Saturday, August 10, 2019

கர்ணன் ஆலயம்



ஆசிரியருக்கு,

உத்தரகண்டின், கர்ணபிரயாக் நகருக்கு சென்றுள்ளீர்களா? அங்கு அங்கருக்கு தனி ஆலயம் ஒன்றுள்ளது (படத்தை இணைத்துள்ளேன்). அவ்விடம் இளைய யாதவர் கர்ணனுக்கு ஈமக்கிரியைகள் செய்த இடமென்று ஒரு கூற்றும் அங்கர் தன் தந்தை சூரிய பகவானை எண்ணி தியானம் இருந்த இடமென்றும் இருவாறாகச் சொல்கிறார்கள். எதோ ஒரு வகையில்  வசுஷேணர் அவ்விடத்தில் நிலைகொண்டிருக்கிறார்.  விரைவில் அங்கு சென்று வர எண்ணியுள்ளேன். அடுத்த மாதம் குருஷேத்ரம் செல்கிறேன், அது முடிந்தவுடன் அங்கரின் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். 

முன்னர் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தது போல், தமிழகத்தில் அங்கரின் ஆலயம் ஒன்றை அமைக்கும் எண்ணமுள்ளது. 

தீயின் எடை, எதிர்பார்த்தபடி இருட்கனியிலிருந்து கீழிறங்கி சற்றே மேலெழுந்துள்ளது, இனி விண்ணெழுமென்பதில் சந்தேகமில்லை. முதல் சில அத்தியாயங்களை வாசித்த போது அகம் விரிந்த வேகத்திற்கு களம் செல்லவில்லயோ எனும் எண்ணமெழுந்தது, அந்த மட்டுப்படுதல் தேவையென்பதை இப்போது உணர்கிறேன். சற்றே அத்தியாயத்தின் அளவையும் குறைத்து விட்டீர்கள், சீக்கிரம் தீர்ந்து விடுகிறதே எனும் வருத்தம் வேறு :( 

இருட்கனியில் மனதை நெகிழ்த்திய ஒரு இடம் சுபாகுவின் மரணத்திற்கு முன் அவன் கடந்து சென்றதை எண்ணிக்கொள்வது,  துர்முகன் யானை தன் அடிவயிற்றால் நேரடியாக உரையாடுகிறது என, துரியோதனன், அவன் மேலும் பெரிய கொள்கைகளை நோக்கிச் செல்கிறான் அவனுக்கு ஒரு குடம் கள்ளை ஊற்று. அதை விட இது எளிது என்று துச்சாதனன் அவன் மண்டையில் ஓங்கி அறை விட நகைக் கூச்சல்களுக்கிடையே அவன் மயங்கி விழுகிறான். சுபாகுவின் கண்களில் நீர் பெருகுகிறது. 

கர்ணனுக்கும் துரியோதனுக்குமான உறவு குறித்து விளக்குமிடத்தில் எம்.எஸ் ஸிற்கும் சு.ரா வுக்குமான உறவை உணர முடிந்தது, அங்கு சொற்கள் தேவையில்லை; அருகாமை மட்டுமே போதுமானது. பின்னர், மீண்டு ஒரு சொல் உறைக்கும் போது இருவரும் அணுக்கமான ஒன்றையே எண்ணிக் கொண்டிருந்தது தெரிய வரும். 

மஹாபாரதத்தில் உள்ள தெயவ கணங்களை வெண்முரசில் நீங்கள் நடைமுறைக்கு சாத்தியமானதாக மாற்றியிருக்கிறீர்கள். அந்தத் தருணங்களே வெண்முரசையும் அதன் காவிய நாயகர்களையும் மேலும் எடை கொண்டதாக ஆக்குகிறது.

நன்றி
சிவா