Monday, September 21, 2015

கவிதையின் கனம்.



அன்புள்ள  திரு,ஜெ வணக்கம்.

ஆயிரம் இதழ் தாமரை கடிதத்தை கீழ்கண்டவாறு தொடங்கி இருந்தேன்.

“அன்புள்ள திரு.ஜெ வணக்கம், இந்த கதையை நீங்கள் எழுதுகின்றீர்காளா? அல்லது தமிழ் அன்னை எழுதுகின்றாளா? நீங்கள் எழுதுகின்றீர் என்றால் அது தழிழ் அன்னைக்கு நீங்கள் செய்யும் வைரக்கிரீடம், தமிழ் அன்னை எழுதுகின்றாள் என்றால் அது அவள் உங்களுக்கு செய்யும் வைரகிரீடம். வைரகிரீடம் செய்வது என்னவோ நீங்கள் இருவரும், அதை அணிந்து வடிவும் வண்ணமும் கொள்வதோ நாங்கள். வெண்முரசில் எத்தனையோ அத்தியாயங்கள் இதுபோல் உச்சத்தை தொட்டது இல்லை என்று நினைக்க வைத்திருக்கிறது ஆனால் அதை எல்லாம் தாண்டி காண்டீபம்-6 பெரும் உச்சம். அதற்கு ஈடு இணையே இல்லை என்று நினைக்கவைத்துவிட்டது. அற்புதம்..அற்புதம். அற்புதம்”
கடிதங்தை உங்களுக்கு அனுப்பும்போது இதை வெட்டி விட்டு அனுப்பினேன். வெட்டிவிட்டு அனுப்பியதால் மனம் அமைதி அடையவில்லை, அப்படியே அனுப்பவும் மனம் அனுமதிக்கவில்லை. ஏன்?

எனது இந்த பாராட்டுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் நீங்கள். உங்களை சரியாக எனக்கு புகழதெரியவில்லை என்பதால்தான் அதை வெட்டினேன். வெறும் சொற்களால் உங்களை புகழ்வது பிடிக்கவில்லை, ஒருகவிதையால் புகழவேண்டும் அல்லது அந்த சொல் கவிதையாக ஆகவேண்டும். என் மனதிடம் நானே சொல்லிக்கொண்டேன். மனமோ உனக்கு என்ன வருகிறதோ அதை செய் என்கிறது. அதை நான் எழுதிவிட்டேன். இது உங்களுக்கு பாராட்டா வெறும் சொற்களா என்பது எனக்கு தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் அன்னைத்தமிழ் அந்த பாராட்டை உங்களுக்கு தருவாள். அவள் குன்றா அருளிளமை வாழ்க! அவள் ஜெயமோகன் என்றும் தான்பிறந்து தன்னை அலங்கரித்துக்கொள்ளும் ஞானாற்றல் படைத்தவள்.

காண்டீபம்-6க்கு வருகின்றேன். நீங்கள் வெண்முரசின் ஒவ்வொரு நாள் பதிவையும் கவிதை என எழுதிச்செல்கின்றீர்கள். இ்ந்த காண்டீபம்-6 அழியா அற்புத ஞானக்கவிதை. ஒரு அரசமரத்தை விதைக்குள் வைப்பது பெரும் படைப்பாளனின் நித்திய கடமை அதை அவன் விளையாட்டு எனசெய்து  செல்கிறான். பல அரசமரத்தை ஒன்றும் இல்லாமையில் வைக்கும் அவனின் பெரும்விளையாடலை என்னும்போது விதைக்குள் வைப்பது எல்லாம் முடிவிலிக்கு முன்னால் பூஜிய மதிப்புக்கூட இல்லை. இந்த அத்தியாயம் வெற்றிடத்தில் உள்ள அருவவிருட்சம் என்றால் மற்றவை அனைத்தும் விதைக்குள் விருட்சம். காண்டீபம்-6த்தாண்டி மனம் செல்ல ஏனோ நினைக்கவில்லை அங்கேயே மீண்டும் மீண்டும் சுழன்று நிற்கிறது. காண்டீபம்-7 இன்னும் படிக்கவில்லை, படித்தால் இந்த கடித்தின் பொருள் வடிவம் மாறிவிடும். இதை எழுதிய பின்பே அதைப்படிக்கவேண்டும்.

