கண்ணன் குழலோசையின் இனிமையை பலரும் அனுபவிப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இது என்ன மாயம்? அவன் குழலோசையை யார் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள்? யார் அதைக்கேட்டார்கள்? இதை சிந்திக்கையில் என் காதிலும் அவன் கீதம் ஒலிக்கிறது. காற்றினிலே அவன் கீதம் மிதந்து வருகிறது.
அப்புறம்தான் அறிந்தேன், அந்தக் கள்வன் தன் குழலோசையை குயிலின் கூவலாக, கிணு கிணுத்து ஓடும் வனஓடையின் சத்தமாக, குதித்து விளையாடும் குழந்தையின் மழலையாக, உடன் மகிழ்ந்து களிக்கும் காதலியின் கொஞ்சலாக, நோய் போன்ற துன்பத்தில் வாடிபடுத்திருக்கையில் நெற்றியை வருடி சொல்லும் தாயின் பேச்சாக, இடுக்கண்ணில் நண்பன் சொல்லும் ஆதரவுக் குரலாக என பலப்பல வகையில் பதிந்து வைத்திருக்கிறான்.
மேலும் அவன் தன் குழலோசையை அந்தி வானில், மலர்களில், பறவையின் இறகுகளில், கனிகளில், என வண்ணக்கோவைகளாக தீட்டி வைத்திருக்கிறான்.
கனிந்த பழங்களில், பூக்களில், உருகிய நெய்யில், இழைத்த சந்தனத்தில் அவன் தன் குழலோசையை, வாசமாய் எழ வைத்திருக்கிறான்.
குளிர் சுனை நீரின், கானகத் தேனின், பசி நேர உணவின் சுவையாக அவன் குழலோசையை ருசிக்கும்படி வைத்திருக்கிறான்.
மெல்லிய மலரிதழ்களை, வழவழப்பான பளிங்குபரப்பினை, மலர் பொய்கை நீரை, குழந்தையின் தளிர் உடலை தொடும்போது அவன் குழலோசை எழும்ப வைத்திருக்கிறான்.
இத்தனைக்குப் பிறகும் அந்த மாயன் தன் குழலோசையை கீதை என்ற புத்தகமாய் எழுதிவைத்திருக்கிறான்.
அந்த கீதம் வெண்முரசின் ஒவ்வொரு வாக்கியத்திலும் ஒலிக்கிறது. ஒருவேளை அந்த மாயக் கண்ணனின் குழல்தான் இன்று ஜெயமோகனின் எழுதுகோலாக உருவெடுத்திருக்கிறதோ? இந்த இயந்திர உலகில் இறுகிய எம்மை மென்மைப்படுத்தி, வறண்ட எம் மனதினில் இனிமையை சேர்த்து, குழம்பிய சிந்தையை தெளியவைத்து கீதம் இசைக்கிறது அந்த எழுதுகோல்.
தண்டபாணி துரைவேல்