அன்புள்ள ஜெ
நீலம் நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். ஒரு ரொமாண்டிக் காதல் காவியம். செக்ஸ் இந்த அளவுக்கு நுட்பமாகவும் தீவிரமாகவும் தமிழிலே எழுதப்பட்டதில்லை. ஆனால் அந்த எழுத்தின் சாராம்சமாக உள்ளது ஒரு மேய்ச்சல்நில வாழ்க்கை .
ஆச்சரியமான ஒரு விஷயம் இது. மேய்ச்சல்நில வாழ்க்கையிலேதான் பெண்ணுக்கு அதிகபட்ச சுதந்திரம் உண்டு. அவளுக்கு திறந்த வெளி கிடைக்கிறது. ஆனால் இங்கே ராதை கூண்டுக்கிளியாக இருக்கிறாள். அவளுடைய தாபம் என்பது வெட்டவெளிக்குவேண்டிய தாபம்தான். இந்தச்சித்திரத்தை வைத்துப்பார்க்கும்போது எப்படி இந்தமாதிரி ஆனது என்ற கேள்வி வருகிறது. யாதவர்கள் எப்போது இற்செறிப்பை ஆரம்பித்தார்கள்? ஆய்ச்சியர் இயல்பாக ஊருக்குள் எல்லாம் சென்று நெய்விற்கிறாரக்ள். ஆனால் ராதை வீட்டைவிட்டு வெளியே செல்லவே ஏங்குகிறாள்.
அவளுக்குக் கிருஷ்ணன் என்பவன் அவளுடைய வெளியுலகம். அவள் கனவுகாணும் எல்லா இனிமைகளையும் தனக்குள் கொண்டவன். பகலிலே வெளியே போகமுடியாத அவள் ராத்திரியில் வெளியே செல்கிறாள் என்பதிலேயே பெரிய ஒரு புதிர் இருக்கிறது. அது அவளுடைய கனவாகவே இருக்கலாம். அவள் காணும் கண்ணன் அவளுடைய கற்பனையாகவே இருக்கலாம். அதெல்லாமே அவளுடைய பகற்கனவுகளின் உலகம் என்றும் சொல்லிவிடலாம் இல்லையா? இசை, நிலவு, அழகியைளைஞன் எல்லாம்.
இன்றுவரை இந்த இமேஜ் எப்படி இந்தியப்பெண்களைக் கவர்ந்திருக்கிறது என்று பார்த்தால் ஆச்சரியம்தான். இற்செறிப்பு வந்தபின்னர்தான் கண்ணனுக்கு இந்த முக்கியத்துவம் வந்திருக்கவேண்டும்
செம்மணி அருணாச்சலம்