வெண்முரசின் சிறப்புகளில் ஒன்று அது இது வரை எவரையும் தெய்வமாகக் காட்டியதில்லை. கிருஷ்ணன் கூட ஓர் மீமானுடனாகத் தான் வருகிறான். அவன் இது வரை தான் செய்யப்போவதாக எதையும் சொல்வதில்லை. செய்து கொண்டே செல்கிறான். ஒரு வகையில் அவனின் பாத்திரம் மட்டும் தான் தன் எண்ண ஓட்டங்களைப் பற்றி பேசாத ஒன்று. அவனின் அனைத்து செய்கைகளும் மானிடரால் முடியக்கூடியவையே. அதைச் செய்யத் தேவையான மன அமைப்பு பெரும்பாலானவர்களுக்கு இருப்பதில்லை என்பதே அவனை அனைத்தும் அறிந்தவனாகவும், அனைத்தையும் ஆற்றவல்ல மாயவனாகவும் உணரச் செய்கிறது. இவையெல்லாம் அவனைக் காணும், அவனோடு பழகும் பிற பாத்திரங்களின் உணர்வுகள் மட்டுமே. சுருக்கமாக அவன் எப்போதும் பலனை எதிர்பாராமல் தன் கடமைகளை மட்டுமே செய்து கொண்டு செல்கிறான். எங்குமே தேங்குவதில்லை. ஒழுகிக் கொண்டேயிருக்கிறான். அவன் இது வரையிலும் எதன் மீதும் விழைவை நாட்டவில்லை. மொத்தத்தில் ஓர் கர்ம யோகி.
உதாரணமாக
கிருஷ்ணன் பீஷ்மரைச் சந்தித்து நாட்டைப் பிரிப்பதைப் பற்றி பேசுமிடம்.
பேசா நெறியில் இருக்கும் பீஷ்மர் யாரிடமும் உரையாடுவதில்லை என்று
அவனுக்குச் சொல்லப்படுகிறது. ஆனால் அச்செய்தி அவனைச் சோர்வுறச்
செய்வதில்லை. அதே புன்னகையோடு, தான் சொல்ல வேண்டும் என்று நினைத்தவற்றைத்
தெளிவாக அவரிடம் சொல்கிறான். இறுதியில் அம்பையையும் திரௌபதியையும் ஒரே
கோட்டில் கொண்டுவந்து நிறுத்தியமை அவனது அபாரமான அரசு சூழ்தலின்
திறனுக்குச் சான்று. இங்கே தன் கடமையை மட்டுமே செய்து விட்டு. அதன்
எவ்விளைவுகளையும் எதிர்நோக்காது இயற்கையை ரசிக்கத் துவங்கி விடுகிறான்.
இறுதியில் சம்படை அன்னையின் துக்கத்திற்காக அவர் கிளம்பிச் செல்ல
நேர்கிறது. அவன் இங்கே பீஷ்மரிடம் வருவதற்கு முன் அஸ்தினபுரியில் இறுதியாக
பேசுவது சம்படை அன்னையிடம் தான். அவள் இறக்க வேண்டும், அதனாலாவது பீஷ்மர்
மீண்டும் நகர் புக வேண்டும் என்றெல்லாம் அவன்திட்டமிட்டிருக்க மாட்டான்.
ஆனால் அவளின் இறப்பு நிகழவில்லையெனில் பீஷ்மர் மீண்டிருக்க மாட்டார்.
ஒருவகையில் அவளை ஒரு பொருட்டாக, ஓர் ஆத்மாவாக, ஓர் அன்னையாக, சக ஜீவனாக
மதித்து, பெரும் புன்னகையோடு பேசிய அவன் செயலே அவளின் நிறைவான மரணத்திற்கு
காரணம். இவற்றையெல்லாம் ஓர் விளையாட்டாகவே அவன் செய்கிறான். எதன் மீதும்
பொறுப்பினை ஏற்றுவதுமில்லை. தட்டிக் கழிப்பதும் இல்லை.
அப்படிக் காட்டப்பட்டிருக்கும் கிருஷ்ணன், சகோதரர்கள் இணைத்து உள்ளம் நிறைந்திருக்கும் தருணத்தில் அர்ஜுனனிடம், "இதை ஒன்றுமில்லை என்றாக்கும் சிலவற்றை நான் பின்னர் அளிப்பேன்"
என்கிறான். உண்மையில் இச்சொற்கள் ஓர் அனைத்தும் அறிந்த, அனைவரையும்
ஆட்டுவிக்கும் தெய்வத்தின் குரலாகவே எனக்குப் படுகிறது. எவ்வளவு யோசித்தும்
ஓர் மானுடச் சாத்தியமான ஓர் சொல்லாக எனக்குப் படவில்லை. மேலும் இது
வரையிலும் கிருஷ்ணன் என்ற பாத்திரம் வடித்தெடுக்கப்பட்டிருக்கும் ஒருமையை
மீறிய ஒன்றாகவே படுகிறது. நண்பர்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் எதையாவது
விடுகிறேனா? நிச்சயம் கிருஷ்ணனை தெய்வத்தன்மையுள்ள ஒருவனாக வெண்முரசில்
பார்க்கக் கூடாது என்றே விரும்புகிறேன். அனைவரையும் போல ஓர் மானுடனாக,
ஞானியாக, கர்ம யோகியாக, அவனே உபதேசித்த கீதையின் வாழும் உருவாகவே பார்க்க
விழைகிறேன். வெண்முரசும் அப்படியே தான் இது வரை அவனைப் படைத்து
வந்திருக்கிறது. அதனால் தான் இச்சொல் என்னை மிகவும் அலைகழிக்கிறது.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்