ஜெ,
நீலம் நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். வெண்முகில்நகரம் முடித்த இடைவெளியில் மீண்டும் வெண்முரசை வாசிக்கும்போது நீலம்தான் மீண்டும் வாசிக்கத்தோன்றியது. ஏனென்றால் நாவல் முழுக்க ஏதோ வடிவத்திலே ராதை வந்துகொண்டே இருக்கிறாள் என்ற எண்ணம் வந்தது. பின்னாடி வந்துகொண்டிருக்கிற எல்லா அரசிகளிலும் ராதையின் அம்சம் இருக்கிறது. எல்லாருமே கூண்டுகிளிகளாகவும் ஏங்கிக்கொண்டிருப்பவர்களாகவும்தான் இருக்கிறார்கள். உண்மையில் திரௌபதியேகூட அதைப்போலத்தான் தோன்றுகிறாள்
ஆகவேதான் அத்தனைபேருக்குமே கிருஷ்ணன் முக்கியமானவனாகத் தோன்றுகிறான். காந்தாரியின் படுக்கையறையிலே கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிக்க அத்தனைபெண்களும் அவனைச்சூழ்ந்து கண்மயங்கி அமர்ந்திருப்பதைப்பார்த்தபோதுதான் இதை நினைத்துக்கொண்டேன். அவர்களெல்லாம் ராதைகள் என்று. ஆகவேதான் முன்னரே போய் வாசிக்கவேண்டும் என்று நினைத்தேன்
ராதையின் தாபத்தையும் கொந்தளிப்பையும் வாசித்துக்கொண்டே செல்வதென்பது ஒரு பெரிய அனுபவம். மனக்கிளர்ச்சியடையச்செய்யும் அனுபவம்
கருநீலக் கடலொன்று கண்ஒளிர்ந்து கைவிரிந்து காலெழுந்து இதழ்மலர்ந்து உங்கள் மடிகொண்டமைந்தது. பெண்களே, பேதையரே, பெருமையல் திரண்டமைந்த அன்னையரே, அக்கண்களுக்கு மையிட்டு கன்னங்களில் பொற்பொடியிட்டு கைகளுக்கு வளையிட்டு கால்களுக்கு தண்டையிட்டு அணியிட்டு அணிசெய்து நீங்கள் அறிந்ததுதான் என்ன?
ராஜன்