Sunday, September 27, 2015

சுழல் உலகம்



அன்புள்ள திரு.ஜெ வணக்கம். அர்ஜுனனின் நாகலோகப்பயணம் குழந்தைகளுக்கான  உலகமாக படைக்கப்பட்டாலும், அது ஞானிகளுக்கான தோரணவாயிலைக் கொண்டு உள்ளது

மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, துரியம் என்னும் ஏழு சக்கரங்கள் ஏழு லோகங்களாக உள்ளன. இந்த ஏழு லோகங்களும் அக உலகங்கள். அந்த அகலோகங்களில் ஏழாம் உலகம் கீழே இருக்கிறது. ஆறாம் உலகம் அதற்குமேல் உள்ளது. ஐந்தாம் உலகம் அதற்குமேல் உள்ளது, நான்காம் உலகம் அதற்குமேல் உள்ளது, மூன்றாம் உலகம் அதற்குமேல் உள்ளது, இரண்டாம் உலகம் அதற்குமேல் உள்ளது. முதல் உலகம் அதற்குமேல் உள்ளது.நாகலோகம் என்பதல் ஏழாம் உலகத்தை கீழே வைத்து, ஏழில் இருந்து ஒன்றுக்கு வரும் கதை அம்சம் அற்புதம்.

தொங்கும்தோட்டம்போல் இது தொங்கும் உலகம். பத்மாசனத்தில் உட்காரும் ஒருவனுக்கு மூலாதாரம் என்பது ஏழாம் உலகம்தான். இப்படி என்னையே தலைகீழாகப்பார்க்கவைத்த ஜெவின் பார்வைக்கு வணக்கம்.

எண்ணிக்கையால் ஒரு உண்மை பெரியதில்லை என்பதையும் உணரவைத்தது இந்த தலைகீழ் ஏழுலோகம். நாகலோகத்தில் ஏழாம் உலகத்தில் இருந்துதான் முதல் உலகத்திற்கு செல்லவேண்டும். அப்ப மானிடன் எட்டாம் உலகத்தில் இருக்கிறானா? எட்டா லோகத்தில் இருக்கிறான். 

காலத்தையும் பாசத்தையும் வெல்லும் அர்ஜுனன் ஏழாம் உலகத்தில் நுழைகிறான். அங்கு தன்னை குரோதத்தால் நிலைநிறுத்துகின்றான். இது முதல் சக்கரமாகிய மூலாதாரம். முயற்சி செய்பவனின் ஆடுகளம்.  

ஏழாம் உலகத்தில் நுழைந்ததாலேயே ஆறாம் உலகத்திற்கு எளிதில் நழுவி சென்றுவிடுகின். ஆறாம் உலகத்திற்கு செல்ல எந்த கடின உழைப்பும் தேவை இல்லை. அது காமத்தால் ஆனது, குரோதமே ஒருவனை காமத்தில் மூழ்க அடிக்கிறது. காமம் நிறையும்தோறும் குரோதம் இல்லாமல் ஆகிறது. ஆனால் அந்த உலகத்தில் உறவுகளால் சிக்கிக்கொள்ளும் கூட்டம் உள்ளது. உறவுகளால் சிக்கிக்கொள்ளாமல், உறவுகள் அனைத்தும் மாயை என்று உணர்ந்து பிறன் என்று எதுவும் அற்றவானாக முன்னேறுகின்றான் அர்ஜுனன்.அங்கு எல்லாம் அவனே. இது இரண்டாவது சக்கரமாகிய சுவாதிஸ்டானம். உறவு பந்தலை உருவாக்கும் உயிர்சக்தி துடிக்கும் இடம்.

