Friday, August 9, 2019

கதை



ஜெ


வெண்முரசில் போர்க்களக் காட்சிகள் போர்க்காட்சிகள் பற்றிய வர்ணனைகளை நான் எப்போதுமே கூர்ந்து பார்ப்பதுண்டு. நீங்கள் போர்களை நுணுக்கமாக வர்ணிக்கிறீர்கள். தகவல்களைக் கொடுக்கிறீர்கள். அதன்பின் அதைக் கவனிக்கும் ஒருவனின் பார்வை வழியாக அந்தக்காட்சியை கடந்துசென்று அதை ஒரு தத்துவமாகக் குறியீடாக ஆக்குகிறீர்கள்

குறிப்பாக மற்போர், கதைப்போர்  விற்போர் ஆகிய இரண்டும்  திரும்பத்திரும்ப வர்ணிக்கப்பட்டுள்ளன. கதையை நீங்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். யானை மத்தகம் முதல் வண்டு வரை அத்தனை உவமைகள் உள்ளன. மற்போரின் மிகச்சிறந்த கவித்துவ வர்ணனை என்பது மாமலரில் பீமன் ஒரு மல்லனைக் கொன்றபோது வந்தது

அத்தனைக்கும் அப்பால் மீண்டும் கதைப்போர் பற்றி புதிதாக இவ்வளவு சொல்வதற்கிருந்தது என்பது வியப்புக்குரியது. இந்தப்போர் புதிய வர்ணனைகள் புதிய தத்துவப்படுத்தல்களால் ஆனதாக இருந்தது

பிற போர்கள் அனைத்தும் அவற்றின் அசைவுகளை வகுத்து நெறிகளை கூர்செய்து முழுமையை அடைந்த பின்னரும்கூட கதைப்போர் முற்றிலும் பண்பாட்டுக்குப் பழகாத களிறுபோல் மதத்தை உள்ளொதுக்கி காட்டை கனவுகளில் நிறுத்தி மானுடரிடம் திகழ்ந்தது.

என்ற வரியிலிருந்து நீண்டு நீண்டு சிந்திக்கமுடிந்தது. இந்தப்போரில் பட்டத்து யானை துரியோதனன். மதம்கொண்ட காட்டு யானை பீமன். கதையின் இயல்பே அது இறுதியாக கட்டற்ற காட்டுவிலங்காக ஆகிவிடும் என்பதுதான். ஆகவே தான் பீமன் ஜெயிக்கிறான்


ரவிக்குமார் ஆறுமுகம்