ஜெயமோகன் வெண்முரசில் மிகவும் அருமையாக கண்ணனை demystify செய்து வருகிறார். கண்ணனுக்கு மகாபாரதம் விதவிதமான மாயவேலைகளை அணிகலன்களாக பூட்டிவைத்திருக்கிறது. அதை அவிழ்த்து அவனை வெறும் மனிதனாக காட்டும் மிகக் கடினமான பணியை ஆசிரியர் திறம்பட செய்துவருகிறார். ஆனால் வாசகர்களில்என்னைப்போன்ற சிலர் அந்தக் கண்ணனை கடவுளாக்கி பஜனை செய்யும் அளவுக்கு போகிறோம். ஆமாம், ஜால்ரா, சப்லாக்கட்டை ஓசை அதிகமாக காதில் விழுகிறது.
ஏன் எங்களில் சிலருக்கு வெண்முரசின் கண்ணன் கடவுளாக தோன்றுகிறான். அதற்கு காரணமென்ன. எங்களுக்கு இருப்பது குறைபட்ட வாசிப்பா? இன்னும் நாங்கள் முழுமையாக வெண்முரசின் வாசகர்களாக மாறவில்லையா?
முதலில் கடவுள் என்றால் யார்? கடவுளை ஒரு முடிவிலி (infinity) என நான் கொள்கிறேன். கணிதத்தில் முடிவிலி என்பது எண்களின் உச்சம். எண்களில் மிகை எண்களின்(posiitive numbers) உச்சம் மிகை முடிவிலி( + infinity) குறை எண்களின் (negative numbers) உச்சம் குறை முடிவிலி (- infinity). இது மெய்யென்களில் (real numbers) நாம் அடைவது, அது ஒரு இருபுறம் முடிவற்ற சாலைபோன்றது(அல்லது நேர்க்கோடு) ஒரு பக்கம் சென்றால் மிகை முடிவிலியை நோக்கிபோவோம், அதன் எதிர்பக்கம் செல்வது குறை முடிவிலியை நோக்கிய பயணமாக இருக்கும். மேற்கத்திய மதங்களின் கடவுள் கொள்கையும் இதைப்போன்றதுதான். ஒன்றின் உச்சமாக கடவுளும் அதன் எதிர் திசையின் உச்சமாக சாத்தானும் இருக்கிறார்கள். அவ்வாறாக மனிதர்கள் அடையக்கூடியது சுவர்க்கம் அல்லது நரகமாக இருக்கிறது.
ஆனால் கணிதத்தில் சிக்கலெண்கள்(complex numbers) என ஒரு எண்ணமைப்பு உள்ளது. அதை நேர்க்கோட்டில் அமைக்க முடியாது. ஒரு முடிவற்ற இருபரிமாண ( two dimensional space ) பெரும் பரப்பில்தான் போட்டு பார்க்க முடியும். மெய்யெண்கள் சிக்கலெண்களின் ஒரு சிறு பகுதி மட்டுமே.. ஆனால் சிக்கலெண்களின் ஒரு சிறப்பு பண்பு அதில் நாம் அடையக்கூடியது ஒரே முடிவிலி மட்டுமே. அதில்மிகை முடிவிலி, குறை முடிவிலி என்பவை இல்லை. அந்த இருபரிமாண பரப்பில் எப்பக்கம் சென்றாலும் நாம் அடையப்போவது அந்த ஒரே முடிவிலியைத்தான்.
இதை நாம் நம் இந்திய மதங்களின் கடவுள் தத்துவத்தோடு ஒப்பிடலாம். இந்தத் தத்துவத்தின்படி கடவுள் அல்லது வீடுபேறு என்பது அந்த ஒரே முடிவிலி எனக் கொள்ளலாம். ஒவ்வொரு உச்சத்திலும் கடவுளைக் காணும் தன்மை நம் பண்பாட்டில் உள்ளது. அதனால் தான் புராணங்களில் அல்லது வரலாற்றில் யாரெல்லாம் உச்சத்தை தொட்டவர்களோ அவர்களில் நாம் கடவுளை காண்கிறோம். இது மனிதர்களில் என்றில்லை விலங்குகளில் ஏன் ஜடப் பொருள்களில்கூட நாம் உச்சத்தை காணும்போது கடவுளை காணத்தலைபடுகிறோம். எடுத்துக்காட்டிற்கு வீரத்தின் உச்சத்தை காட்டி உயிர் துறந்த ஊர்க்காவலர்கள் கிராமங்கள் தோறும் கடவுள்களாக வணங்கப்படுகிறார்கள். அவலத்தின் உச்சத்தை தொட்டு அகால மரணமடைந்த கன்னிபெண்கள் தெய்வமாக்கப்பட்டிருக்கிறார்கள்
இப்போது கண்னனை எடுத்துக்கொள்வோம். அவன் எந்த மாயைகளும் இல்லாமலேயே அனைத்திலும் உச்சத்தில் இருப்பவனாக வெண்முரசு காட்டுகிறது. அவன் சிறு குழவியாக இருக்கும்போது குழந்தைகளின் உச்சமாக இருக்கிறான். அப்படியே குறும்புச் சிறுவர்களின் உச்சமாக, கிராமத்து நலன் காக்கும் இளைஞர்களின் உச்சமாக இருக்கிறான், கன்னியர் மனங் கவரும் அழகன்களின் உச்சம், காதலியை நேசிப்பதில் காதலன்களின் உச்சம், குலத்தின் நலம் காப்பதில் குலத்தலைவர்களின் உச்சம், நகரை நிர்மாணிப்பதில் பொறியாளர்களின் உச்சம், புதிய ஆயுதங்களை உருவாக்கி திறனாக பயன்படுத்துவதில், குதிரை ஓட்டுவதில் போர் வியூகங்கள் அமைப்பதில், அரசியலில், மற்றவர் மனங்களை தெளிவாக புரிந்துகொள்ளும் உளவியல் நிபுணத்துவத்தில், நட்பில், பாசத்தில், வழிகாட்டலில், தண்டிப்பதில், மன்னிப்பதில், அறிவுரை கூறி தெளிவிக்கும் ஆசிரியத்துவத்தில், தத்துவத்தில் என எல்லாவற்றிலும் உச்சமானவனாக கண்ணன் இருக்கிறான். ஜெயமோகன் வெண்முரசில் தெய்வீக அதிமானுடனாக கண்ணனை காட்டவில்லை. அவை இல்லமலேயே அவன் அனைத்து திறனிலும் உச்சத்தில் இருக்கிறான். அதனால் அவனில் கடவுளை நான் காண்கிறேன். வெண்முரசு என்னை அவனுடன் சேர்ந்து வாழவைக்கிறது. மாயைகள் புரியும் புராணக் கண்ணனைவிட வெண்முரசின் கண்ணன் என்னுள் மேலும் பக்தியை நேசத்தை பெருக்குகிறான். இதை குறைபட்ட வாசிப்பு என்று கூறினால் கூட பரவாயில்லை. எதன்பொருட்டும் இந்த ஆனந்தத்தை நான் குறைத்துக் கொள்ளமாட்டேன்.
தண்டபாணி துரைவே;