Friday, August 9, 2019

துரியோதனர்கள்




அன்புள்ள ஜெ,

துரியோதனன் செல்லும் யுகப்பயணங்கள் ஏன் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். துரியோதனனின் கதாபாத்திரத்தை ஒரு தனிக்குணமாக இல்லாமல் ஒரு யூனிவெர்ஸல் ஆர்க்கிடைப் ஆக மாற்றுகிறீர்கள். என்றென்றைக்குமான ஆளுமை அவன் அவனுக்கு எந்த மாற்றமும் இல்லை. அப்படியே அவன் இங்கே இருந்துகொண்டிருப்பான். ஏனென்றால் அவன் இந்த பூமியின் அடிப்படையான ஓர் இயல்பு. ஒரு துண்டு வரப்புக்காக வெட்டிச்சாகும் விவசாயியில் துரியோதனன்தான் இருக்கிறான்.

ஆகவேதான் அவனுடைய அந்த மண்பற்று என்ற அம்சத்தை மட்டும் முன்னிறுத்தி மற்றவிஷயங்கள் அனைத்தையுமே பாஸிட்டிவ் ஆக நிறுத்தி எழுதியிருக்கிறீர்கள். மண்ணுக்காக வாழ்ந்து சாவனே ஒழிய வேறு எந்தவகையிலும் அவனால் எண்ண முடியாது. துரியோதனன் முன்பு இருந்தான்.அந்தக்குகைக்குள் சென்றால் அவனைப்போல பல துரியோதனர்களைக் காணமுடியும். கலியுகத்தின் அடையாளமான அந்தச் சுனைக்குள் சென்றால் அவனைப்போல பலர் எழுந்துவரவிருப்பதையும் காணமுடியும்.

மண்ணாசை என்றைக்குமே மனிதர்களை ஆட்டிவைப்பது. அது ஒரு பித்து. கடவுள் மனிதனுக்கு அதை ஒரு வரமாகவும் சாபமாகவும் அளித்து அனுப்பியிருக்கிறார்

மகாதேவன்