அறம் என்றால் என்ன என்று அர்ஜுனன் சித்ரரதனுக்கு தெரிவித்துவிட்டான்.
”அறத்தின் பொருட்டு வில்லேந்துபவனுக்கு மட்டுமே கொல்லும் உரிமையுள்ளது. அறத்தின் பொருட்டன்றி சிந்தப்படும் ஒவ்வொரு துளிக் குருதியும் பழி சூழ்ந்ததே. அன்று நீர் சென்று கொண்டிருந்தது உமது உவகைக்காக மட்டுமே. ஆணவத்திற்காகவும் அகமகிழ்வுக்காகவும் இலக்குகொள்பவன் பழி சுமந்தாக வேண்டும்.”-காண்டீபம்-8
அறம் என்றால் என்ன என்று தெரியாமலா அறம் மீறுகின்றோம், அறம் என்றால் என்னவென்று
தெரிந்துக்கொண்டுதான் அறம் மீறுகின்றோம். அறம் என்னவென்று தெரியாமல் அறம்மீறினால்,
அறம் மீறப்பட்டதற்காக உள்ளும் புறமும் வருந்தி அந்த கணத்திலேயே அறத்தில் வந்து நிற்கின்றோம்.
அறம் என்னவென்று தெரிந்து, அறம் மீறும் போதுதான் அறம்மீறவில்லை என்று வாதாடுகின்றோம்.
வாதாடுவதோடு புதிய அறம் ஒன்றை நிலை நிறுத்த முனைகின்றோம். அறம்மீறிய ஒரு குற்றத்தோடு,
அறத்திற்கு எதிராக ஒரு அறத்தை உருவாக்கிய குற்றத்தையும் செய்கின்றோம்.
ஏன் அறம் மறக்கப்படுகிறது,மறைக்கப்படுகி றது? மறக்கப்பட்ட மறைக்கப்பட் அறத்தை தவிர்த்து ஏன் புதிய அறம் முன்வைக்கப்படுகிறது?
ஆணவத்தால், அகமகிழ்வால், பயத்தால் அறம்மீறப்படுகிறது. ஆணவம் ஆசை பயம் அறம்மீறியதை
ஓத்துக்கொள்ளாமல் மீண்டும் தனக்கு சாதகமாக புதிய ஒன்றை உருவாக்குகிறறோம் அதையே அறம்
என்று பட்டி மன்றம் நடத்துகின்றோம்.
சித்ரரதன் தேர், புரவி வில்.அம்பு கதாயுதம்,பாசக்கயிறு, அங்குசம் அனைத்தும்
வைத்து உள்ளான் அதனால் அவனுக்கு ஆணவம் இருக்கிறது. உலகம் சுற்ற சித்திரரதமும், இன்பம்
துய்க்க ஏழுகன்னியரும் இருக்கிறார்கள் அதனால் அவன் குன்றா அகமகிழ்வால் நிறைந்து இருக்கிறான்.
பீதம்பரம் மலருக்குள் இருக்கையில் சிற்றுயில் என்று நினைத்தவன். அவன் கந்தர்வபுரியை
கணையாழி என அணியும் பேருரு கொண்டு வருகையில், பூவுக்குள் இருக்கும் சிற்றுயிர் உடலோடு
அவனை சிந்திக்க சொல்லி பயத்தில் நிறைகிறான். ஆணவம், அகமகிழ்சி, பயம் என்று மூன்றும்கூடும்
இடத்தில் நின்று அறம்மறந்து அறம்மீறியதை அறியாமல் புதிய அறம் ஒன்றை வகுக்கிறான். அரசியல்வாதிகள்
எளிதாக அறம்மீறுவதற்கு காரணம் அவர்களுக்கு எளிதாக அனைத்தும் கிடைத்துவிடுவதால்தான்
என்று சித்ரரதன் பாத்திரம் உணர்த்துகிறது.