நீலன் என்பவன் யார்? தொடர்வதற்கு முன்பு. மனிதன் என்பவன் யார்? கந்தர்வன் என்பவன் யார்? என்று  பார்த்துவிடுவது நல்லது. ஒரு பந்தின்  இருஅரைக்கோலங்கள். மனிதனும் கந்தர்வனும். ஒரு மெல்லிய கோட்டைத்தாண்டி உயரே சென்றால் கந்தர்வன் என உயர்ந்துவிடலாம்.  அதே மெல்லிய கோட்டைத்தாண்டி கீழே வந்தால் மனிதனென தாழ்ந்தோம். அது என்ன மெல்லியக்கோடு நூறு ஆண்டுக்கு ஒரு முறையேனும் ஆயிரம் இதழ்கொண்ட ஹிரண்யகத்தாமரைத்தேனை உண்ணுதலும், உண்ணாமல் விடுதலும்தான். ஆயிரம் இதழ்தாமரைத்தேனை உண்பவன் உடல் என்பதை இழந்து ஒளியென ஆகி நீலசுனையில் கலக்கிறான். ஆயிரம் இதழ்தாமரைத்தேனை உண்ணாததால் பிறபிப்பெருங்கடலில் விழுந்து, ஒளியிழந்து உடலென ஆகி கல்லென ஆகின்றான்.

யார் எல்லாம் கந்தர்வர்கள் என்ற வினா எழும்போது குழந்தைகள், சூதர்கள், ஞானிகள் என்று சொல்லிவிட்டு அப்படியே நழுவி விடாமல் பட்டாம்பூச்சி, தட்டாம்பூச்சி, சிட்டு என்று உயிர் குலம் முழுவதிலும் உள்ள கந்தர்வர்களைக்காட்டிச்செல்கிறது. இந்த சிற்று உயிர்களை காட்டும்போதே மண்ணை, நீரை, காற்றை, ஒளியை, விண்ணைக்காட்டி தாவரத்தை, பூவை என்று உலகம் முழுவதையும் ஒளியாக்கி, இசையாக்கி இழுத்துக்கொள்கிறது. 

யாரெல்லாம் மனிதன் என்று சொல்லவரும்போது மண்ணை, மரத்தை, கல்லை, மாளிகையை, தோழனை, தோழியை உறவென மயங்கி, , தன்னை அவர்களோ, அவர்களை தானோ கைப்பறி தூக்கிவிட முடியாது என்று உணர்ந்து மண்ணில் கூழாங்கல்லென புதைபவன் என அறைகிறது.

அருணகிரி நாதசுவாமிகள் எம்பெருமான் முருகனிடம் உனது சித்திர ஞானபாதத்தை எனக்கு அருளவேண்டும் என்று கேட்கும்போது ஞானமும் முத்தமிழும் கொண்டாடும் பாதம் என்கிறார்.  அந்த பாதத்தை விட்டு மண்ணுக்கு வந்த நான் படும்பாடு ஓசித்தாலே சீச்சி சீச்சி என்கிறார்.

எத்தனை கோடி கோடி விட்டுடல் ஓடி யாடி
     யெத்தனை கோடி போனது ...... அளவேதோ
இப்படி மோக போகம் இப்படி யாகி யாகி
     யிப்படி யாவ தேது ...... இனிமேல் ஓ

(ஒ)சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
     சிக்கினில் ஆயு மாயும் ...... அடியேனைச்
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
     சித்திர ஞான பாதம் ...... அருள்வாயே

நித்தமும் ஓது வார்கள் சித்தமெ வீட தாக
     நிர்த்தமது ஆடு மாறு ...... முகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு
     நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா

பைத்தலை நீடும் ஆயி ரத்தலை மீது பீறு
     பத்திர பாத நீல ...... மயில்வீரா
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
     
பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே-திருப்புகழ் (வைத்தீஸ்வரன் கோயில்)
http://www.kaumaram.com/thiru/nnt0780_u.html -நன்றி கௌமாரம். 

மனிதர்கள் உருவம் உடையவர்கள், கந்தர்வர்கள் உருவம் அற்றவர்கள், கந்தர்வர்கள் உருவத்தில் இருந்தாலும் உடல் மறந்தவர்கள் ஒளியென ஆவனவர்கள். அந்த கணத்தில் அவர்கள் அந்த கணம் உடல் அனைத்தையும் இழந்தவர்கள். மனிதர்கள் ஒளியில் இருந்தாலும் உடலென ஆனவர்கள், அந்த அந்த கணத்தில் நிற்பவர்கள்.. இ்ப்ப நீலன் என்பவன் யார்? என்று பார்த்தால் நலமாக இருக்கும்.

