Wednesday, March 18, 2015

மேய்ப்பன்



அன்புள்ள ஜெ,

இன்று கிருஷ்ணனும் சாத்யகியும் சந்திக்குமிடம் கிருஷ்ணனின் பேச்சு ஓர் தேர்ந்த, பண்பட்ட தலைவன் ஒருவனின் அணுகுமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. அவன் நுழைந்த உடனேயே காம்பில்யத்தின் போரைப் பற்றி ஆரம்பிக்கிறான்.

கிருஷ்ணன் சாத்யகியை திரௌபதியின் சுயம்வரத்தில் கண்டு அவனை துவாரகைக்கு அழைப்பு விடுத்த போதே அவனை முழுமையாக எடை போட்டிருப்பான். அவனை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று அப்போதே முடிவு செய்திருப்பான். தன் முடிவை சரிபார்க்கவும், அவன் தகுதியை, திறமையை அறியவும் அந்த முதல் சந்திப்பை பயன்படுத்துகிறான். எடுத்த உடனேயே அரச நிகழ்வுகளை, அதுவும் அவன் சம்பந்தப்படாத ஓர் நிகழ்வைப் பற்றிய அவன் அறிதலைப் பற்றி அறிய வினவுகிறான். அதற்கு சாத்யகியின் பதிலிலிருந்தே அவனால் அரசு சூழ்தலையும், போரைப் பற்றிய தன் விவரணங்களைப் புரிந்து கொண்டதிலிருந்தே அவனால் படைக்கலப் பயிற்சியைப் பெற முடியும் என்பதையும் முடிவு செய்கிறான். ஓர் நேர்முகத்தேர்வு போல இருக்கிறது

 இப்போது கிருஷ்ணனிடம் மிகத் தேவையானது அரசு சூழ்தலில் அவனுக்குதவும் ஒருவரும், ஓர் சிறந்த படைத் தளபதியும். அந்தத் தேவையைக் கச்சிதமாக சாத்யகி நிறைவு செய்கிறான். கிருஷ்ணன் ஒவ்வொருவரையும் அப்படி தான் தேர்ந்தெடுக்கிறான். அவர் திறமைகளை உணர்ந்து அதற்கேற்றார் போல் பணி அளிக்கிறான். அதன் பிறகு அவர்களை நம்பி அப்பணிகளை முழுமையாக ஒப்புவிக்கிறான். அனைத்துக்கும் மேல் தான் ஒவ்வொருவருவரையும் அறிந்திருக்கிறேன் என்பதையும், அவரவர் பணிகளில் அவர்களை விட அதிகம் தெரிந்தவன் தான் என்பதையும் அவர்களில் ஆழ்மனதில் பதிய வைத்த பிறகே பணிகளை ஒப்புவிக்கிறான். சுருக்கமாக எப்போதும் விழித்தே இருக்கிறான். அனைத்தையும் அவன் விழிகள் பார்க்கின்றன. அனைத்திலிருந்தும் விலகியும் இருக்கின்றன. 

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

என்று வள்ளுவர் சொல்வதை நேரில் கண்டதைப் போல உள்ளது. இக்குறளில் சிறப்பான வார்த்தையாடல் என நான் நினைப்பது "விடல்" என்பதைத் தான். பொறுப்பை அவன்கண் விட்டு விட வேண்டும் என்கிறார் வள்ளுவர். பொறுப்பை அளித்த பின் அது நடக்கிறதா, நடக்கிறதா என்று பின்னால் செல்வதோ, தான் இருந்தால் தான் நடக்கும் என்ற நிலையை ஏற்படுத்துவதோ ஓர் தலைவனுக்கு அழகல்ல. அவ்வாறு செய்வது தெரிந்து வினையாடுதல் ஆகாது. 

இன்றைய அத்தியாயத்தின் இறுதியில் சாத்யகி துவாரகை - பெருவாயிலைப் பார்க்கும் காட்சி ஓர் விம்மலை உடலில் பரவிச் சென்றது. ஆம். அவ்வாயிலும் கிருஷ்ணனும் ஒன்றே. குறிப்பாக "முதல்முறையாக அந்தப் பெருவாயிலை அண்மையில் கண்டான். " என்ற வரிகள். அந்த பெருவாயிலின் தூண்கள் குவை மாடங்களுக்கு மேல் செல்கிறதாம். பின்னால் சென்று பார்த்தால் வானை எட்டும் அந்த வாயிலைக் காண முடிகிறதாம். அண்மையில் கண்ட அவ்வுருவம் கொண்ட பேருருவை, அந்த விஸ்வரூபத்தை இப்படி எழுதியது அபாரம் ஜெ. பேரென்னவோ நவீன நாவல் தான். ஆனால் ஒரு தொன்மத்தைக் கூட விடவில்லை நீங்கள். நினைக்க நினைக்க ஓர் பேரெழுச்சி.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்