சித்ரரதன் வகுக்கும் புதிய அறம் என்ன?
“நான் தேர்வலன். இலக்கு நோக்கும் வீரன். இச்சிற்றுயிர்களை அழிப்பது எனக்கு பிழையல்ல, அறமே” என்றான் சித்ரரதன்.-காண்டீபம்-7
அறம் படித்தவன்தான் புதிய அறம் என்ற ஒன்றை, தனக்கான சுயநல அறம் ஒன்றைப்படைக்கிறான்.
தனது ஆணவத்திற்காக, தனது அகமகிழ்விற்காக, தனது சுயநலத்திற்காக, ஒரு புதிய கொள்கையைப்படைத்து
அதை அறம் என்கிறான். அறம் என்பது எவர்வேண்டும் என்றாலும் கூர்சீவும் முளைக்குச்சியா? தேய்க்க தேய்க்க கூர்மையாகவும்,
மறைக்க மறைக்க ஒளியாகவும் எழுக்கூடியது.
சித்ரரதன் தனது அறம்மீறிய செயலை மறைக்க இங்கு வைக்கும் வாதம் அவன் அறம்மீறவில்லை
என்பதை எத்தனை அழகாக காட்டுகின்றது. அனைத்து உயிருக்கும் ஆன்மா ஒன்று உடல்வேறு, யானைகள்
போகும்போது சிற்றுயில் அழிவது இயற்கை, பெரியமீன் சிறியமீனை உண்பது இயற்கை, வேட்டையாடி
விலங்கை உண்பவன் அதன் உடலில் உள்ள பல்லாயிரம் உயிரை என்னுவதில்லை என்று சொல்லும் இடத்தில்
அவன் அறம்மீறவில்லையே என்று நாமும் மயங்கித்தான்விடுகின்றோம். இதைத்தான் பாரதி இப்படிச்சொல்கிறான்.
’படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான். ’ அறம் படித்தவன்தான் அறத்தை வளைக்கிறான். சித்ரரதன் விழுந்ததுபோல்
குப்புற விழுகிறான்.
கந்தர்வபுரியில் இருந்து மண்ணில் விழுவதற்கு முன்பு சித்ரரதனுக்கு
மாப்பளிக்கப்படவில்லையா? கந்தர்வ கணத்தில் தனது சைத்ரிகம் காட்டுக்கள் நுழையும் அர்ஜுனன்
இடம் சித்ரரதன் எதிர்ப்பார்பது ஒரு பணிவை, கந்தர்வர் கணத்தை மறந்துவிட்டேன் அல்லது
அறியவில்லை என்று மன்னிப்பை வேண்டுதலை. இதே
மன்னிப்பை அன்று பீதம்பரனிடம் சித்தரரதன் கேட்டு இருந்தால் இந்த இழிநிலை வந்திருக்குமா?
அறம் மீறப்படும்போது அறம் எதிர்ப்பது பணிவையும். தவறை உணர்வதையும்தான். பணிவும், தவறை
உணரும் கணம் வந்துவிட்டால் ஆணவம் அழிந்துவிடுகிறது. அழியும் ஆணவம் நாம்மீறிய அறத்தை
நாமே கைக்கொள்ளும்படி கைக்கு எட்டிவிடுகிறது. .
அறம் மீறப்படும் முன்னே அறம் வாய்மூடிக்கொண்டு ஊமையாக இருக்கிறதா?
