்கதாக முந்தையதை விட குறுகிய காலத்தில் நடைபெறுவதாக உள்ளது. அவற்றை எதிர் கொள்வதற்கான பயிற்சியையும் வெண்முரசே அளிக்கிறது. ஒருவேளை வெண்முரசின்  ஒரு பிரதியை அதன் அழகும் நுணுக்கமும் குறையாமல் அதன் உள்ளோடும் உட்பிரதியையும் சிதைக்காமல் படமாக்க முடியும் என்றால் அது நோலனால் மட்டுமே ஆகக்கூடியது. அவரும் இலக்கியம் கற்றவர் தானே!
அன்டன்
சுரேஷ் ப்ரதீப்