Wednesday, September 16, 2015

யோகி


இனிய ஜெயம்,

மிக எளிமை கொண்ட குழந்தையின் உலகாக துவங்கிய முதல் அத்யாயம், இரண்டாம் அத்யாத்தில் ரஜோ குணத்தில் மையம் கொள்ளும் தீவிரத்தின் தருணம் ஒன்றினை மையம் கொள்கிறது.

இந்த ''நான்'' எனும் விதை மனித ஆத்மாவுக்குள் எப்போது விழுகிறது?  உயிர் அணுவாக மாறி வால் துடிக்க நீந்தும் போதா?

காமம். ஈடுபடும் செயல் எதுவும் காமமே.  உயிரணு அண்டம் நோக்கி நீந்தும் செயலில் எழுதப்பட்டது இந்த காமம் எனும் செயல்திட்டம், குரோதம் . வெல்லும்,அழிக்கும் எதுவும் குரோதமே. உயிரணு அண்டம் துளைக்கும் செயலில் எழுதப்பட்டது இந்த குரோதம் எனும் செயல் திட்டம். மோகம். தங்கி வாழும் இச்சை எதுவும் மோகமே, அதுவே உயிர் அணுவை அண்டத்தில் கலக்கவைக்கும் செயல் திட்டம்.  ஒரு லட்சம் விந்தணுக்களை முறியடித்து  ஒரே ஒரு உயிரணு அண்டம் துளைக்கிறதே அங்கு உறைகிறது 'நான்''.

பரசுராமன் கர்ணன் வசம் சொல்கிறார். சத்ரியன் குருதியால் தீர்மானிக்கப் படுகிறான். அந்த சொல்லின் பால்ய வடிவம் சுஜயன்.  சுபகை அர்ஜுனரை குறித்து சொல்லும் வரை சுஜயனுக்கு எதிரிகள் இல்லை.[அல்லது பறக்கும் குதிரை, கழுகு,யானை போல எளிய எதிரிகள் கொண்டவன்].. சுபகையை அர்ஜுனன் ஆண்டுவிட்டான்  என்றபிறகு  சுஜயனுக்கு வரும் கோபம் அவனுக்கான இலக்கை எதிரியை சுட்டுகிறது. இனி அவன் கனவில் அர்ஜுனன் மட்டுமே வருவான், சுஜயன் கையால் வித விதமாக கொல்லப்படுவான்.

நேற்று ஒரு சினிமா போஸ்டரில் விளம்பர வாசகம் ஒன்று கண்டேன்.  உன் எதிரி யார் என்று சொல். உன்னை பற்றி சொல்கிறேன்.  நல்ல வாசகம்.  வல்லமை கொண்ட எதிரிதான் நமது தகுதியை தீர்மானிக்க இயலும் இல்லையா?  வென்றாலும் தோற்றாலும் அர்ஜுனரை எதிரியாகக் கொண்டவன் அதன் பொருட்டு மட்டுமே சிறந்தவன் அல்லவா?

கூர்மையான அத்யாயம்.

இங்கே சம்பந்தமே இன்றி நீலனின் நினைவு எழுகிறது. அணுவில் எழுதப்பட்ட இந்த காம குரோத மோகம் அவனுக்கு , அவன் வைத்து ஆடும் களிப்பாவைகள் பட்டுமே. இவற்றின் சாரம் அறிந்த யோகி அவன்.ஆம் அவன் களியோகி.  

கடலூர் சீனு