கண்மூடிக்கொண்டு நமக்கென்ன என்று துயில்கிறதா? இல்லை அறம் யார் மூலமாவது நமக்கு ஒரு
எச்சரிக்கை விடுகிறது. தனது சித்ரரத்தில் பறக்கும் சித்ரரதன் இடம் வழியல் கிடக்கும்
மலரை கும்பீநசி சுட்டிக்காட்டி “அதோ அழகிய மலர், தேரை ஒதுக்கு” என்கிறாள். சித்ரரதனோ
அது வாடிய மலர் என்கிறான். கும்பீநசிக்கு அழகிய மலரெனத்தெரிவது சித்ரரதனுக்கு வாடிய
மலரெனத்தெரிவது ஏன்? கும்பீநசி கந்தர்வ இதயத்தோடுப்பார்க்கிறாள்,
சித்ரரதன் மானிட இதயத்தோடு பார்க்கிறான். கந்தர்வபுரியில் இருந்துக்கொண்டு மண்ணின்
மானிடர் மனம்கொள்வதுதான் பெரும் அறம்மீறல். ஆட்சிக்கட்டிலில் மன்னராக, காவலராக, இருப்பவர்கள்
எளிதில் பிச்சைகாரர்களிலும் பிச்சைகாரர்கள்போல் ஆகி எளியவர்களை வதைப்பதுபோல் இது பெரும்
குற்றம். மறைமுகமாக அறம் தனது இருப்பை சுட்டும்போதுகூட அறம்மீறுபவன் அதை பொருட்படுத்தாமல்
கவனம் இன்மையால் வழிக்கிவிடுகிறான். சொல்பவள் பெண் என்ற இளக்காரம் எங்கெல்லாம் ஆணிடம்
எழுகின்றதோ அங்கெல்லாம் அறத்தின் எச்சரிக்கை மீறப்படுகிறது.
அறம் எச்சரிக்கை விட்டுக்கொண்டே இருக்கிறது, அறம் பணிவனை மீண்டும்
தழுவுகிறது. அறத்தை மறந்து தனக்கு சாதகமாய் ஒரு அறத்தை புனைபவனை அதளபாதளத்தில் தள்ளுகிறது.
அவன் இருந்த உயரத்தை மறந்துவிட வைக்கிறது. அவன் பெரும்பயண வாகதனத்தை சிதைத்து குறும்காட்டில்
சிறைவைத்துவிடுகிறது, எத்தனை மலர்க்காட்டில் இருந்தாலும் தனக்கான மலர்த்தேரை தானே செய்துக்ககொள்ள
முடியாமல் செய்கிறது. தனக்கு நிகர் இல்லா எதிரியுடன் யுத்தம்செய்யவைத்து அடிபணிய வைக்கிறது.
அனைத்தையும் இழக்கவைக்கிறது. ஆனாலும் அறம் கடைசி வாய்ப்பொன்றை அளிக்கிறது. ஒரு (நீலன்)நீலச்சுடர்
தரிசனத்தை வழங்கி விழியில் விளக்கேற்றுகிறது. அந்த வெளிச்சத்தில் தப்பித்துக்கொண்டு,
இடம் பொருள் காலம், வண்ணம் வடிவம் எதையும்
பார்க்காமல் ஒருவனுக்கு சீடனாகச்சொல்கிறது. அப்படி அவன் சீடனானால் அந்த குருவால் மீண்டும்
விண்ணேற வைக்கிறது. சீடன் ஆவதன்மூலமாகவே குருவாகவும் வைக்கிறது.
அன்புள்ள ஜெ காண்டீபம்-7ம் காண்டீபம்-8ம் அறம் நடத்தும் பட்டிமன்றம்.
பட்டி மன்றம் எல்லா திசையையும் ஆராய்ந்து எல்லா திசையும் சரியான திசைதான் என்று சொன்னாலும்,
மையத்தைவிட்டு விளகி திசையில் பயணிக்காமல், திசைகளை இணைக்கும் மையத்தின ஓளியாகிய ஞானத்தில்
கூடவைக்கிறது. கனவுதிரை அறங்களின் திசையை மையத்தில் குவிய வைத்து அறமாய் ஒளிர்கிறது.
“அறிவிழி ” அர்ஜுனனுக்கு மட்டும் இல்லை வாசகருக்கும் கிடைக்கிறது.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.