தத்துவச் சுழலிலிருந்து வெளிவந்தால் காதல் சுழல். தன்னை ஏற்றுக்கொள்ளும்வரை காத்திருப்பேன் என்ற பிடிவாதம் நாம் கதைகளில் திரைப்படங்களில் சில சமயம் நம் கண்ணெதிரில் நிகழ்கிறது. இதில் அபத்தம் ஒன்று இருக்கிறது இல்லையா? நான் ஒருவரை நேசிக்கிறேன் என்ற ஒரு காரணத்திற்காக அவர் திரும்ப என்னை நேசிக்கவேண்டும் என்பது எந்த வகையில் சரியானது? ஒருவகையில் அது ஒரு வறட்டு பிடிவாதம் மற்றும் உளவியல் வன்முறை அல்லவா? இதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்?
ஒருவர் உள்ளத்தில் உண்டாகும்
காதல் அவருடைய புத்தியினால் மட்டும் வந்த விழைவல்ல. உயிர்களை ஆண் பெண் என
இரு பிரிவாக்கிய ஆதி இயற்கை நம் இரத்தத்தின் அணுக்களில் எழுதிவைத்திருப்பது
அது. அதுவே காம நிறைவோடு முடிந்துவிடாமல் காலமெல்லாம் தொடர மனிதர்களில்
அணுக்களில் சற்று கூடுதலாக எழுதிவைத்திருக்கிறது. காதலில் நம் உடல், அறிவு,
மனம் எல்லாம் அந்த ஆதி இயற்கையின் கைப்பாவைகளென செயல் படுகின்றன, தன்
துணையினை கண்டு கொள்ளும் அறிவை அதுவே வழங்குகிறது.ஒருவர் கொள்ளும் காதல்
ஒரு தீ போல அவர் விரும்பும் எதிர்பாலரின் உள்ளத்தை தீண்டுகிறது, அத்தீயின்
ஆற்றல் குறிப்பிட்ட அளவிற்கு மேல் தீவிரமானவுடன் எதிர் பாலரின்
உள்ளத்திலும் பற்றி எரியத் தொடங்குகிறது. இவ்வாறாக இருவர் உள்ளத்தில்
இணைந்து எரியும் காதல் தீ அவ்விருவர் இணைந்து புரியும் யாகத்தின் தீயாக
எழுகிறது. அதில் அவிற் பாகமாக தம் சுயத்தில் ஒரு பகுதியை அவ்விருவரும்
அளிக்கின்றனர். இப்படி இணை இணையாக ஆண்பெண் சேர்ந்து செய்யும் யாகங்களின்
பலனாகக் கிடைத்ததே இந்த மனித சமுதாயம் தன் பண்பாடு, கலைகள் அறிவாற்றல்
போன்றவற்றின் வளர்ச்சி,
காதலில் அபத்தங்களை நம் அறிவு காணலாம்.
ஆனால் அந்த அபத்தம் நம் புத்தியின்
மனதின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு ஆதி இயற்கையின் கண்களில் வழி பார்த்தால்
மிகவும் அர்த்தமுள்ளது. பார்த்தன் பாதையில் பல பெண்கள் வருகிறார்கள்.
அவர்கள் அவனுக்கு வெறும் காமப் பாவைகளாக மட்டுமே இருக்கின்றனர். அவன் உடல்
மட்டுமே அவர்களை அறிகிறது. அவர்களின் உடல்களின் வனப்பே அவனை கவர்கிறது.
அவர்கள் உள்ளத்தின் காதல் தீ அவன் உள்ளத்தை பற்ற வைக்க முடியவில்லை.
பிறிதொன்றில்லாமை என ஆகும் பெருந்தீ காதலில் ஒருவர் அடையும் உச்சம்.
அந்த உச்ச நேசிப்பை, ஐவரை மகனாகக் கொண்ட தன் தாயிடம் அவன் காணத் தவித்து
ஏமாற்றமடைந்தவன். பாஞ்சாலி தன்னில் ஐந்தில் ஒரு பாகத்தை மட்டுமே அவனுக்கு
அளிக்க சம்மதித்தவள். அதிலும் அவன் ஏமாற்றம் அடைந்தவன், அதன் காரணமாக தான்
எதை தேடுகிறோம் எனத் தெரியாமலேயே கண்ணில் படும் பெண்களிடம் தேடிய வண்ணம்
இருக்கிறான். ஆனால் அவன் தேடுவது எதுவென அவன் அறியாதிருந்ததினால்
தேடப்படுவது கண்ணெதிரே காணும் போதும் அதை அறியத் தவறிவிடுகிறான். சிறுவனாக
இருக்கையில் மாலினி பிறிதொருவன் இல்லாத நேசத்தை கொண்டிருப்பதை அவன் உள்ளம்
உள்வாங்கவில்லை. சுபகை போன்ற பெண்கள் அவன் கூடலுக்கு பின் பிறிதொருவர்
கொள்ளாத பெருந்தவத்தை கொண்டதை அவன் அறியாதவனாக இருந்துவிடுகிறான்.
ஆனால் இன்று உலூபி அவன் கண்முன்னால் பிறிதொன்றுமில்லாமை என்ற பெரு
நெருப்பாக கொழுந்துவிட்டு எரிகிறாள். அந்த தீயை இம்முறை அவன்
கண்டுவிடுகிறான். அந்த தீ அவன் குளிர்ந்த உள்ளத்தை வெப்பமாக்கி
பற்றவைக்கிறது.
--
ஜெயமோகன்