இனிய சகோதரனுக்கு
வெண்முரசின் வாசகி.
கிறிஸ்தவ பின்புலத்தில் மற்ற மதத்தைப் பற்றிய அறிவே இல்லாமல்
வளர்க்கப்பட்டவள்.உங்கள் வலைத்தளத்திலும் 1 வருடம் வரை வெண்முரசை ஒதுக்கி
வைத்துவிட்டு மற்ற பதிவுகளை படித்து வந்தவள். ஆனாலும் நாள் ஒன்று வாய்க்கவே
வெண்முரசுக்குள் விழுந்து விட்டேன். சிறு வயதில் இருந்தே பைபிள்
வசனங்களுடன் வளர்ந்ததால் எதை படித்தாலும் என்னை அறியாமலேயே பைபிளுடன்
ஒப்பிடத்தோன்றும். காடு நாவலில் ஒரு வரி "காடு மேல் நோக்கிய திசையில்
மட்டுமே வளர்வது.அங்கு பக்கவாட்டில் திசைகளைத் தேடுகிறவன் அறிவிலி "
என்பதாக. பைபிளிலும் "பூமிக்குரியவைகளை அல்ல மேலானவைகளையே நாடுங்கள் " என்ற
வார்த்தையோடு அது ஒட்டிக் கொண்டது.
இன்றைய
கிரதாத்தில் வந்த மைனாக மீன்கள் , பைபிளிலும் பெருங்கடலைக் கலக்கி அதில்
விளையாடுவதெற்கென்றே கடவுள் படைத்த உயிர்கள் என்று மிகப் பெரிய மீன்களைப்
பற்றி சொல்லப்பட்டவைகளோடு கலந்து விட்டது. இன்னும் நிறைய வார்த்தைகளை நான்
ஒப்புமை படுத்திக்கொண்டே இருப்பேன். இதுவும் அதுவும் ஒத்துபோகிற புள்ளியைக்
கண்டடையும்போது வரும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆனாலும் இந்த
அழகியக்கதைகளை என் பிள்ளைகளுக்கு அப்படியே சொல்ல முடியாது. சொல்ல முயன்று
வாங்கிக் கட்டிகொண்டேன். எனவே சிம்சோனை சொல்லும்போது பீமனையும் பாலைவணக்
கதைகளில் காந்தாரத்தையும் எல்லா உணவுகளையும் கலந்து கட்டி சொல்லி
விடுவேன்.
எனக்கு விதவிதமான உணவுகள் பற்றிய பகுதிகள் மிகவும் பிடித்தமானவைகள்.
ஆனாலும்
வேதங்கள் எப்படி உருவாகி இருந்தாலும் அது கண்டிப்பாக 'விண்சொல் ' என்பதே
மெய். மற்ற வாசகர்களின் பார்வையில் விரிகின்ற விரிவு ஆச்சர்யப்பட
வைக்கிறது. வாழ்த்துக்களுடன்.
டெய்ஸி பிரிஸ்பேன்
அன்புள்ள டெய்ஸி
தொன்மையான நூல்கள் எல்லாம் அதற்கு பல்லாயிரமாண்டுக்காலம் முன்பிருந்தே வந்த தொன்மங்களால் ஆனவை. அன்று மானுடம் கிட்டத்தட்ட ஒரேவகையானது. ஆகவே தொன்மங்களும் பெரும்பாலும் ஒன்றே. வேறுபாடுகள் வளர்ச்சிப்போக்கில் பின்னர் வந்தவை
வேதங்கள் என்பவை ‘மானுடனால் அறியப்பட்ட ஆதிமெய்மையின் மொழிவடிவங்கள்’ என வரையறை செய்யலாம் . அவையும் அடிப்படையில் ஒன்றே
ஜெ