ஒரு புதிய பெரிய சொகுசு கப்பல் தன் முதல் பயணத்தின் வழியில் ஒரு துறைமுகத்தில் நுழைகிறது. மக்கள் கூட்டம் அதைக் காண ஆர்வத்துடன் காத்திரூக்கிறது. உள்ளே நுழையும் கப்பலை பலநூறு பேர் புகைப்படம் எடுக்கின்றனர். அக்கப்பல் உரிமையாளர், அந்தக் கப்பல் தலைமை மாலுமி, தலைமை பொறியாளர், அக்கப்பலின் இசை விற்பன்னர்கள், தலைமை சமையல்காரர் அனைவரும் அறிமுகப்படுத்தப்பட்டு புகைப்படம் எடுக்கப்படுகின்றனர். அக்கப்பலில் வந்த பிரபலங்கள் புகைப்படம் எடுக்கப்படுகின்றனர். புகைப்பட பத்திரிக்கையாளர்கள் கப்பலில் அழைக்கப்பட்டு கப்பல் சுற்றிக் காட்டப்படுகிறது. கப்பலின் உள் தளங்கள் சிறப்பு அம்சங்கள் எல்லாம் அறிமுகப்படுத்தப்டுகின்றன. அவை புகைப்படங்களில் தவறவிடாமல் பதிவாக்கப்படுகின்றன. அலுவலகம் திரும்பிய புகைப்படக்காரர் நாளை பிரசுரிக்க வேண்டிய புகைப்படங்களை கவனத்துடன் பரிசீலிக்கிறார். ஒரு புகைப்படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. கப்பலின் அலங்கார நடுக் கூடத்தில் கப்பல் உரிமையாளர், தலைமை மாலுமி, மாற்றும் வெகு பிரபலமான கப்பல் பயணி ஆகியோர் உள்ள புகைப்படம். ஆனால் புகைப்படத்தின் ஓரத்தில் ஒரு துடைப்பானுடன் ஒரு சேவகன் நின்றுகொண்டிருப்பதும் பதிவாகியிருப்பது உறுத்தலாக தெரிகிறது. அதை கவனத்துடன் போட்டா ஷாப் துணைகொண்டு நீக்க வேண்டும் என நினைத்துக்கொள்கிறார். அவ்வாறு நீக்கியபிறகு அனைவரின் கவனத்தை கவரும், கப்பலை காண்பிக்கும், சிறந்த புகைப்படமாக அது இருக்கும் என்று அந்த புகைப்படக் கலைஞர் நினைத்துக்கொள்கிறார்.
அந்த நீக்கப்படும், பணியாளனின் முகம் எப்போதும் வெளியில் தெரிவதில்லை. அவர்கள் இருப்பு கட்டுரைகளில் வருவதில்லை. பெரும் புராணங்களில் அவர்களுக்கு எந்தப் பெயரும் இருப்பதில்லை. ஒரு பெரிய மாளிகையில் அவர்கள் ஒரு நிழலைப்போல யார் கவனத்திலும் வராமல் நடமாடுகிறார்கள். ஒரு மாளிகையின் சுத்தத்தில், பொருட்கள் நேர்த்தியாக அடுக்கிவைத்தலில், செல்வக் குழந்தைகளின் உணவூட்டலில், சீரான ஆடை அணிவிப்பில், சமையல் காய்கறிகளின் அளவான நறுக்குதல்களில், உலோக காட்சிப்பொருட்களின் பளபளப்பில், வாகனங்களின் பாகங்கள் சரியாக இணைக்கப்பட்டிருப்பதில், நாடு அன்னியர்களால் தாக்கப்படாமலிருக்கும் பாதுகாப்பில் என அனைத்திலும் இவர்கள் முகங்கள் கவனமாக நீக்கப்பட்டிருக்கும். இவற்றில் ஏதாவது சீர்குலைவு ஏற்பட்டால் மட்டும் அவர்கள் அந்தந்த துறைத்தலைவர்களின் கவனத்தில் வந்து அதட்டப்படுவார்கள். மற்றபடி சமுதாயத்திற்கு இவர்கள் முகமற்றவர்கள். அந்த முகமற்றவர்களின் அர்ப்பணிப்பு விசுவாசம் என்பது வேறெந்த அர்ப்பணிப்பிற்கும் விசுவாசத்திற்கும் குறைவானதல்ல. ஆனாலும் அவர்களுக்கு இதற்கென தன் குறைந்த ஊதியத்தை தவிர வேறு வெகுமதி எதுவும் கிடைப்பதில்லை.
இலக்கியத்தில் இவர்கள் எழுதப்பட்டிருக்கிறார்கள் நான் இல்லையென்று சொல்லவில்லை. அது பெரும்பாலும் அவர்களைப்பற்றிய இலக்கியமாகும். ஆனால் பெரும் புராணங்களில், வராலாற்று இலக்கியங்களில்,பல்லாயிரம் வரிகளில் இவர்களுக்கென ஒரு வரிகூட முழுமையாக கொடுக்கப்பட்டதில்லை.
ஆனால் வெண்முரசில், சொல்லப்படவேண்டிய பல நூறு பெரிய கதாபாத்திரங்கள், பல நூறு முக்கிய நிகழ்வுகள் இருக்கையிலும், மாலினி, சுபகை, முஷ்ணை, என பல பணியாளர்கள் தொடர்ச்சியாக கவனப்படுத்தப்படுகிறார்கள். கடந்துசெல்லும் ஒவ்வொரு காவலனையும் வெண்முரசு கவனத்தில் கொள்கிறது. அவர்களின் முகங்களுக்கு ஒளிகொடுத்து பதியப்படுகின்றன. இந்த கவனப்படுத்தலில் வெண்முரசின் பொங்கிப் பெருகும் கருணையும் விரிந்து பரவும் அன்பையும் நான் காண்கிறேன். அந்த அன்பும் கருணையும் என் சிறிய உள்ளத்திலும் நிறைய கடவுள் அருள வேண்டும்.
தண்டபாணிதுரைவேல்