ஐந்தாம் உலகமான காளகத்தில் அதிக உழைப்பை கொடுக்கின்றான். ஒருவனுக்குள் பெருகும் பேராசையால் ஆனது அந்த உலகம். பேராசை வளர்வதற்கு உழைப்பை வேண்டுகிறது. வெற்றித்தோல்வி இங்கு நிர்மாணிக்கப்படுகிறது. இங்கு அர்ஜுனன் பதினோறு தோல்விகளுக்கு பிறகு பன்னிரண்டாவது தாவலில் வெற்றிப்பெறுகின்றான்  .வெற்றித்தோல்வியால் இங்கு எதிரிகள் முளைக்கிறார்கள். தோற்பதற்கும் வெல்வதற்கும் எதிரியே காரணமாகின்றான் என்பதை அறிந்து அந்த உலகத்தை கடக்கிறான். எதிரியும் தானும் வேறு அல்ல தானே என்றும், தன்னின் சமபலம் என்றும் இந்த உலகத்தில் உணர்கின்றான் அர்ஜுன்ன். இது மூன்றாவது சக்கரமாகிய மணிபூரகம். மனம் இங்கு இயங்கும்போது செயல்வீரன் எழுகிறான்.

ஏழாம் உலகம், ஆறாம் உலகம், ஐந்தாம் உலகம் என்று செல்லும் மனம் நான்காம் உலகம் செல்லமுடியாமல் கணத்தில் சோர்வுற்றுவிழுந்துவிடும். நான்காம் உலகம் ஒரு மையம். நான்காம் உலகத்திற்கு கீழே மூன்று உலகம் உள்ளது. நான்காம் உலகத்திற்குமேலே நான்கு உலகம் உள்ளது. மையத்தை அடைவது என்பது வெற்றியின் முதல்படி. இருநிலைகளை சமத்தில் உணரும் தருணம். அதை வாயில் படி என்றும் சொல்லலாம், அதற்கு அப்பால் அகம் உள்ளது, அதற்கு இப்பால் புறம். அங்கு நின்று அகத்தையும் புறத்தையும் அறியமுடியும். கீழ் உலக நிலையும், மேல் உலக நிலையும் அங்கு நிலவும். குளிச்சியும் வெப்பமும் அங்கு இருக்கும், இருளும் ஒளியும் அங்கு இருக்கும். எனவே இருமையின் பிளவை அங்கு மனம் உணர்ந்து சோர்வு கொள்கிறது. இந்த உலகம் தமசத்தால் ஆனது. தாமசத்தை வெல்பவன் அங்கு வெல்கிறான். அங்கு செல்ல ஜலஜன் சோர்வுரும் கணம்தான் அங்கு செல்ல அர்ஜுனன் ஊக்கம் கொள்ளும் கணமும். அங்கு உள்ள அனைவரும் தங்களை உடலென்று என்று எண்ணி உடலாகி உறைய, அவர்களின் விழியின் விளக்கால் ஒளிப்பெற்று அர்ஜுனன் வெல்கிறான். உடல் நினைவினை மறக்கிறான். நான்காவது ஆதாரம் அனாகதம். உடலும் உள்ளமும் சம எடை கொண்டு கனக்கிறது. உடல் உணர்வை இழப்பவருக்கு உள்ளுணர்வு ஒளியும்ஒலியும் காட்டி உயர்த்துகிறது.

