இனிய ஜெயம்,
முந்நூறில் ஒருவர் பதிவு கண்டேன், இறுதி
வரிகள் நிலை குலைய வைத்துவிட்டது. எனக்கு வரும் கடிதங்கள் எதையும்
பிறர் வசம் பகிர்ந்துகொள்வதில்லை. சேகரின் இறுதிக் கடித்ததை உங்கள்
பார்வைக்கு அனுப்பியதன் காரணம், அதில் சேகரின் உள்ளுணர்வு அமானுஷ்யமாக
பதிவாகி இருந்தது. அவரை இறுதியாக சந்தித்தது ரமணாஸ்ரமத்தில். ''மனுஷன் வாழ
நிலம் தேடுறது வேற, கடைசி காலத்துல இங்க போய்தான் சாகனும்னு ஒரு நிலத்த
தேடுறது ஆச்சர்யமா இல்ல'' அன்று அவர் பேசியதில் ஒரு தொடர் இது. காசி
போகவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
எல்லாம்
கலந்து தலைக்கேறி , உருவமற்ற மரணம் என் பின்னால் நிற்பதாக, நான் சற்றே
பின் நகர்ந்தாலும் அதன் மூச்சுக்காற்றை என் புறங்கழுத்தில் உணரமுடியும்
எனத் தோன்றி, பீதி நிறைந்த இரவு. கடந்த ஆறாந்தேதி புதன்கிழமை, மனமெல்லாம்
சேகருடனேயே சிக்கிக் கிடந்தது, அவரது உடல் விமான நிலையத்தில் வந்து
இறங்கி இருக்கும். [ சுஜாதா அவரது கதைகளில் இந்த தருணத்தை வலியுடன்
திரும்ப திரும்ப மீட்டிப் பார்த்திருக்கிறார். ] என்ன செய்வது ஒன்றுமே
செய்வதற்கு இல்லை. தோழி தொலை பேசினார். எனது இரு தோழிகள் [ஒருவர்
எப்போதும் தான் வெளித்தெரிவதை விரும்பமாட்டார்] குரல் கேட்டால் போதும்,
அன்னையின் அடி வயிற்று கதகதப்பில் கண்வளரும் மதலை என என் மனம் மாறி
விடும். மற்றொரு தோழி வானதிக்கு மாலை தொலை பேசினேன், ''சீனு இப்பதான்
உங்கள நினைச்சேன். உங்களுக்கு ஆயுசு நூறு'' என்றார்.
நூறு போதாது இன்னும் ஆயிரம் ஆயிரம் வேண்டும், உங்களுக்கும் உங்களால் கிடைத்த இந்த சொந்தங்களுக்கும் திருப்பி அளிக்க....
கடலூர் சீனு