வெண்முரசு
நாவலாகத் துவங்குகையில் ஜெ இம்முயற்சியைப் பற்றி “நாவல்வரிசைக்கான பொதுத்தலைப்பு
‘வெண்முரசு’. ஏன் இந்தத் தலைப்பு என சொல்லத்தெரியவில்லை,
தலைப்பு தோன்றியது, அவ்வளவுதான்.
அறத்தின் வெண்முரசு. எட்டு சுவைகளும் இணைந்து ஒன்றாகும் சாந்தத்தின் நிறம்கொண்ட
முரசு. ”, என்று கூறினார். இதுவரை 11 முழு
நாவல்களும், 12 வதாக கிராதமும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த பன்னிரு
நாவல்களிலும் முரசின் விம்மல்களும், அது எழுப்பும் கார்வைகளும் நாவலில்
வந்திருக்கின்றனவே அன்றி, இந்நாவல் தொடரின் பொது தலைப்பிற்கு நியாயம் செய்யும்
வகையில், இத்தொடரின் மையத் தரிசனத்தை, நோக்கத்தை இப்பெயர் எவ்வாறு சுட்டுகிறது
என்பதை அறியும் வகையில் எதுவும் வரவில்லை, கிராதம் 47 வரை. இன்று
நாவல் வரிசையில் முதல் முறையாக இதன் பெயர்க் காரணத்தை ஜெ அறியத் தருகிறார்.
அதுவும் சண்டன் என்னும் சூதனின் கூற்றாக, “அந்தணரே, வேதமுரசு
குறித்து நீங்கள் சொன்னது உண்மை. அன்றும் இன்றும் அது குருதியொழுகும் செம்முரசே.
ஆனால் சொல்சென்று தொடும் அறியாத் தொலைவெளி ஒன்றில் தூயவெண்முரசு ஒலிப்பதை நான் கேட்கிறேன்”, என்று கூறியிருக்கிறார். ஜைமினி வேதம்
என்பதை ‘இங்கு
வந்த உயிர்களில் நெறிநின்றவை வாழ்ந்தன. தங்களை மேலேற்றிக்கொண்டவை வென்றன.
வென்றதனால் வேதம் உருவானது. மீண்டும் வெற்றிக்கு அது நெறியென்றாகியது. வேதம்
மாபெரும் அடர்களம் ஒன்றின் வெற்றிமுரசு’ என்று அதை ஒரு மானுடக் குழு, 'இணைந்து வாழ்தல்' என்னும்
பரிணாமச் சங்கிலியின் உச்சத்தை எட்டியதைக் கொட்டும் முரசாக உருவகிக்கிறான்.
வெண்முரசு அந்த குருதிச் செம்மை படிந்த வெற்றிமுரசு, எவ்வாறு இந்த ஒட்டுமொத்த பாரத
நிலத்தையும் ஒரு பண்பாட்டுச் சரடால் இணைத்து மேலும் குருதி விழாத சத்வ வேதாந்தமான
கீதையாக எழுவதைப் பற்றிய புனைவாக மலர்ந்து கொண்டிருக்கிறது. ஆம், கீதை குருதிக்
களத்தில் தான் மலர்ந்தது. ஆயினும் அதற்குப் பிறகு இம்மண்ணில் ஒட்டுமொத்த பாரதமும்
தம்முள் அடித்து, மடிந்த ஒரு பெரும் போர் நிகழவில்லை. ராச்சியங்களுக்கு இடையே
நிகழ்ந்தன. ஆனால் மக்கள் கூட்டமே விரும்பி இணைந்து நிகழ்ந்த கடைசிப் போர் பாரதப்
போராகத்தான் இருக்கும் என எண்ணுகிறேன்.
வெண்முரசு நாவல்
வரிசை இந்தியா எங்கும் மக்களை ஒன்றிணைத்த பண்பாடு எவ்வாறு உருவாகி வளர்ந்தது,
அதற்கு வேதங்கள், வேதாந்தம், கீதை, உபநிஷத் என்னும் பிரஸ்தானத்ரயம், சமணம், சைவம்,
சாக்தம் போன்ற மதங்கள், இப்பெருநிலத்தின் ஆறு தரிசனங்கள் போன்றவை எவ்வாறு
பங்களித்தன, இப்பண்பாடாக இது உருமாற மகாபாரதம் எப்படி ஒரு நிகழ்கருவியாக இருந்தது,
அதை இத்திசை நோக்கித் திருப்ப கிருஷ்ணன் என்னவெல்லாம் செய்தான் என்பதை ஒரு
புனைவாகத் தருகிறது. வெண்முரசு பொருத்தமான பெயர் தான்.
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்