அரு உருவாக இருப்பவரும், பாதி பச்சைநிறம் உடைய உடலை உடையவரும், திரிசூலத்தை ஏந்தியவரும் ஆகிய  சிவபெருமான் மகனாகவும், ஆயிரம் தலையுடைய ஆதிசேடன் தலையில் தன் கால்உகிரால் கீறும் நீலமயில்மீது வரும் வீரனாகவும், புள்ளிருக்குவேளுரி்ல் மும்மூர்த்திகள் போற்றும் பெருமாளாகவும் இருக்கும் முருகனை அருணகிரி காட்டும்போது எத்தனை அழகா வடிவு நம் கண்முன்னே வந்து நிற்கிறது. முருகன் உருவம் உடையவன் மட்டும்தானா?

வெண்முரசில் தேவகி, வசுதேவர், யசோதை, நந்தகோபன் மைந்தன் என்றும், ராதையின் காதலன் என்றும், பலராமர், சுபத்திரை சகோதரன் என்றும், கம்சன், சிசுபாலன் எதிரி என்றும், அர்ஜுனன் நண்பன் என்றும், சாத்யகி இறைவன் என்றும், ருக்மணி, சத்தியபாமா என்றுத்தொடங்கி காளந்திவரை எட்டு மனைவியர் கணவன் என்றும் வந்து நிற்கும் கண்ணன் எத்தனை எத்தனை உருவம் காட்டுகின்றான். அவன் உடல் கொண்ட  கந்தர்வனா?   ஒளிக்கொண்ட மனிதனா? எல்லாமுமா? எதுவும் இல்லையா? ஹிண்யபத்தின் கந்தர்வபுரியின் உள்ள நீலச்சுனையை பார்க்கும்போது அவன் எல்லாமுமாக இருக்கிறான். எதுவும் இ்ல்லாமல் ஆடியாக மட்டும் இருக்கிறான். அந்த நீலசுனையில் முகம் நோக்குபவர்கள் நீலசுனையாகவே ஆகிறார்கள். நோக்குபவன், நோக்கப்படும் பொருள் என்று அங்கு ஒன்று இல்லை.

கனிகம்,தாம்ரகம், ஹரிதகம், நீலகம், ஷீரவலயம், மணிபுஷ்பம், ஹிரண்யகம். என்னும் ஏழுவண்ண முகிலை, பன்னிரண்டு கோட்டைகளை, , பன்னிரண்டாயிரம் மாளிகைகளை, நூற்றியெட்டு சுழல்படிகள் கடந்து காணக்கிடைக்கும் அந்த நீலச்சுனை. தன்னை முடிவிலி பெருவெளியாகக்காட்டி தன்னை காண்பனையும் முடிவிலி பெருவெளி என உணரவைக்கிறது.

அது இருக்குன்னா இருக்கு, இல்லன்னா இல்ல அவ்வளவுதான். காரணம் // அதன் நீரின் ஒவ்வொரு அணுவும் அவ்வாறு சென்று நோக்கிய பல்லாயிரம்கோடி கந்தர்வர்களால் ஆனது. அவர்கள் பிறகெப்போதோ ஒரு முறை அத்தடாகத்திலிருந்து நீராவியென எழுந்து வானில் அலைந்து துளித்துச் சொட்டி மீண்டும் அந்நகரத் தெருக்களிலேயே விழுந்து உருக்கொண்டு எழ முடியும். இந்த முடிவிலா சுழற்சியில் காலத்தை உணர்கிறார்கள் அவர்கள்-காண்டீபம்-6//

ஓஞ்சரவணபவ உருவே அருவே என்கிறார் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்.

நன்றி ஜெ. ஒருமானிடன் எப்படி இங்கு வந்தான் எப்படி முடிவிலியாக போகின்றான்  என்று மிக அழகான கவிதையை எளிமையாக விளக்கிக்காட்டுகின்றீர்கள். எளிய கவிதைதான் ஆனால் எத்தனை கனமான கவிதை.  

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.