இருமுகம்
அசாதாரண மனிதர்கள்
ஆக ஆசைப்படுகிறோம், அசாதாரணமனிதர்களே அற்புதமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்ற நினைப்பு
மனதில் எழுவதால் அசாதாரண மனிதர்களாக வாழ ஆசைப்படுகிறோம்.
அசாதாரணம் ஒரு
எழுச்சியை, கிளுகிளுப்பை, போதையை, உளமயக்கத்தை ஏற்படுத்தி ஒட்டுமொத்த மானிட கூட்டத்தையும்
ஒரு உணர்வு வலையத்திற்குள் தள்ளிவிடுகிறது. அது சுகமாக இருக்கிறது. வாழ்ந்ததாக இருக்கிறதா?
முக்குணங்களில் எதாவது ஒரு குணம் உச்சம் அடையும்போது ஒரு அசாதராணம் நிகழ்கிறது. ஒரு
அசாதராணம் நிகழும் இடத்தில் எல்லாம் முக்குணத்தில் ஒரு குணம் உச்சம் அடைகிறது. ஒரு
வர்ணஜாலம் நிகழ்கிறது. அந்த வர்ணஜாலபோதைக்கு மானிடக்கூட்டம் அடிமை.
முக்குணத்தில்
ஆடலையும் அதனால் தோன்றும் அசாதாரணத்தையும் சாதாரணமாக ஞானிகள் கடக்கிறார்கள். சாதாரண வாழ்க்கையில் முக்குணங்களின் எழுச்சி இல்லை,
வர்ணஜாலம் இல்லை. அதனால் சுவை இல்லை. இதனால்தான எளிய மானிடக்கூட்டம் சாதாரணவாழ்க்கையில் உப்பு சப்பில்லை என்று சலித்துக்கொள்கிறது.
இந்த சலிப்பை கடந்துப்போகத்தான் அது எத்தனை எத்தனை கனவுகள் காண்கிறது. கண்டு கேட்டு
உண்டு முகர்ந்து ஸ்பரிசித்து என்று ஐம்புலன்களாலும் கனவுகாண்கிறது.
இப்படி அசாதாரண
வாழ்க்கைக்காக கனவில் விழும் மானிடர்கள் எத்தனை எத்தனை குழந்தைகளை கடந்து சென்று இருக்கிறோம்.
குழந்தைகள் என்றால் குழந்தைகள். அதற்குமேல் அவர்களைப்பற்றி என்னத்தெரியும்? குழந்தைகள்
முக்குணங்களில் எந்த குணத்தின் பிடியிலும் இல்லை அதனால் அவர்கள் அசாதாரணமானவர்கள் இல்லை.
ஞானிப்போல சாதாரணமானவர்கள். சாதாரணமானவர்கள் என்பதாலேயே அவர்கள் வாழ்க்கையை ஒரு இருப்பாக
என்றுமே கண்டது இல்லை. அவர்கள் இருப்பை கைகொள்ள தெரியவில்லை என்பதுதான் இங்கு சரியாக
இருக்கும். அந்த சாதாரணமானவர்களின் சாதாரணமான வாழ்க்கையில் உள்ள உச்சத்தை வாழ்க்கையின்
அர்த்தத்ததை விளக்கத்தான் வெண்முரசும், ஜெயமோகனும் வேண்டி உள்ளது.
சுஜயன் காணும்
மிகைக்கனவுகள் வழியாக, அவனுக்குள் பொங்கும் ரஜோகுணத்தின் வர்ணஜாலத்தின் வழியாக சுஜயன்
என்னும் எளிய மானிடகுழந்தை திரளை காணவைக்கிறார் ஜெ.
ஒரு கனிமரத்தை
காண்பவனுக்கு அதன் வேர்கள் எப்படி இருக்கும் என்பதை காணமுடியாது. சுபகையின் கனவு பெண்
என்னும் கனிமரத்தின் வேர்களையும் காணும்படி செய்துபோகின்றது. சுஜயனின் கனவோ ஒரு விதைக்குள்
உள்ள கனிமரத்தையே கண்முன் கொண்டு வந்து காட்டிச்செல்கிறது. சுபகையின் கனவுகளை வாசிக்கும்போது
தெரிந்த வனத்தில் பயணிக்கும் ஒரு தெம்மாங்கு தனம் வருகிறது ஆனால் சுஜயனின் கனவை வாசிக்கும்போது
அச்சமும், ஆச்சர்யமும் அலையென எழுந்து மூழ்கடிக்கிறது. மிகை கற்பனை கனவுபோல் வெளிக்கு
தெரிந்தாலும் ஜாக்ரத், ஷொப்ணம், சுசுப்தி, துரியம் என்று மனம் இயங்கும் நான்கு தளங்களில் முதல் மூன்று
தளங்களில் மனம் இயங்குவதை அழகாக காட்டிச்செல்கின்றார் ஜெ.
இந்த அசாதாரணகுழந்தையின்
அசாதாரண கனவுகள் வழியாக ஜெ படைக்கும் சாதாரண குழந்தையின் சாதாரண எளிய வாழ்க்கைதான்
பாடமாக வந்து கண்முன் நின்று நிறைகிறது. இந்த அத்தியாயத்தில் நாவலின் நோக்கம்கூட அதுதான்
என்று நினைக்கிறேன். ஒவ்வொரு கனத்திலும் குழந்தை குழந்தையாகவே இருக்கிறது என்பதை காட்டும்
இடத்தில் ஜெ ஜொளிக்கிறார். மீண்டும் ஒவ்வொரு குழந்தையையும் குழந்தையாகவே பார்க்கவேண்டும்
என்று தோன்றுகிறது. அதுதான் எத்தனை கடினமான காரியம். சுஜயன் குழந்தை குழந்தையாகவே இருக்கும்படி
படைக்கப்படுவதாலேயே அதன் உகலம் முழுமையாக நேர்த்தியாக
இருப்பது பொறாமைப்பட வைக்கிறது.
குழந்தைகள் தனித்து
இருப்பதுபோலும், மானிடக்கூட்டம் திரளாக இருப்பதுபோலும் வரும் காட்சி சுட்டும் உண்மை குழந்தைகளின் தனிமையை நினைத்து ஏங்காவைக்கிறது.
ஆனால் கூட்டமாக உள்ள சிறைக்கும், ஏகாந்தமாக இருக்கும் கூட்டுக்கும்தான் எத்தனை தொலைவு.
கனவு, நினைவு என்று
பயணிக்கும் இந்த அத்தியாய வாழ்க்கையில் ஒரு பொம்மையின் இருமுகங்களாக முளைத்த சாதாரணம்,
அசாதாரணம் புன்னகை செய்து கவர்கிறது. அசாதாரணம் நம் கண்களுக்கு வெகுதொலைவில் உள்ளதை
அருகெடுத்துவந்து ஆச்சர்யப்படச்செய்கிறது என்றால். சாதாரணம் நம் இதயத்தில் உணர்வுபோல
இருந்ததை பூப்போல மலர வைக்கிறது.
சுஜயன் அவள் தொடையை இறுகப்பற்றியபடி பொருள் விளங்காது எதோ முனகினான். பின்பு “அம்மா” என்றான். சுபகை “அனைத்தையும் அடையும் இளவரசர்கள் இழப்பது” என்றாள்-காண்டீபம்3.
கனவுக்கும் நினைவுக்கும் இடையில் சுழன்றுக்கொண்டு இருந்த நான். இந்த
இடத்தில் வெற்றிடத்தில் விழுந்தேன். உண்மை என்பது வெற்றிடமா?
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்