வைரம் போன்ற அருமணிகள் மண்ணின் ஆழத்தில் இருந்து அதி அழுத்தத்தால் உருவாகி, அம்மண் பிளந்து வெளிவருபவை. ஒரு வகையில் அவையும் வெறும் கற்களே. அப்படியென்றால் அக்கற்களை அருமணிகளாக்குவது எது? அதைக் கொள்பவரின் விழைவே என்று சொல்கிறது இந்திரநீலம். மானுடரின் விழைவுகள் அக ஆழத்தில் அழுந்தி, இறுகி வைரமென்றாகிறது. என்றோ முன்னுணரா திருக்கணத்தில் அது வெளிப்படுகின்றது. இந்திரநீலம் முழுவதிலும் மானுட அக இருளின் வெளிப்பாடாகவே சியமந்தகம் வழங்கப்பட்டுள்ளது.
காம, குரோத, மோகங்களின் இருளையும் தாண்டிய இருளில் இருந்து, இருளே ஒரு துளியாக வந்தது தான் சியமந்தகம். ஒருவகையில் முக்குணங்களினால் விளையும் விழியின்மையைத் தாண்டிய தூய இருளால் விளையும் விழியின்மை. விழியின்மை என்பது நம் அறிதலைக் கட்டுப்படுத்தும், நம் எல்லையைக் கட்டுப்படுத்தும், விழியின்மை தனக்கோர் வழி தேர்ந்து அவ்வழியன்றி பிறவற்றை எளிதில் விலக்கும். பிற வழிகளை மறுப்பதாலேயே எப்போதும் விழித்திருப்பதாக உளமயக்களிக்கும். எப்போதும் விழித்திருக்கும் ஒருவர் அடையும் சோர்வும், அதனால் விளையும் பாதுக்காப்பின்மை உணர்வும் தாங்க இயலாதது.
சியமந்தகத்தைக் கொள்ள விரும்பிய அனைவருமே விழியற்றவர்கள் தாம். எனவே தான் அவர்களுக்குத் தெரிந்த வகைகளில், அவர்களின் விழைவுகளை அம்மணியில் ஏற்றி விட்டனர். பிரசேனருக்கு அது அதிகார விழைவு. பாமாவுக்கு அடையாள விழைவு. ருக்மணிக்கு அவள் இச்சையின் விழைவு. ஜாம்பவதிக்கு அவள் பெருமிதத்தின் விழைவு. பத்ரைக்கு அவள் அகங்காரத்தின் விழைவு. அக்ரூரருக்கு அது கிருஷ்ணனின் மீதான அவரின் மட்டுறுத்தலின் விழைவு. கிருதவர்மனுக்கு அவன் காமத்தின் விழைவு. சாத்யகிக்கு அவன் அர்ப்பணிப்பின் விழைவு. ஒவ்வொருவரும் அவரவர் விழைவிற்கு உகந்த வழியில் அதைக் கொள்ள விழைகிறார்கள். ஒருவகையில் இவர்கள் அனைவருமே சியமந்தகத்தைக் கிருஷ்ணனுடன் தொடர்பு படுத்தி அதைக் கொள்வதன் மூலம் கிருஷ்ணனையே கொள்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். மீண்டும் மீண்டும் கிருஷ்ணனை வியந்து, அவனைப் பணிந்து, அவனை நினைந்து அவனை முழு உரிமை கொள்வதற்காக பிரயத்தனப்படுகிறார்கள். அவனோ கில்லாடித்தனமாக அவர்களின் இந்த விழைவுகளையே அவர்களைச் சமாளிக்கும் ஆயுதமாகப் பயன்படுத்துகிறான். ஒருவர் கையிலும் சிக்கவும் மாட்டேன் என்கிறான். சியமந்தகமும் அதையேத்தான் செய்கிறது. கிருஷ்ணன் ஒளி என்றால் சியமந்தகம் இருள். இவர்களுக்கு இருளும் சிக்கவில்லை, ஒளியும் சிக்கவில்லை. அவரவர் விழியின்மையால் விளைந்த இருளைப் போக்க, அவரவரின் கைவிளக்கு நறுக்கித் தந்த கிருஷ்ணனையே அவர்களால் அடைய இயல்கிறது. அடைந்த அவனை எப்போதுமே தனக்காக மட்டுமே வைத்துக் கொள்ள முயன்று பரிதாபமாகத் தோற்கவும் நேர்கிறது.
