Monday, September 7, 2015

எட்டு

வெண்முரசுப்படிக்கையில் எழும் மனவெழுச்சியில் எழுதிவிடுகின்றேன். அப்படி எழுதுவதாலேயே மனஅலைகளுக்கு அடியில் மின்னும் வாழ்க்கை புரிகிறது. சரியாகச்சொன்னால் ஜெ சொல்லும் ஒவ்வொருச்சொல்லும் சுட்டும் பொருள் அறியாதவனாகவே இருக்கிறேன். இந்திரநீலத்தில் திருஷ்டத்யுமன்  பார்வையில் கண்ணன் என்ன தரிசனம் தருகிறான் என்றுப்பார்க்க ஆசை. அதை எழுதவேண்டும் என்ற ஆசை உள்ளது. அது எளிதல்ல என்பதால் தள்ளி நிற்கின்றேன்.  

திருஷ்டத்யுமனன் ஒரு ஆடல்மகள்மேல்  காமம் கொள்ளும் வீரனாக எழுந்து கண்ணன்மீது பக்திக்கொண்ட மன்னாக வந்து நிற்கிறான். 

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். “படியை பிடித்துக்கொண்டு மாடிக்கு செல்வதுபோல, லீலையைப்பிடித்துக்கொண்டு நித்தியத்திற்கு செல்லவேண்டும், நித்தியத்தில் இருந்து இறங்கி பக்தியில் வாழவேண்டும்” என்று அமுதமொழி பகர்கின்றார், ஜெ படைக்கும் இந்த திருஷ்டத்யுமனன் இந்த அமுதமொழியின் உருவம். இதை ஜெ செதுக்கி செல்லும் விதத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. அதற்கு நிறைய தடவை இந்திரநீலம் படிக்கவேண்டும்,  மீண்டும் மீண்டும்  படித்து அந்த சொல்லாகவேண்டும்.   

திருஷ்டத்யுமனன் கண்களால் கண்ணனைக் காண்பதற்கு முன்பு, திருஷ்டத்யுமனனை நாம் காணலாம் என்று திருப்பி படித்தேன். “சலங்கை ஒலி எழுந்ததும் திருஷ்டத்யும்னன் தன் நெஞ்சம் படபடப்பதை உணர்ந்தான். இடதுகால் துடிக்கத் தொடங்கியது”-இந்திரநீலம்-2. இடதுகால் துடிக்கத் தொங்கியது என்ற இடத்தில் விழுந்துவிட்டேன். இடதுகால் துடிப்பது என்பது சாதரனாமகா வந்து விழும் சொல்போல்தான் அங்கு உள்ளது. காமம் காலை பதம்பார்க்கும், விழாதவன் எல்லாம் விழுவது அங்குதான்.   உச்ச உணர்வு எழுச்சியில் 440வோல்ட் மின்சாரம்பாய்வதுபோல் இடது கால் துடிக்கும், இந்த காமுகன்தான் கிருஷ்ணகிரி மலையில் கண்ணனை காண்கின்றான். ஆயிரம் இதழ்கொண்ட சகஸ்ராரத்தரிசனம் (ஜெ சொல்லிதான் உணர்ந்தேன்) அது. அதை நான் ஆலயக் கருவறைத்தரிசனமாகவே உணர்ந்தேன். ஆலய கருவறைத்தரிசனம் என்பது புறத்தில் நடக்கும் சகஸ்ராரத்தரிசனம்தான்.   அந்த சகஸ்ராரத்தரிசனமாகிய நித்தியத்தில் இருந்து இறங்கி கண்ணனின் லீலையில் லயிக்கும் பக்தன் ஆகின்றான் திருஷ்டத்யுமனன் என்று இந்திரநீலம் சொல்கிறது. இதை எல்லாம் ஜெ அளந்து திட்டமிட்டு எப்படி எழுதுவது? கண்ணனின் குழல்மட்டும் இந்திரநீலம் எழுதவில்லை. கண்ணனே வந்து எழுதுகின்றான். 