மூன்றாவது உலகம் பொன்னுலகம் இங்கு செல்பவர்கள் உடல் பொன்னென்று ஆகின்றது. கீழ் உள்ள மூன்று உலகமும் உடம்பைப்பற்றி பெரிதாக பேசவில்லை ஆனால் மேல் உள்ள மூன்று உலகத்தில் தொடக்கஉலகமே உடம்பைப்பற்றித்தான் பேசுகிறது. உடம்பின் மாற்றத்தைப்பற்றிப்பேசுகிறது. இதுவரை இருந்த உடலை புத்துடல் ஆக்கச்சொல்கிறது. அங்கு பொன் உடல் பெறாதவன் வாழமுடியாது. அது சித்தர்கள் உலகம், இந்த உலகத்தில் சித்தர்கள் சித்துக்கல்செய்து உடலை பொன்னாக்கி நிலைநிற்கின்றார்கள். சித்துக்களில் மாட்டிக்கொண்டவர்கள் அந்த உலகத்தை தாண்டமுடியாமல்போகலாம். அர்ஜுனன் அந்த உலகத்தின் சித்துக்களில் மாட்டாமல், பார்வையாளனாக இருப்பதாலேயே அந்த உலகத்தையும் தாண்டுகின்றான். அந்த உலகத்தை தாண்டுவதாலேயே அவனுக்கு நந்தியின் தரிசனம் கிடைக்கிறது. கால்(காற்று) நடையாகிய நந்தி அவனை மேல் ஏற்றுகிறது. குருவாகி வழிகாட்டுகிறது. சித்தால் பெறும் பொன்னுடலை எண்ணத்தால் பெற்றுக்கொள்ள சொல்கிறது. காதலாகிய அன்பு என்னும் எண்ணத்தால் அர்ஜுனன் பொன்னாகின்றான். அன்பு என்னும் எண்ணம் ஆணவமாகிய ஆலகாலத்தை பிரித்து எடுத்துவிடுகிறது. ஆலகாலமாகிய களிம்பு பிரிந்தபின்பு தாம்ரம் தங்கமாகிவிடுகிறது. இந்த உடலுக்கு ஆணவம் களிம்பு, அதை பிரித்தால் உடம்பு அன்பென்னும் தங்கமாகின்றது. அந்த தங்கத்தை அறிதல் அறிதல் என்ற விழைவின் ஒளிக்கொண்டு சுடர்மின்ன வைக்கின்றான்.

 மூன்றாம் உலகமாகிய விசுத்தி சக்கரத்தில் மனிதன் தனது களிம்புகள் முழுவதும் பிரிக்கப்பட்டு, அல்லது கண்டத்தில் அடக்கப்பட்டு சுத்திக்கறிக்கப்படுகிறான். இது விசுத்தி சக்கரம். விசுத்தி என்பது சுத்தத்தின் சுத்தம்.  

இராண்டாம் உலகமாகிய ஆக்ஞா சக்கரத்தில் அர்ஜுனன் வந்து சேரும்போதுதான் தன்னை அணுவென்று உணர்கின்றான். ஒரு பொன்கொன்றைப்பூ எனறு அவன் அவனை உணர்வது அழகு. அங்கு எழுப்பப்படும் ஒவ்வொரு சொல்லும் இடி என்று ஒலிக்கிறது அவனுக்கு, நாகங்களின் எளிய மூச்சுக்காற்றுகூட பெரும் புயல்என அவனை பறக்க வைக்கிறது. இதுவரை சொல்புத்தி வேலை செய்கிறது. இனி சுயபுத்தி அன்றி வேலைக்கு ஆகாது. தன்னைத் தான் அறிந்து தன்னில் மூழ்குபவன் உலகம் அது. இதுவரை நான் வெல்வேன், வென்றேன், நான் எதிலும் முதல்வன் என்று நினைத்த அர்ஜுனன் இங்கு மெய்மையை அறிகிறான். வெற்றி என ஒன்றில்லை எங்கும் என்றான்.  மெய்மையை அறியும் தருணம், மெய்யுடல் பெற்று மால்யவானுக்கு நிகரான உடல்கொண்டு நிற்கிறான்.  ஆக்ஞா சக்கரத்தில் புருஷோத்தமன் நாகக்குடையென ஆகின்றான். இறைதரிசனமும் பெருகின்றான் இங்கு.


இரண்டாம் உலகம் தாண்டி முதல் உலகத்தில் செல்லும்போது பொன்னுடலும் பயன்படாது, ஒளியுடல் வேண்டும், மெய்ஞானமும் பயன்படாது அனுபவஞானம் கனியவேண்டும். எத்தனை எத்தனைப்பாடுகள் பட்டு தொட்ட முதல் உலகத்தில் ஆயிரம் இதழ்தாமரை உலகமாகிய துரியத்தில் அனுவம் வாய்க்கிறது. ”ஆவது என்றுஒன்றில்லை” என்ற அனுபவஞானம். இதற்காகவா இத்தனைப்பாடு. சும்மாவே இருந்திருக்கலாமே என்றுதான் தோன்றுகின்றது.