இங்கே தான் காளிந்தி பேருருவம் கொள்கிறாள். அவளைப் பற்றி எங்குமே, யாருக்குமே தெரிவதில்லை. சாத்யகி முதல் அக்ரூரர் வரை அவள் யாருக்குமே ஒரு பொருட்டாக இல்லை. ஏனென்றால் இவர்கள் ஆடும் ஆடலில் அவள் இல்லை. இவர்களுடன் அவள் எங்குமே போட்டியிடவில்லை. இவர்கள் தேடும் கிருஷ்ணனையோ, அவனுருவாக வேறு எதையோ அவள் தேடுவதே இல்லை. அவளளவில் அனைத்துமே கிருஷ்ணன் தான். அவளும் கிருஷ்ணன் தான். அவளளவில் ஒரு கூழாங்கல்லுக்கும் அருமணிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஏனென்றால் வித்தியாசப்படுத்த வேண்டிய எந்த விழைவும் அவளிடம் இல்லை. அவளுக்கு இருளும் இல்லை, ஒளியும் இல்லை. எனவே தான் பிறரின் விழைவின் நிறம் கொண்ட சியமந்தகம் கொஞ்சம் கொஞ்சமாக தான் கொண்ட அனைத்து நிறங்களையும் இழக்கின்றது.
இறுதியாக தன் நிறமான நீலத்தையும் இழக்கிறது என்பது மிக நுட்பமான இடம். நீலம் என்பது கிருஷ்ணன் தான் என்பது நாமனைவரும் அறிந்ததே. அந்த நீலமும் போகிறது என்பது கிருஷ்ணன் என்று ஆகி வந்த அனைத்து ஆளுமைகளும் ஒன்றுமில்லாமல் ஆகிறது என்பதே தான். துவாரகையில் கிருஷ்ணன் என்று ஆகி நடம்புரியும் களிமகன் மீது சுற்றி இருக்கும் அனைவரும் அவரவர் விழைவுகளை ஏற்றி அவரவர்க்கான கிருஷ்ணனைச் சமைத்து வைத்துள்ளனர். அப்படியிருக்க தன்னை ஒருவரும் அறியாமல் இருக்கும் அவனது தனிமை தான் எப்படிப் பட்டது? அத்தனிமையில் அவனால் யோகத்தில் அமர்வதன்றி வேறென்ன செய்ய இயலும். அப்படி ஒரு யோகியை முழுதறிய மற்றொரு யோகியன்றி யாரால் இயலும்? இருமையற்ற கிருஷ்ணன் என்னும் யோகியை அறிந்த யோகியாக அங்கே காளிந்தி மட்டுமே இருக்கிறாள். வைரம், கூழாங்கல், மதிப்பு, மதிப்பின்மை, அரசன், களிமகன் என எந்த இருமையும் இல்லாதவனாக அவனை அறிவது தான் கிருஷ்ணனை உண்மையாக அறிவது என்பதே சியமந்தகத்தின் நிறமிழப்பு அனைவருக்கும் உரைக்கும் உண்மை.
இவ்வுண்மையை இயல்பாகவே உணர்ந்த காளிந்தியின் கதையை கிருஷ்ணனே சொல்வது என்பது அவளின் ஆளுமைக்கும், அதன் வழியாக நமது பிரபஞ்ச தரிசனத்தைத் தந்த யோக மரபுக்கும் ஜெ செய்த மரியாதை. பிற அனைவரின் கதைகளை மானுடர் கூற, தெய்வமே யோகியின் கதையைக் கூறியது என்பது அபாரமான மன எழுச்சியைத் தந்த தருணம். அத்துடன் வெறும் மரவுரியுடன் நகர் நுழைந்தவள் என்றே நினைத்துக் கொண்டிருக்கும் அக்ரூரர் முதல் முதல் அரசி என்ற இடத்துக்கு போட்டியிடும் ஒவ்வொருவருக்கும் அவர் அளித்த பதிலாகவும் இதைக் கொள்ளலாம். இறுதியில் சுபத்திரை அவளிடம் அளிக்கப்பட சியமந்தகத்தை கடலில் தூக்கி எறிவது என்பது அனைத்தும் சென்று சேர்வது ஒரே இடத்தில் தான் என்பதைத் தான் காட்டுகிறது. சியமந்தகத்தையும் கூழங்கல்லாக உணர்கையில் தான் உண்மையத் தரிசிக்க இயலும். அட்டகாசமான முடிவு!!!!!!
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.