பெரும் காமுகன்தான் பெரும் தரிசனம் காண்பவன். அந்த காமத்தைக்கடப்பவனுக்குதான் அது சாத்தியம்.  பெரும் காமத்தை கடந்தே திருஷ்டத்யுமனன் அந்த தரிசனத்தை அடைகிறான். ஆண் காமத்தின் உச்சத்தில் பெண்ணை அஞ்சுகிறான். பக்தியின் உச்சத்தில் கடவுளை அஞ்சுகிறான். அந்த உச்சத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும் நான்தான் அந்த அச்சத்தை, அகங்காரமாக வெளியிடுகிறது. அகங்காரத்தை விடமுடியாத ஆண் பெண்ணை இழக்கிறான். அகங்காரத்தைவிடமுடியாத மனிதன் கடவுளையும் இழக்கிறான். ஒரு ஆணை மையத்தில் வைதை்து இருபுறமும் வந்து நிற்கிறது இந்திரநீலக்கல்லும் (கண்ணனும்), யோனியும் (பெண்ணும்),  ஒன்றை இழ்ந்தால் ஒன்றை அடையலாம் என்பதும் ஒருவழி. யோனியை அடைந்தவனுக்கு நீலம் இல்லை, நீலத்தை அடைந்தவனுக்கு யோனி இல்லை.  ஒவ்வொரு ஆணும் இப்படித்தான் தவிக்கிறார்கள். தடுமாறுகிறார்கள். முட்டுகிறார்கள் மோதுகிறார்கள், மயங்குகிறார்கள். இந்த இடத்தில் வந்து நிற்கிறான் உலக ஆண்களின் பிரதிநிதியாக திருஷ்டத்யுமனன். 

விழிதிறந்தபோது குறுபீடத்தின்மேல் ஒரு பெரும் இந்திரநீலக் கல்லைக் கண்டு திகைத்து கைகளை ஊன்றிக்கொண்டான். ஊன்றிய கைகளின் மூட்டுகள் அதிர்ந்தாடின. இந்திரநீலம். மண்ணில் சொட்டிய விண்மீனின் விந்து. வேட்கையின் மணிவடிவம். நச்சுக்குமிழி. அதை நோக்கி பொருளின்றி கைநீட்டியதும்தான் அது மதுக்குடுவை என்று தெரிந்தது. தலையை அசைத்தபடி திரும்பி படுக்கையை பார்த்தபோது திடுக்கிட்டான். வெண்சேக்கையில் ஒரு யோனி வாய் திறந்திருந்தது.-இந்திரநீலம்-3.

இந்த திருஷ்டத்யுமனன்  கிருஷ்ணகிரியில் கண்ணனை பார்க்கும்போது அவன் திசைக்கு ஒன்று என்று எட்டு பெண்கள்  நடவில் உட்கார்ந்து இருக்கிறான்.  அங்கு ஒருபெண்  காமம் என்று இருக்க இங்கு எட்டு பெண் ஐஸ்வரியம் என்று இருக்கிறது. திருதராஸ்டிரன் அவையில் குடித்த மது யோனியைக்காட்டியது, துவாரகையில் குசலனுடன் குடித்த மது நீலத்தை, நீலத்தின் லீலையை, நீலத்தின் நித்தியத்தை காட்டியது. சேர் இடம் அறிந்து சேர் என்பதாக வந்துபோகும் காட்சி. திருஷ்டத்யுமனன் அந்த நீலனின் நித்தியத்தில் இருந்து இறங்கிவரும் நாளில் நீலனின் லீலையின் மகிமையால் அன்று யோனியாக தெரிந்த ஒன்றை இன்று காதலாக, கருணையாக, தாய்மையாக தன்னில் பாதியாக தெரிந்துக்கொள்கிறான். 

ஜெ சொல்கிறார் திட்டமிடாமல் எழுத தொடங்கிய ஒன்று அதுவாகவே அதற்கு உரிய இடத்தில் வந்து முழுமையடைகிறது என்று. நீலக்கல்லுக்கும் யோனிக்கும் இடையில் திருஷ்டத்யுமனனை நிறுத்தியது யார்? காமம் என்ற ஒன்றுக்காக எட்டை இழப்பதா? காமத்தில் இருந்து எட்டை எட்டுவதா? வாழ்க்கை ஒவ்வொரு மனிதன் முன்னும் வைக்கும் கேள்வி இது.  இந்த இடத்தில் திருஷ்டத்யுமனன் ஒரு கதைநாயகன் மட்டும்தானா? தனிமனிதனா? 

துளித்துளியாய் தனித்தனியாய் மழைவிழுகிறது
விழுவதற்கு முன்பும் விழுந்த பின்பும் 
அது துளியும் இல்லை தனியும் இல்லை. 

நானா எழுதுகிறேன். ஜெ எழுதும் வெண்முரசு எழுதுகிறது. 

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

நன்றி
அன்புடன் 
ராமராஜன் மாணிக்கவேல்.