இப்படி சும்மாவே இருந்து இறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சுவாமி விவேகானந்தர்   “துறுபிடித்து அழிந்துப்போவதைவிட தேய்ந்து அழிந்துப்போ” என்றுசொல்கிறார்.இதைத்தான் பகவான் கண்ணனும் “கடமையை செய் பலனை எதிர்ப்பார்க்காதே” என்றும் சொல்கின்றான்.

மெய்மை ஞானம் என்றும் ஞானம் உணர்வு என்றும் உணர்வு விழைவு என்றும் விழைவு செயல் என்றும் செயல் ஆணவம் என்றும் ஆகி உதிர்ந்து கொண்டிருப்பதை கண்டான்-காண்டீபம்-12 என்பதை வெறும் சொற்களாக வைத்துக்கொள்ளமுடியாது, வெறும் சொற்களாக வைத்துக்கொண்டால் என்ன பயன்? சொற்களின் பயனை அனுபவமாக உணர்வதற்காகத்தான் அர்ஜுனன் இத்தனைபை்பாடு படுகின்றான், இந்தப்பாடுபடுகின்றான். மானிடவாழ்க்கை எண்ணங்களால் ஆனது. ஒவ்வொரு உலகமும் ஒவ்வொரு எண்ணங்களில் கட்டமைப்பு. அந்த எண்ணங்கள் அந்த உலகத்தைத்தான் நமக்கு கொடுக்கும். அந்த எண்ணங்களை தாண்டுவதன் மூலம்தான் அந்த உலகத்தையும் தாண்டமுடியும். அனுபவம்தான் வாழ்க்கை.

இவ்வேழு உலகங்களும் எண்ணங்களால் ஆனவை என்றுணர்க! ஏழாம் உலகம் குரோதத்தால் ஆனது. காமத்தாலானது ஆறாம் உலகம். பேராசையால் ஆனது ஐந்தாம் உலகம். நான்காவது உலகம் தமோகுணத்தால் ஆனது. அன்பெனும் பொன்னொளி கொண்டது மூன்றாம் லகம். ஞானம் கனிந்த எண்ணங்களால் ஆனது இவ்வுலகம்.”-காண்டீாம்-12. அர்ஜுனன் ஏழுலோகத்திலும் பயணித்து கடைசியில் அறியும் ஆவதென்று ஒன்றில்லை என்பதை அதன் வண்ணங்களால், சுவையால் அறிந்தபின்பே அனுபவமாக்கமுடியும் இல்லை என்றால் அவைகள் வெறும் சொற்கள். சொற்கள் அனுபவத்தின் தேர். தெய்வம் இல்லாத தேர் வெறும் அலங்காரம் மட்டும்தான். அலங்காரத்திற்குள் உள்ள தெய்வத்தை அறியவே இந்த ஏழு உலகங்களையும் அறிகின்றான் அர்ஜுனன். அறிந்த பின்பு அந்த தேரையும், தெய்வத்தையும் அங்காங்கே விட்டு பயணிக்கின்றான் அர்ஜுனன். அவன் ஒரு பயணிமட்டும்.  


ஓளியுலகத்தில் சென்று மீண்டும் இருள் உலகத்தில் பாய்ந்தான் அர்ஜுனன் என்பதை அறியும்போதுதான் மனதை என்னமோ செய்கிறது. . மாயை எத்தனை வலிமையானது. இறைவன் தனக்கு நிகராக தனது மாயையை வகுத்து வைத்து உள்ளான். தனது ஒளிக்கு நிகரென இருட்டை தனது அருகிலேயே வைத்து உள்ளான்.   அதை வெளியேறும் வழி என்று அர்ஜுனனே மயங்கும்போது மற்றோர் எம்மாத்திரம். எதற்கும் அம்புவிடும் அர்ஜுனன் அதற்கு தன்னையே அம்பாக்கிக்கொள்கிறான் என்றால் அதன் சக்திதான் என்னே?  அது வெல்லமுடியாத உலகம். ஏழுலகம் வென்றவனும் வெல்லமுடியாத உலகம்.


ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம்முன் செய்த பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும்முந் நான்கு இருமூன்று எனத்தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ வல்லி நீசெய்த வல்லபமே! –அபிராமி அந்தாதி
 
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல். 



--