Wednesday, September 2, 2015

இயற்கையின் ஆராதனை



திருவண்ணாமலைமேல் இருந்த ரமணரைப்பார்க்க சென்றவரிடம் ஒரு பெரியவர் ”எங்கே போகிறாய்?” என்றுக்கேட்க “ரமணரைப்பார்க்க” என்று வந்தவர் பதில் சொல்கின்றார். அதைக்கேட்டதும் அந்த பெரியவர் ”ஐயோ! அவனையாப்பார்க்கப்போகிறாய், அவன் கொலைகாரனாச்சே!” என்றாராம்.

மண்ணில் மனிதர்கள் எல்லாம் நான் என்னும் பளுவின் கீழ் இருக்கும் இலைசருகுகள்தான். அந்த நான் பளுவை மகான்கள் அகற்றிவிடுகிறார்கள் அல்லது கொன்றுவிடுகின்றார்கள். நான் போனபின்பு மனிதன் பாரம் அகற்றப்பட்ட சருகு பறப்பதுபோல் காற்றில் பறக்கத் தொடங்கிவிடுகின்றான்.  பகவான் ரமணரைப்பார்த்தப்பின்பு எவரும் நானோடு இருக்கமுடியாது அதனால் ரமணரை கொலைகாரர் என்றார் அந்த பெரியவர்.

நீலனைக்காணச்செல்லும் சாத்யகி நானை இழக்கப்போகின்றான் அல்லது இழந்துக்கொண்டே போகிறான், அது அவன் கழுவில் ஏறப்போவதுப்போன்றதுதான். நான் என்னும் கல் ஏறி அமர்ந்து இருக்கும் சருகுஇலை அவன், அந்த பளு அதிகமாக இருந்தபோது அவனால் அசையமுடியவில்லை, அதை கறைக்க திருஷ்டத்யுமனன், கொஞ்சம் கள்ளுற்றி கரைத்தான்.  அந்த கல் அகன்றுவிட்டால் அவன் பறந்துவிடுவான். அப்படிப்பறந்து எதவாது ஒரு முள்கழுவில் மாட்டி துடிப்பான். பார்ப்பவதற்குதான் அது கழுவில் அமர்ந்து துடிப்பதுபோல் இருக்கும். அந்த சருகுக்கு அது ஒரு பீடம்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்வர் ”அருள்காற்று எங்கும் வீசிக்கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் சருகுபோல் இருப்பதுதான்” என்பார்.

சருகுபோல் ஆகுவது என்பது எளிதான செயலா? கடமை, கட்டுபாடு, காவல், நகரம், கடல் என்று எத்தனை எத்தனை சுமைகளைத் தாண்டி செல்ல வேண்டி இருக்கிறது. இதை எல்லாம் தாண்டி சென்றபின்பும், சடங்குகள், சம்பிரதாயங்கள், சொற்கள் என ஏதே ஒரு பளு நம்மை அழித்திக்கொண்டு இருக்கிறது.

ஆன்மிக உலகிற்குள் நுழைபவருக்கும், உலோகாயத வாழ்வில் நுழைபவருக்கும்  ஒரேவகையான பளுதான் உள்ளது. ஆனால் அந்த பளு அவர்கள் எண்ணும் எண்ணங்களின் வழியாக உயரத்திற்கோ, பாதளத்திற்கு கொண்டு செல்கிறது.

சாத்யகி போதை ஏறியபோது பளுகுறைந்தவன் ஆகின்றான், அவனை அழுத்திக்கொண்டு இருந்த நான் அந்த போதையில் செயற்கையாக கரைகின்றது. நட்பென்னும் சகமார்க்கத்தில் அவன் நீலனை நெருங்க நெருங்க அந்த பளுவை இயற்கை குறைத்துக்கொண்டே செல்கிறது.
கிருஷ்ணகிரியில் வந்துமோதும் அலைகள், பால் அபிஷேகம் செய்வதுபோல் உள்ளது, முல்லை மலர்களை தூவி புஷ்பாபிஷேகம் உள்ளது. ஒரு கட்டத்தில் நாககுடையென உள்ளது. இது இயற்கை தன்னை இறைவனாக ஆக்கி தன்னையே ஆராதிப்பதுபோன்றது.  இயற்கை நடத்தும் ஒரு அபிஷேக வழிபாடு. பாலாகவும், மலராகவும், நாகக்குடையாகவும் இருக்கும் கடல், தனது ஒசையில் வேதமாக சொல்லாகவும் ஒலிக்கிறது. அந்த சொற்களின் முன்பு சாத்யகி, திருஷ்டாத்யுமனனும் சொல் இழந்து மௌனத்தில் விழுகின்றார்கள். இது எல்லாம் இயற்கையே செய்துக்கொண்டு செல்கிறது. இயற்கை தன்னை இறைவனாக ஆக்கிக்கொள்கிறது, இயற்கையே தன்னை வழிபடவும் செய்கிறது. இயற்கையே ஒலிக்கிறது, இயற்கை மௌனத்தை’யும் உண்டாக்கிறது. இயற்கையே எங்கும் கடவுள் என்று நிற்கிறது.  .

”நீலமென்பது ஆழம் தன்னை தன் ஒளியாலே மறைத்துக் கொள்ளும் நீரின் மாயம்”-இந்திரநீலம்-89 என்ற இடத்தில் வந்துநிற்கும்போது,  கண்ணன் தன் பெயரால் தன் ஆழத்தை மறைத்துக்கொண்டு மனிதன் என்று நின்றான். சிலருக்கு மகன், சிலக்கு கணவன், சிலருக்கு நண்பன், சிலருக்கு ஆண்டான், அவனும் கடலும் வேறு அல்ல, அவனை யாரும் ஆராதிக்கவேண்டாம், அவனே அவனை ஆராதிக்கின்றான். அவனை காணச்செல்பவர்கள் தங்கள் பளுவை இழந்து சருகென ஆகின்றார்கள் அவ்வளவுதான். அவர்கள் பறந்து எங்கும் செல்லலாம், ஏன் ஒரு முள்ளில் மாட்டி கழுவேறித் துடிக்கலாம். பார்ப்வர் கண்களுக்குதான் அது துன்பம். அந்த சருகும் அந்த முள்ளும் இயற்கையில் இயற்கையாய் இருக்கிறது.

களியோகி என்னும் சொல்லெடுத்து அதை இயற்கையில் வைக்கும்போது இயற்கையின் கடவுள் தரிசனம் கண்களில் நிறைகிறது. இயற்கையைவிட பெரிய களியோகி யார்? 

எங்குமே இருப்பவன் ஆகி
யாவற்றிலும் நிலைத்தவன் ஆகி
மகேஸ்வரனாகி  பலஉருவம் கொண்டுமே
அசுரர்களை அழித்த புருஷோத்தமனான 
ஸ்ரீவிஷ்ணுவை வணங்குகின்றேன். -ஸ்ரீவிஷ்ணுசகஸ்ரநாமம். 
  
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.