Friday, May 15, 2015

தருமர் முதல் கணிகர் வரை




அன்புள்ள ஜெயமோகன் ,


 என் மகனிடம்  சில கதைகள் ஏன் இலக்கியமாகிறது என பேசிக்கொண்டிருந்தேன். நானும் அவனும் ஒன்றாக சில வருடங்களுக்கு முன் ஹாரிபாட்டர் வரிசை முழுதையும் படித்திருக்கிறோம். 

ஹாரிபாட்டரில் நிறைய எண்ணிக்கையில் முக்கியமான கதை மைந்தர்கள் உள்ளனர். கடந்தகால வரலாற்று நிகழ்வுகள் அதில் உருவகிக்கப்பட்டிருந்தது.  சில இனத்தினரை அடிமையாக வைத்திருத்தல், அதை பெரும்பான்மையினர் எந்தவித மனச்சங்கடமும் இன்றி ஏற்றுக்கொண்டிருப்பது. அதிகாரத்திற்கும் தீமைக்கும் எப்படி மனிதர்கள் தன்னை எளிதாக ஒப்புக்கொடுத்துவிடுகிறார்கள் என்பதும் அதில் காட்டப்பட்டிருக்கிறது.

 ஒரு மாய உலகு மிகவும் திறம்பட உருவாக்கி ஒழுங்கு குலையாமல் நிகழ்த்திக்காட்டப்பட்டது.  கதை மிகவும் விறூவிறுப்பாக கொண்டுசெல்லப்பட்டது.  படிப்பதற்கு மிகவும் இன்பம் அளிப்பதாக இருந்தது.


ஆனாலும் இது ஏன் வெண்முரசுபோல இலக்கியத்தில் இடம்பிடிக்கமுடியாது என்பதை கூற முயன்றேன்.ஹாரிபாட்டரில் கதை மாந்தர்கள் மனதளவில்  எவ்வித மாறுதலையும் அடைவதில்லை என்பதை கூறீனேன். நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களாகவே இருப்பதையும் கெட்டவர்கள் எப்போதும் எல்லாவகையிலும் கெட்டவர்களாகவே இருப்பதையும் கூறினேன். ஓரிருவரைதவிர மற்றவர்களின் மனம் என்ன நினைக்கிறது என்பது சொல்லப்படுவதில்லை. சிறு சிறு சலனங்களை தவிர  அவர்களின் மனம் ஒரே வகையில் செயல்படுகிறது. அல்லது ஒரே அடியாக தீமையிலிருந்து நன்மைக்கு மனம் திரும்பல். 

மனிதர்களின் மனம் மற்றவகளின் நடத்தையாலும் சூழலாலும் பாதிக்கப்பட்டு மாறுதலடைவதைக் காட்டுவது என்பது அந்தக்கதையில் மிகக்குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டினேன். தாய்மை, தோழமை, காதல் எல்லாம் எப்போதும் சொல்லிச் செல்லும் பழகிய பாதையிலேயே செல்கிறது.   அந்தக்கதை நம்மை கதாநாயகனிடம் ஒன்றச்செய்து மற்ற பாத்திரங்களை நாம் வெளியாட்களாக கருதவைக்கிறது. 

அவ்வளவு பெரிய கதையில் நாம் வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை. அதுவும் வெறும் மனதளவில் எந்த மாறுதலும் அடையாத சீரான ஒரே வாழ்க்கை. மாறுதல்கள் எல்லாம் வெளியில் நிகழ்வதுதான். அதனால் நாம் மனதளவில் எதையும் பெற்றூக்கொள்வதில்லை. நம்மை கவனிக்கவைத்து நம்மிடமிருக்கும் சிறுமைகளை சுட்டிக்காட்டும் அனுபவங்கள் எதுவும் இல்லை. ஒரு அதிநாயகனின் வாழ்வை வாழ்ந்து முடிக்கிறோம் அவ்வளவுதான். கதை படிப்பதற்கு முன்னிருந்ததற்கும் கதை படித்தபின்பும் நம் மனம் அப்படியே இருக்கிறது. உண்மையில் ஒரு இனிய கனவு கண்டு முடித்த உணர்வு ஒன்றை மட்டுமே  நாம் அடைகிறோம். 

என் மகனிடம் மேலும் நான் என்ன சொல்லவேண்டும் என யோசிக்கின்றேன். 


த.துரைவேல்